ஐயாவுக்கு இருபது வருடங்களாக நான் கார் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அவர் ஒரு காலத்தில் பெரிய நடிகர். நிறைய சம்பாதித்தார். என்னைப் போல அவரிடம் வேலை பார்க்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு சம்பளம் கொடுத்தார். ஏதாவது விசேஷம் என்று பத்திரிகை வைத்தால் வீடு தேடி வந்து தாம்பாளத்தில் பழங்களுடன் பத்தாயிரம், இருபத்தையாயிரம் ரூபாயெல்லாம் தருவார். மிகவும் நல்ல மாதிரி. அவருக்கு அப்படியொரு துயரம் வந்திருக்க வேண்டாம்.
சினிமாவில் அவருக்கு வயதானபோது ஒரு கட்சி ஆரம்பித்தார். மாநிலம் முழுவதும் இருந்த ரசிகர் மன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கட்சியில் சேர்ந்துகொண்டார்கள். தவிர அவரது சொந்த ஊரில் சாதிக்காரர்கள் அத்தனைப் பேரும் அவர் சொன்னால் கேட்பவர்களாக இருந்தார்கள். ரசிகர்கள் தவிர சுமார் பத்தாயிரம் பேரின் ஓட்டுகளாவது அவரது வார்த்தைக்கு விழும். இதன் மூலம் ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் அவருக்கு நிறையக் கட்சிகளில் இருந்து அழைப்பு வரும். ஏதாவது ஓர் அணியைத் தேர்ந்தெடுத்துக் கூட்டணி வைப்பார். நல்ல வருமானம் இருக்கும். பதிலுக்கு அவர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்லித் தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொள்வார். அவர்களும் விசுவாசமாக அவர் பேச்சைக் கேட்டு வாக்களிப்பார்கள்.
இந்த முறை தேர்தல் வந்தபோது ஐயா மிகுந்த மகிழ்ச்சியுடன் அரசியல் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். தினமும் ஒவ்வொரு கட்சித் தலைவராகப் போய் சந்தித்தார். தொகுதிப் பங்கீடு போன்ற சிக்கலெல்லாம் இல்லாத ஒரே தலைவர் என் ஐயாதான். ஒரே ஒரு தொகுதியைத்தான் அவர் எப்போதும் எதிர்பார்ப்பார். அது கிடைக்காவிட்டாலும் கூட்டணியில் ஒருவர் என்ற அங்கீகாரமும் தேர்தல் செலவுக்கான தொகையும் கிடைத்துவிட்டால்கூடத் திருப்தியடைந்துவிடுவார்.
என்ன காரணத்தாலோ இம்முறை எல்லா பெரிய கட்சித் தலைவர்களும் ஐயாவுடன் மரியாதையாகப் பேசினாலும், பிறகு சொல்லி அனுப்புகிறேன் என்று திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். தேர்தல் நாள் நெருங்கும் வரையிலுமேகூட எந்தக் கூட்டணித் தலைவரும் அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. அவருக்குச் சிறிது கடன் இருந்தது. இம்முறை தேர்தலில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அதனை அடைத்துவிடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அது நடக்காமல் போனது. மிகுந்த ஆத்திரத்துடன் என்னிடம், ‘இம்முறை நான் தனியாகவே நின்று அத்தனைப் பேரின் ஓட்டுகளையும் பிரித்துக் காட்டுகிறேன் பார்’ என்று சொன்னார்.
ஆனால் அவரது சொந்த ஊரில்கூட அவருக்கு முப்பது ஓட்டுகள்தாம் விழுந்தன. எப்போதும் இன்னொருவரைத் தேர்தலில் நிறுத்தி, அவருக்காகப் பிரசாரம் செய்பவர் இம்முறை தானே நின்றார். இதுவரை அவர் நிறுத்திய வேட்பாளர்கள் வாங்கியதைக் காட்டிலும் அவருக்கு மிகவும் குறைவான ஓட்டுகளே விழுந்தன.
‘சாதிக்காரனும் ஓட்டுப் போடல. கட்சிக்காரனும் ஓட்டுப் போடல. ரசிகனுங்களும் ஓட்டுப் போடல. எல்லாரும் துரோகிங்க ஐயா!’ என்று என் குமுறலை அவரிடம் கொட்டினேன்.
‘விட்றா. என்னைய தோக்க வெக்குறதா சொல்லி என் பொண்டாட்டி ஒரு பொட்டி வாங்கிட்டா. எப்பிடிப் பாத்தாலும் எலக்சன்ல நாந்தான் ஜெயிச்சேன்’ என்று சொன்னார்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
இவர் தான் தேர்ந்த அரசியல்வாதி.கொஞ்சம்
ரஜினி கமல் smell ah இருக்கு.