ஆசி

கிழவிக்கு எப்படியும் எண்பது வயது இருக்கும். அவள் நின்று, நடந்து நான் பார்த்ததில்லை. வீட்டை விட்டுக் கிளம்பி தெரு முனைக்கு வரும்போது மெயின் ரோடுக்குத் திரும்பும் இடத்தில் அவள் ஒரு கோணிப்பையை விரித்து சாலை ஓரம் அமர்ந்திருப்பாள். யாரையும் அழைக்க மாட்டாள். கையேந்த மாட்டாள். யார் என்ன கொடுத்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வாள். எதுவும் தராதவர்கள் மீது அவளுக்கு எந்த விமரிசனமும் இல்லை.

முதலில் எப்போதாவது தோன்றும்போது ஏதாவது சில்லறைக் காசைப் போட்டுவிட்டுப் போவேன். ஏதோ ஒரு நாள் பாக்கெட்டில் கையை விட்டபோது ஒரு பத்து ரூபாய் நோட்டு வந்தது. சில்லறைதான் போட வேண்டும் என்று என்ன இருக்கிறது? அந்த நோட்டை அவள் முன் வைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். அப்போதுதான் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். அதற்கு மேல் ஒன்றுமில்லை.

மறுநாளும் அவளுக்கு நான் ஒரு பத்து ரூபாய் நோட்டைத் தந்தேன். அன்று புன்னகை செய்தாள். அந்தச் சிரிப்பு எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அவளுக்குப் பத்து ரூபாய் தரத் தொடங்கினேன்.

ஒரு வருட காலம் இது தொடர்ந்தது. எங்களுக்குள் ஒரு வார்த்தைப் பரிமாற்றம்கூட இருந்ததில்லை. நான் ரூபாய் நோட்டை அவள் முன் வைப்பேன். அவள் நன்றியுடன் புன்னகை செய்வாள். அவ்வளவுதான். செய்கிற எவ்வளவோ பாவங்களில் ஒன்றிரண்டாவது அதில் கழிந்துவிடும் என்று எண்ணிக்கொள்வேன்.

திடீரென்று நோய்த் தொற்றுக் காலம் ஒன்று உண்டானது. உலகம் வீடுகளுக்குள் சுருண்டுகொண்டது. நான் அலுவலகம் செல்வது நின்றது. வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க ஆரம்பித்தேன். எட்டு மாதங்களில் வாழ்க்கை தலை கீழானது. மீண்டும் அலுவலகம் செல்லத் தொடங்கியபோதுதான் எனக்கு அந்தக் கிழவியின் நினைவு வந்தது. அவள் எப்போதும் அமர்ந்திருக்கும் இடத்தில் அன்று இல்லை. அடுத்தடுத்த தினங்களிலும் நான் அவளைக் காணவில்லை. அவள் இடம் மாறிச் சென்றிருப்பாள் என்று நம்ப மட்டுமே விரும்பினேன்.

ஆனால் இல்லை. நான் அலுவலகம் செல்லத் தொடங்கிய பத்தாம் நாள் திரும்பவும் அவளை அதே இடத்தில் கண்டேன். வண்டியை நிறுத்தி இறங்கி பத்து ரூபாய்த் தாளை அவள் எதிரே வைத்தேன். நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தாள். அன்றுதான் அவளுடன் முதல் முதலில் பேசியது.

‘எப்டி இருக்கிங்க?’

‘நல்லா இருக்கேன் தம்பி. வியாதியெல்லாம் ஒண்ணும் வரல. நீ நல்லா இருக்கியா?’

நான் புன்னகை செய்தேன்.

‘இந்தா’ என்று சட்டென்று கோணிப் பையின் அடியில் வைத்திருந்த ஒரு கொய்யாப் பழத்தை எடுத்துக் கொடுத்தாள். கணப் பொழுதுதான். வெயில் தணிந்து காற்றடித்தது. நாய் ஒன்று குரைத்துக்கொண்டு என்னைக் கடந்து ஓடியது. ‘வரேன்’ என்று தலையசைத்து விடைபெற்றுக் கிளம்பினேன்.

Share

6 thoughts on “ஆசி”

  1. Sued Ibrahim sahul hameed

    No comments
    இதே அனுபவம்
    எனக்கும் கிட்டியது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *