
பா. ராகவன் எழுதியிருக்கும் “நிலமெல்லாம் ரத்தம்” எனும் நூல், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரம் குறித்து தமிழில் வந்திருக்கும் மிக முக்கியமான நூல். இப்போது உச்சத்துக்கு வந்திருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீனிய விவகாரம் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக படிக்கையில் இந்நூல் ஜெயமோகன் தளத்தின் வழியாக என் கவனத்துக்கு வந்தது.
பா. ராகவனின் மொழி நடை குறித்து சொல்ல வேண்டியதில்லை. எல்லா வாசகர்களுக்குமான புத்தகம் என்று கறாராக வகுத்துக் கொண்டு, எளிமையான நடையில் நிறைய விஷயங்களை அழுத்தமாக சொல்லிச் செல்கிறார். கிறிஸ்துவத்தின் தோற்றுவாய், இஸ்லாம் எங்ஙனம் முளைத்தெழுந்தது, பாலஸ்தீனியர்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள், யூதர்கள் எப்படி கிருஸ்துவர்களால் மேற்கத்திய நாடுகளால் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகிக்கொண்டே இருந்தார்கள் என்று விரிவாகச் சொல்லும் அதே நேரத்தில், யூதர்கள் ஏன் யாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கமுடியவில்லை என்றும் ஆராய்கிறார். இந்நூல் உருவாக்கத்தில் அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
யூதர்கள் என்றதுமே நமக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வருகிறார். ஆனால் அதற்கு முன்பே யூதர்கள் எப்படி பந்தாடப்பட்டார்கள் என்று சொல்கிறது இந்த நூல். இஸ்லாமியர்கள் குறித்த கனிவான பார்வையை வரலாற்றுப் பூர்வமாக முன்வைப்பது இந்த நூலின் சிறப்பு என்பது எனது கருத்து. ஒரு பத்திரிகையில் தொடராக வந்தது நூலாக்கம் பெற்றிருக்கிறது.
என்னைப் போன்ற வாசகனுக்கு – அதாவது இந்த விவகாரம் குறித்து ஓரளவு பரிச்சயம் உள்ள வாசகனுக்கு, நறுக்குத் தெறித்தாற்போல் கோடிட்டு காட்டினால் போதும் என்று கருதுகிற வாசகனுக்கு – நூல் கொஞ்சம் நீள்வதான தோற்றம் வருவதை மட்டும் வேண்டுமானால் விமர்சனமாகச் சொல்லலாம். ஆனால் அந்த விஸ்தாரம்தான் இந்தப் பிரதியை வெற்றிகரமானதாக, எல்லாரும் அணுகக் கூடிய ஒன்றாக மாற்றியிருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.