கதை

வரம்

நெடுநாள் போராடித் தோற்றுவிட்டது போலத் தோன்றியது. வாழ்ந்த நாள்களில் எண்பது சதவீதம் இருக்குமா? அதற்கு மேலேயே இருக்கலாம். வீட்டைத் துறந்து, படிப்பை விடுத்து, உறவுகளை மறந்து, சந்தோஷங்களை இழந்து நாடோடியாக எங்கெங்கோ அலைந்து திரிந்தாகி விட்டது. பிச்சை உணவு பழகிவிட்டது. மான அவமானங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. தியானமும் தவமும் வேட்கையுமாக நதிப் படுகைகளில், மலைக் குகைகளில், அடர்ந்த கானகங்களில் வாழ்க்கை உருகி ஓடிப் போனது. ஞானம் சித்திக்கவில்லை. தரிசனம் கைகூடவில்லை. இன்னும் சில நாள்களில் அது நிகழலாம். அல்லது சில வருடங்கள் ஆகலாம். நடக்காமலேகூடப் போய்விடலாம். ஆனால் சலிப்பாகிவிட்டது.

போதும்; நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றியது. கொல்லி வனத்தின் இண்டு இடுக்குகள் அனைத்தும் எனக்குத் தெரியும். அங்கு விளையும் ஒவ்வொரு புல் பூண்டின் பலனும் தெரியும். கவனமாகத் தேடி ஒரு சிறந்த விஷ மூலிகையைப் பறித்து சாறெடுத்து வைத்தேன். இறுதியாக ஒருமுறை இறைவனை நினைத்துப் பார்க்கலாமா என்று சிறு சபலம் உண்டானது. இதுவரை வரமாக எதுவும் தந்திராதவன். இரக்கப்பட்டு இப்போதாவது எதையாவது செய்ய நினைக்கலாம். ஆனால் கண்ணைப் பிடுங்கிக் கொடுத்த பிறகுதான் பொதுவாக அவனுக்குக் கருணை வரும் போலிருக்கிறது.

ஒழியட்டும். அப்படியொருவன் இல்லை என்னும் ஞானத்தை அடைந்ததாகக் கருதி முடித்துக்கொண்டுவிடலாம் என்று நினைத்தேன். விஷக் குவளையைத் தொட்டேன்.

நெஞ்சு வலித்தது.

Share

3 Comments

  • வேண்டும் வேண்டும் என தேடுபவனுக்கு சித்திப்பதில்லை. சிவனே என்றிருந்தால் கிடைத்திருக்கும்.

  • நினைப்பது..கிடைப்பது..ஏங்குவது.. அனைத்தும் வரம்..அவனருளாலே அவன்தாள்..

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி