வக்ரகால அதிசயம்

 

thumb_IMG_4951_1024

கிமு 323ஆம் வருஷம் ஜூன் மாதம் பத்தோ பதினொன்றோ தேதியன்று கிரேக்கமாதேசத்தில் அலெக்சாண்டர் காலமானபோது இயேசுநாதர் பிறந்திருக்கவில்லை. ஆனால் ஆசியாக் கண்டத்தில் பல்லவபுர நகராட்சிக்கு உட்பட்ட பிராந்தியமான குரோம்பேட்டை தன் பெயரை மறைத்துக்கொண்டு அப்போதும் புவியில் இருக்கத்தான் செய்தது.

அலெக்சாண்டர் காலமான காலத்தில் குரோம்பேட்டை என்பது ஒரு பெரிய வனம். ராமர் இலங்கைக்குப் போகிற வழியில் இந்த வனத்தில் ஓரிரு தினங்கள் தங்கி சிரம பரிகாரம் செய்துகொண்டதற்குக் வால்மீகி ராமாயணத்தில் இல்லாவிடினும் குரோம்பேட்டை பிஜேபியினரிடம் சரித்திர ஆதாரங்கள் உண்டு. எனவே அலெக்சாண்டருக்கு முற்பட்ட ராமர் காலம்தொட்டு கல்யாண் சிங்குக்கு முற்பட்ட பிஜேபி காலம் வரை குரோம்பேட்டையானது ஒரு வனமாகவே இருந்து வந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.

பிறகு ராஜிவ் காந்தி காலமான காலத்தில் அது தன் முகத்தை மாற்றிக்கொண்டு காங்கிரீட் வனமாக புதுப்பொலிவு பெற்றது. அசோக சக்கரவர்த்தியின் வழித்தோன்றல்கள் குரோம்பேட்டை வழியே செல்லும் சாலைக்கு ஜிஎஸ்டி சாலை என்று பேரிட்டு தாரெல்லாம் போட்டார்கள். (ஆனால் சாலையின் இருபுறமும் மரங்கள் நட மறந்துவிட்டார்கள்) முற்றிலும் செம்மண் சாலைகளாலான குரோம்பேட்டையின் நெற்றியில் கட்டப்பட்ட கறுப்பு ரிப்பன் மாதிரி அந்தத் தார்ச்சாலை சிறந்து விளங்கியது.

அத்தார்ச்சாலை தந்த கிளுகிளுப்பில் பேட்டையில் ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களும் தொழிற்கேந்திரங்களும் உற்பத்தியாயின. மக்கள் சாரிசாரியாகச் சென்னை உள்ளிட்ட அயல் தேசங்களிலிருந்து இடம் பெயர ஆரம்பித்தார்கள். சதுர அடி 340 ரூபாய்க்கு விற்ற நிலமானது இன்றைக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு மேலே ஏறி நிற்கிறது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் பேட்டையின் நிரந்தரப் பிரச்னையாகச் சாலைகளே இன்றுவரை இருந்து வருவது ஒரு பெரும் சரித்திரச் சோகம்.

மேலே கண்ட ஜிஎஸ்டி சாலை நீங்கலாக பேட்டைக்குள் நீங்கள் எங்கு சென்றாலும் ஒழுங்கான சாலை ஒன்றைக் காண இயலாது. ஒன்று, குண்டும் குழியுமாக இருக்கும். அல்லது குழியும் குழியுமாக இருக்கும். இன்னொரு அல்லது, குண்டும் குண்டுமாக இருக்கும். மழை நாள்களில் மட்டுமல்ல; வெயில் நாள்களில்கூட சமயத்தில் சாலைகளும் சாக்கடைகளும் ஒன்று சேர்ந்துவிடும். அப்போதெல்லாம் நடைதாரிகள், வாகனதாரிகள்பாடு ஒரே கிளுகிளுப்புத்தான். கிழடு கட்டைகள்கூட சாலையில் குத்தாட்டம் போட்டுக்கொண்டேதான் போவார்கள்.

நரசிம்ம வர்மப் பல்லவருக்கு இருபத்தியேழாந்தலைமுறைப் பங்காளியான அடைக்கலப் பல்லவ வர்மர் காலம் தொட்டுப் பல்லவபுர நகராட்சிக்கு இது தொடர்பாகப் பல்வேறு சாரார் பல்வேறு விதப் புகார் மனுக்களைக் கொடுத்திருந்தாலும் பேட்டைச் சாலைகள் சீரான சரித்திரமில்லை. தேர்தல் காலங்களில்கூட சாலைப் பிரச்னை நீங்கலான வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்படும். பன்றி ஒழிப்பு, தெருநாயொழிப்பு, தெருவிளக்கு ஒழிப்பு, குடிநீர் இணைப்பு ஒழிப்பு போன்ற அத்தகு வாக்குறுதிகள் காலக்கிரமத்தில் நிறைவேற்றி வைக்கவும்படுமேயொழிய பேட்டையானது சாலைச்சாபம் கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது.

இது சனி வக்ரகாலம். தேசத்தில் ஏகப்பட்ட துர்மரணங்களும் வியாதிப் பிடுங்கல்களும் வியாபார நஷ்டங்களும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. யாரைக் கேட்டாலும் ஒரே புலம்பல்பாட்டு. ஒன்றும் சரியில்லை என்று ஒவ்வொரு சாராரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையிலே குரோம்பேட்டையில் மட்டும் இன்று ஓர் அற்புதம் நிகழ்ந்துள்ளது.

ஆம். நியூ காலனி 13வது குறுக்குத் தெருவுக்குத் தார்ச்சாலை போட்டுவிட்டார்கள். பல்லவர்களின் பெருமையைப் பறையறைந்து சாற்றும் தருணம் வந்தேவிட்டது. இது எப்படி சாத்தியம்! இது எப்படி சாத்தியம்! என்று பிராந்தியம் முழுதும் இன்று வீதியில்கூடி வியந்துகொண்டிருக்கிறது. பேட்டையின் பூர்வகுடி மக்கள் பலவாறு கணக்குப் போட்டுப் பார்த்து, இச்சம்பவமானது சரியாகப் பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்திருப்பதாக அறுதியிட்டுச் சொல்கிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட இலட்சங்களின் செலவு மதிப்பீட்டில் இச்சாலை உருவாகியிருப்பதாகப் பல்லவபுர நகராட்சிச் சிப்பாய்கள் சொல்கிறார்கள்.

இதனாலெல்லாம் 12வது, 11வது, 10வது தொடங்கி 1வது வரையிலும் பிறகு 13வது, 14வது தொடங்கி 16வது வரையிலுமான குறுக்கு நெடுக்குத் தெருக்களிலும் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் சாலை போடப்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. 13 என்பது ஒரு ராசியில்லாத எண் என்கிற மாயையை உடைக்கும்பொருட்டு நகராட்சி நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றே இதனைக் கொள்ளவேண்டும்.

இக்காரணம் உங்களுக்கு உவப்பானதாக இல்லாவிடின், இச்சாலையில்தான் இதனை எழுதிக்கொண்டிருக்கும் உத்தமோத்தமன் குடியிருக்கிறான் என்பதை முன்னிட்டேனும் பல்லவர்களைப் பாராட்டக் கடமைப்பட்டுவிடுகிறீர்கள்.

 

Share

1 comment

  • UngaL vaayai adaiththu vittarkaL, ini matra saalaikaL ekkaedu kettaal enna! VIP anthasthu kidaiththathaRku vaazththkkaL!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி