கதை

தகவல் பிழை

ஒரு ஊரில் ஒரு தகவல் பிழை இருந்தது. பிறக்கும்போதே அது பிழைபட்டு இருந்ததால் அதனை மறைக்க அதன் பெற்றோர் அது ஓர் அற்புதம் என்றும் வரம் வாங்கிப் பெற்றது என்றும் சொல்லிப் பரப்பிவிட்டார்கள். வயது ஆக ஆக அத்தகவல் பிழையின் தோற்றத்தைக் குறித்த வதந்திகளும் சிலாகிப்புகளும் ஊரெங்கும் பரவத் தொடங்கின. காரணம், அதன் பெற்றோர் அதனை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதே இல்லை. பொத்திப் பொத்தி வளர்க்கும் தங்கள் குழந்தையைக் குறித்த தகவல்களை மட்டும் அவ்வப்போது வெளியே சொல்வார்கள்.

‘தெரியுமா உனக்கு? எங்கள் தகவல் பிழையை நடிக்க வரும்படிக் கேட்டு இதுவரை நான்கு இயக்குநர்கள் வந்துவிட்டார்கள்.’

‘அப்படியா?’

‘அதிலெல்லாம் விருப்பமே இல்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.’

‘என்ன செய்யப் போகிறாளாம்?’

‘தெரியவில்லை. இப்போது யுஎஸ் போயிருக்கிறாள். ஆய்வு முடித்துத் திரும்பிய பிறகுதான் அதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.’

பிறகொரு சமயம் தகவல் பிழைதான் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவன் என்று சொன்னார்கள்.

‘பிரதமர் நேரில் சந்திக்க அழைத்தும் எங்கள் மகன் போக மறுத்துவிட்டான். பேப்பரில் போட்டோ வந்துவிடக்கூடாது என்பதில் அவனுக்கு அவ்வளவு அக்கறை.’

திடீரென்று ஒரு சிவராத்திரி தினத்தன்று தகவல் பிழையின் ஆனந்தத் தாண்டவம் என்று ஊரெங்கும் போஸ்டர் ஒட்டியிருந்தது. இன்னொரு சமயம், நேர்படப் பேசு நிகழ்ச்சியில் தகவல் பிழையின் அனல் பறக்கும் பேச்சு என்று ஃபேஸ்புக்கில் ஸ்கிரீன் ஷாட் வெளியானது. பொதுத் தேர்தல் வந்தபோது தகவல் பிழையின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டு பதினேழு பேர் களத்தில் இறங்கினார்கள். செவ்வாய் கிரகத்துக்குச் சென்ற இந்திய விஞ்ஞானி தகவல் பிழை அவர்கள் அங்கிருந்து நேரலையில் வருவார் என்று சொன்னார்கள். திடீரென்று இரண்டாயிரம் பக்க நாவல் ஒன்று தகவல் பிழையின் பெயரில் வெளியாகி இலக்கிய உலகில் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. இந்த வருட சாகித்ய அகடமி விருது தகவல் பிழைக்குத்தான் என்று ஏக மனதாகத் தமிழுலகம் முடிவு செய்திருந்தபோது சாலை விபத்தில் தகவல் பிழை காலமான செய்தி இடி போல வந்து சேர்ந்தது.

காரில் உடன் சென்றவர்களில் உயிர் பிழைத்தவர்கள் எதிர்ப்பட்ட டாக்டரிடம் எவ்வளவோ மன்றாடியும் அவர் தகவல் பிழைக்கு சிகிச்சை செய்ய மறுத்துவிட்டார்.

‘இது சிவில் கேஸ் சார். நீங்க இண்டர்போல்ல முதல்ல கம்ப்ளைண்ட் குடுத்துட்டு வாங்க. அப்புறம் பார்க்கலாம்.’

Share

3 Comments

  • கண்டுபிடித்துவிட்டேன்..!
    சொல்லிவிட்டாள்,
    கண்டுபிடித்தவன் – நன்றாக தகவல் பிழத்திருக்கிறீர்கள்..! 🙂

  • சத்குருநாதனா, இல்லை நாதியா .
    சர்வேஸ்வரன் அறிவான்

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி