மழையால் புத்தகங்கள் பாழானது குறித்து எஸ். ராமகிருஷ்ணன் எழுதியதைப் படித்தேன். அந்த வலி புரிய வேண்டுமானால் அவர் வந்த வழி தெரிந்திருக்க வேண்டும்.
எஸ்ரா தொடக்கம் முதலே எந்தக் குழுவுடனும் இணையாதவர். தனக்கென எந்தக் குழுவையும் வைத்துக்கொள்ளாதவர். அதாவது, அவருக்கு இதுவரை கிடைத்த அனைத்தும் அவரது சொந்த முயற்சியால் மட்டுமே கிடைத்தவை. தன்னையும் தன் எழுத்தையும் மட்டுமே நம்பித் தமிழிலும் பிழைத்திருக்க முடியும் என்று நிரூபித்த மிகச் சொற்ப நபர்களுள் அவர் ஒருவர்.
ஓர் எழுத்தாளர் பதிப்பகம் தொடங்குவது என்பது இங்கே இரண்டு காரணங்களால் நடக்கிறது. தன் எழுத்து மிக நன்றாக விற்கிறது, லாபம் தன்னுடையதாகவே இருக்கட்டும் என்று திட்டமிட்டுத் தொடங்குவோர் ஒரு சாரார். இவர்கள் பெரும்பாலும் பெண்ணெழுத்தாளர்கள். மாத நாவல் மற்றும் சமையல் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.
தன் எழுத்து பரவலாகக் கவனிக்கப்படுகிறது, ஓரளவு விற்கவும் செய்கிறது; ஆனாலும் பதிப்பகத்தாரால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறோம் என்கிற மன அழுத்தம் தரும் உள்ளார்ந்த கோபத்தினால் கடன் வாங்கியாவது தனது புத்தகங்களைத் தானே வெளியிட்டுக்கொள்ளோர் இன்னொரு சாரார். எஸ்.ரா இந்த வழியில் வந்தவர்.
பெரிய பொருளாதாரப் பின்புலம் இல்லாதவர் அவர். எழுத்து ஒன்றுதான் வருமானத்துக்கு வழி. அதை நம்பித்தான் ‘தேசாந்திரி’ பதிப்பகத்தைத் தொடங்கினார். அது நல்ல வரவேற்பைப் பெற்றதும் புத்தகங்கள் நன்றாக விற்பனையானதும் முழுக்க முழுக்க அவரது எழுத்து வாசகர்களுக்குப் பிடித்திருந்ததால் நேர்ந்தவை மட்டுமே. வேறெந்தக் குறுக்குச் சாலுக்கும் வழியற்ற பாதை இது.
இதுவரை சொன்னதில்லை. இப்போது சொல்லத் தோன்றுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் மிகக் கடுமையான விரக்தி, தோல்வி மனப்பான்மை, ஏமாற்றப்பட்டுவிட்ட உணர்வு அனைத்தும் ஒருசேரத் தாக்கிச் சில மாதங்கள் நடைப்பிணமாகச் சுற்றிக்கொண்டிருந்தேன். எல்லாம் பணத்தால் வந்த ஏமாற்றங்கள்தாம். நான் வேலை பார்த்த சில தொலைக்காட்சி நிறுவனங்கள், என் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகங்கள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல ஒரே சமயத்தில் ஏமாற்றின. வரவேண்டிய மொத்த பாக்கி குறைந்தது பதிநான்கு லட்சம் ரூபாய். ஆனால் வரவே வராது என்று தெரிந்தது.
வழக்குத் தொடரலாம். பொதுவெளியில் எழுதி பெயரைக் கெடுக்கலாம். யாரையாவது கூப்பிட்டுப் பஞ்சாயத்து வைக்கலாம். யூனியனில் புகார் செய்யலாம். ஆனால் ஏழை சொல்லும் எழுத்தாளன் சொல்லும் இங்கே வென்றதாக வரலாறு இல்லை. தவிர, வழக்கு விவகாரம் என்று போய்விட்டால் வேலை கெடும். எழுத்து கெட்டுப் போனால் என்னிடம் வேறெதுவும் இல்லை. ஒரு மிகப்பெரிய சைபராக மட்டுமே மிஞ்சுவேன். அதையும் யோசித்துத்தான் அமைதியாக இருந்தேன்.
எனக்குத் தரவேண்டிய மிச்சங்களைத் தந்துவிடச் சொல்லி அனைவருக்கும் காட்டமாக மின்னஞ்சல் மட்டும் அனுப்பிவிட்டு ஒரு முடிவுக்கு வந்தேன். சொந்தமாக ஒரு பதிப்பகம் தொடங்கிவிடலாம். என் மனைவியும் அதற்குச் சம்மதம் சொன்னார்.
சுமார் எழுபது புத்தகங்களைப் பதிப்பிக்க முதலீட்டுக்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதைக் காட்டிலும் முக்கியமாக அன்றைய தேதியில் எனக்கு மிக அவசரமாக ஒரு பெருந்தொகை தேவைப்பட்டது. சில சொந்த நெருக்கடிகள். வாழ்நாளில் யாரிடமும் கடன் கேட்டு எனக்குப் பழக்கமில்லை. எந்தக் கட்டத்திலும் பத்து காசு கூடக் கடன் வாங்காமல்தான் இக்கணம் வரை வாழ்ந்து வந்திருக்கிறேன். அந்த உறுதித்தன்மை நொறுங்கிவிடுமோ என்று அச்சமாக இருந்தது.
அந்தச் சமயத்தில்தான் எனக்கு முன்பின் தெரியாத ஜீரோ டிகிரி ராம்ஜி ஒருநாள் போன் செய்துவிட்டு நேரில் வந்தார். உங்கள் புத்தகங்களை நாங்கள் பிரசுரிக்க விரும்புகிறோம் என்று சொன்னார். சொன்னதோடல்லாமல், முன் பணமும் கொடுத்துப் புத்தகங்களை வாங்கிச் சென்றார். திரைப்படம் போலத் தோன்றலாம். ஆனால் அதுதான் நடந்தது. அன்று ஒரே நாளில் எனக்கு இருந்த பணப் பிரச்னையும் தீர்ந்து, என் புத்தகங்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடம் கிடைத்தது.
அன்றைக்கு அவர் வராதிருந்திருந்தால், ஒருவேளை இன்றைக்கு நானும் ஒரு பதிப்பகம் தொடங்கியிருக்கக் கூடும். வாழ்க்கை வேறு பாதையில் இயங்கத் தொடங்கியிருக்கும். ஒருவேளை வென்றிருக்கலாம். பெரும்பாலும் அவதியுற்றிருக்கலாம். யார் கண்டது? இதே மழை என் வாழ்விலும் விளையாடியிருக்கலாம். மழை மட்டுமா? பதிப்பகம் தொடங்கும் எழுத்தாளர்களின் வாழ்வில் விளையாட அலகிலா விளையாட்டுடைய ஆயிரக்கணக்கானோர் நமது சமூகத்தில் உண்டு. எழுத்துக்கு வெளியே வாழும் யாருக்கும் இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும் take care bro என்று ஒரு கமெண்ட் போட்டுவிட்டுக் கடந்துவிடுவார்கள்.
இன்று காலை முதல் மழையில் பாழான எஸ்ராவின் புத்தகங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவரோடு எனக்குப் பெரிய நட்போ, நெருக்கமோ கிடையாது. அவரென்ன. எந்த எழுத்தாளருடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு கிடையாது. ஆனால் இந்த வலியை உணர முடியும். ஒரு மனிதன் மடிந்து சரிவதைக் காண்பதும் ஒரு பெட்டிப் புத்தகங்கள் நீரில் நனைந்து நாசமாவதைக் காண்பதும் ஒன்றே எனக் கருத முடிபவர்களுக்கு மட்டுமே இது புரியும்.
இந்தத் துயரம் முற்றிலும் விலகி அவர் மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். இக்கணம் நாம் செய்யக் கூடியது வேறென்னவென்று தெரியவில்லை.