அபார்ட்மெண்ட் செகரெட்டரி குமுறிக் கொட்டிக்கொண்டிருந்தார். இதென்ன நூறு பேர் குடியிருக்கும் இடமா இல்லை கூத்தடிக்கும் மடமா?
உடனே ஒரு சனாதனவாதி மடங்களைக் கேலி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பொது ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிக்கும்படியாக ஏதாவது நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைத் தனியே அழைத்து எச்சரித்தால் போதும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் சொன்னார். பொது வெளியில் தவறு நடந்தால் அதைப் பொதுவில் கண்டிப்பதுதான் சரி என்று பிறர் நலனில் அக்கறை உள்ள பெண்மணி ஒருவர் ஆவேசப்பட்டார்.
விஷயம் இதுதான். செகரெட்டரி நேற்றிரவு படுக்கச் செல்லும் முன் எப்போதும்போலக் கடமை உந்தித் தள்ள, குடியிருப்பு வளாகத்தை ஒரு முறை சுற்றி வந்து பார்வையிட்டார். வளாகத்தின் பின்புறம் சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக உள்ள பிள்ளையார் கோயிலை அடுத்த அரச மரத்தின் அடியில் ஒரு ஆணும் பெண்ணும் தனியே அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் திருமணமானவர்கள் இல்லை. தவிர, அந்த இரவுப் பொழுதில், சரியாக முகம் தெரியாவிட்டாலும் அவர்களிடையே செகரெட்டரி கண்ட நெருக்கம் சகிக்க முடியாதிருந்தது. பிரம்மச்சாரிக் கடவுளான பிள்ளையார் நிச்சயமாக சங்கடப்பட்டிருப்பார்.
செகரட்டரி இதனைச் சொன்னதும், குடியிருப்பு வளாகத்தில் யாரும் காதலிக்கக்கூடாது என்று பைலா சொல்கிறதா என்று தி இந்துவுக்கு தினமும் கடிதம் எழுதும் ஒரு பெரியவர் கேட்டார். குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் பொது இடத்தில் வயது வந்தவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டாமா என்று அவர் பதிலுக்குக் கேட்டார். காதல் என்று வந்துவிட்டால் பொறுப்பெல்லாம் மறந்துவிடும் என்று சிலர் சொன்னார்கள். நிறையப் பேர் ஏராளமாகக் கருத்து சொல்லிவிட்டு, இறுதியில் காதலிப்பது தவறல்ல; ஆனால் வளாகத்துக்குள் காதலை வைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். குடியிருப்பு வாட்சப் குரூப்பில் அதை அப்போதே ஒரு அறிவிப்பாகவும் வெளியிட முடிவு செய்தார்கள்.
மறு நாள் இரவு அதே நேரத்தில் வளாகத்தில் வசிக்கும் இருபது முப்பது பேருக்குத் திடீரென்று உடல் நலனின்மீது அக்கறை பிறந்து வாக்கிங் போனார்கள். பிள்ளையார் கோயிலைக் கடக்கும்போது உற்று உற்றுப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். அப்போது சைக்கிள் ஓட்டிப் பழகிக்கொண்டிருந்த நான்கைந்து சிறுவர் சிறுமியர் அந்தப் பக்கம் வந்தார்கள்.
‘தேடாதிங்க அங்கிள். சந்தோஷ் அண்ணாவையும் லீனா அக்காவையும் நாங்க மொட்டை மாடிக்குப் போய் லவ் பண்ண சொல்லிட்டோம். இனிமே உங்களுக்கு இங்க டிஸ்டர்பன்ஸ் இருக்காது’ என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
சான்ஸே இல்ல 🙂 செம கத. // மொட்ட மாடி மொட்ட மாடி ஒரு லவ் ஜோடி லவ் ஜோடி // பாடல் நினைவுக்கு வருகிறது.
மொட்ட மாடி மொட்ட மாடி ” அதே பாடல் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது.
+
எதிர் பாராத திருப்பம்
அதே அஞ்சலி மொமெண்ட் தான். எல்லாரும் அங்கேயே வாக்கிங் போறது தான் icing ஆன் தி கேக்.
பொரனி
போச்சே
சுமுக Solve ெசய்வது குழந்தைகளுக்கு தெரியுது.
திடீரென உடல் நலனில் அக்கறை பிறந்ததே Twist