மிச்சம்

ஐந்து லட்சம் ரூபாய்க்காகத் தற்கொலை செய்துகொள்வது சிறிது அபத்தம் என்று சம்பத்துக்குத் தோன்றியது. ஓராண்டு முழுவதும் முடங்கிப் போனதில் தொழில் இறந்துவிட்டது. உடைமையாக இருந்த அனைத்தையும் விற்று, இருந்த கடன்களை அடைத்துவிட்டான். ஒரே ஒரு ஐந்து லட்ச ரூபாய்க் கடன் எப்படியோ மீதமாகிவிட்டது. கடன் கொடுத்தவன் கேட்க முடியாத சொற்கள் அனைத்தையும் பேசி ஓய்ந்து, இறுதியாக இன்று காலை நேரில் வருவதாகச் சொல்லியிருந்தான். எப்படியும் அவன் தனியாக வரப் போவதில்லை. கெட்ட வார்த்தைகள் நன்கு பேசத் தெரிந்த, அல்லது மிரட்டத் தெரிந்த ஒன்றிரண்டு பேரை அழைத்துக்கொண்டுதான் வருவான். அவன் வரும்போது வெளியே போய்விட்டால் அப்போதைக்குத் தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் எப்போதும் அப்படிச் செய்ய முடியாது. தவிர, அது அவனுடைய ஆத்திரத்தை இன்னும் அதிகப்படுத்தும். மேலும் சம்பத்துக்குத் தப்பித்துச் செல்லும் விருப்பமும் இல்லை. அவனிடம் பணம் இல்லை. இருந்தால் கொடுத்துவிடுவான்.

‘எல்லாருக்கும் செட்டில் பண்ண இல்ல? அப்பவே எனக்கும் பண்ணியிருக்க வேண்டியதுதானே?’ என்று அவன் கேட்டான். வரிசையில் கடைசியில் இருந்தவன் விடுபட்டுப் போனது சம்பத் எதிர்பாராதது. இன்னும் சிறிது காலம் அவகாசம் தரும்படியும் அதற்கும் சேர்த்து வட்டியுடன் தந்து விடுவதாகவும் சொல்லிப் பார்த்தான். ‘எவ்ள நாள்?’ என்ற கேள்விக்குத்தான் பதில் சொல்ல முடியவில்லை.

ஏதாவது கம்பெனியில் வேலைக்குப் போயிருக்கலாம். சொந்தத் தொழில் என்று தொடங்கிப் பல வருடங்கள் முதலாளியாக இருந்துவிட்ட பிறகு அதை நினைத்துப் பார்ப்பது கஷ்டமாக இருந்தது. முதலாளியாக இருந்த நாள்களை இனி நினைக்கவே கூடாது என்று எண்ணிக்கொண்டான். துக்கம் மிகுந்து, கண் கலங்கியது. வீட்டைக் கூட்டிப் பெருக்க வந்த வேலைக்காரப் பெண் பார்த்துவிடப் போகிறாளே என்று அவசரமாகக் கண்ணைத் துடைத்துக்கொண்டான். அவளுக்கும் இம்மாத சம்பளம் தர வேண்டும். இதோடு வேலையில் இருந்து நின்றுகொள் என்று சொல்ல வேண்டும். எல்லாமே சங்கடம்.

அந்தப் பெண், வேலையை முடித்துவிட்டுக் கிளம்புவதாகச் சொன்னாள். சம்பத் அவளிடம், ‘இப்ப பணமில்லை. அடுத்த மாசம் சம்பளம் தந்திடுறேன். ஆனா நாளைலேருந்து வேலைக்கு வர வேணாம்’ என்று சொன்னான்.

‘பரவால்ல சார். தனியா இருக்கிங்க. கஷ்டப்படுறிங்கன்னு தெரியுது. அப்பிடியெல்லாம் கழுத்துல கத்தி வெக்க மாட்டேன் சார். நீங்க குடுக்கறப்ப குடுங்க. அதுக்காக வீடு கூட்டிப் பெருக்காம இருந்தா நல்லாருக்காது. எனக்கு நாலு வீட்டு வேல இருக்குது. சமாளிச்சிக்குவேன்’ என்று சொல்லிவிட்டுப் போனாள்.

அவனுக்கு இது நெகிழ்ச்சியாக இருந்தது. சிறிய பாக்கிகள் பெரிய சுமையாவதில்லை போலிருக்கிறது.

ஒன்பது மணிக்குக் கடன் கொடுத்தவன் வந்தான். சம்பத் அவனை வரவேற்று உட்கார வைத்து, தன் நிலைமையைச் சொன்னான். சிறிய, வாடகை வீட்டுக்கு இடம் மாறி வந்து இன்னும் வாடகைகூடத் தரவில்லை என்றான். சாட்சிக்குத் தனது வங்கி பாஸ் புக்கை எடுத்துக் காண்பித்தான்.

‘எப்பதான் தருவ?’ என்று அவன் எரிச்சலுடன் கேட்டான்.

ஒரு கணம் யோசித்தவன், ‘உண்மைலயே தெரியல. எங்கயாவது வேலை தேடிக்கிட்டு போகலாம்னு இருக்கேன். சம்பளம் வர ஆரம்பிச்சதும் மாசாமாசம் அப்படியே கொண்டு வந்து குடுத்துடுறேன்’ என்று சொன்னான்.

கடன் கொடுத்தவன் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு, ‘பொண்டாட்டி, புள்ளகுட்டின்னு இருந்தா நாக்கப் புடுங்கற மாதிரி நாலு வார்த்த கேட்டுட்டுப் போவேன். அவமானத்துக்கு பயந்தாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணுவ. நீ ஒண்டிக்கட்டை. சாவுக்கு நாந்தான் காரணம்னு லெட்டர் எழுதி வெச்சிட்டு செத்தன்னா என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திடும். தேவையா எனக்கு? சீக்கிரம் குடுக்கற வழியப் பாரு’ என்று சொல்லிவிட்டு எழுந்து போனான்.

சம்பத்துக்கு இப்போதும் நெகிழ்ச்சியாக இருந்தது. பத்து காசுக்கு வக்கில்லாதவனோட நான் எப்படி வாழ என்று கேட்டுப் பிரிந்து போனவளை நன்றியுடன் எண்ணிக்கொண்டான்.

Share

1 comment

  • பல MSME க்கள் எதிர்கொள்ளும் நிலை இதுதான். அவமரியாதையைக் கூட தாங்கிக்கொள்ள முடியும். இது போன்ற இதங்கள் தான் இம்சை.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!