ஒவ்வொரு நாளும் உறங்கப் போகும்போது அவனை நினைத்துக்கொள்ளக்கூடாது என்றுதான் நினைப்பாள். ஆனால் அந்த நினைவின் தொடர்ச்சியாக அவன் முகம் மனத்தில் தோன்றிவிடும். பிறகு அவனது பேச்சு. செயல்பாடுகள். புன்னகை. எத்தனை எரிச்சலுடன் முகம் காட்டினாலும் சலிக்காமல் ஒவ்வொரு முறையும் எதிரே வந்து நின்று புன்னகை செய்வான்.
‘என் விருப்பத்தை நான் சொல்லாமல் எனக்காக வேறு யார் உன்னிடம் சொல்வார்கள்?’
‘ஆனால் நான் உன்னை விரும்பவில்லை. இனி விரும்புவேன் என்றும் தோன்றவில்லை.’
அதற்கு பதிலாகவும் ஒரு புன்னகைதான். போய்விடுவான். ஆனால் தவறாமல் மறுநாளும் வருவான்.
இது ஒரு அத்துமீறல் என்று அவள் நினைத்தாள். பெரிய பாதிப்புகளற்ற புன்னகைதான் என்றாலும் வேலையைக் கெடுக்கிறது என்று தோன்றியது. அதையும் வெளிப்படையாக அவனிடம் சொன்னாள். ‘நான் உன் நினைவில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றான்.
அன்றிரவு உறங்கும்போது அவன் கனவில் வந்தான். எப்போதும் போலப் புன்னகை செய்து, ‘நான் உன்னை விரும்புகிறேன்’ என்று சொன்னான். அவள் சில வினாடிகள் யோசித்தாள். பிறகு, ‘சரி. உன் காதலை நான் ஏற்கிறேன். பதிலுக்கு நீ ஒன்று செய்ய வேண்டும்.’
‘என்னவென்று சொல்.’
‘இனி எந்நாளும் நீ புன்னகை செய்யக்கூடாது. உன் புன்னகையை நீ நிரந்தரமாக இழக்கத் தயாரென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன்.’
‘அவ்வளவு பாதித்துவிட்டதா?’
‘ஆம். நிச்சயமாக.’
‘சரி. இனி நான் உன்னிடம் புன்னகை செய்ய மாட்டேன்.’
‘சரி. நானும் உன்னைக் காதலிக்கிறேன்.’
பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். குழந்தைகள் பிறந்து வளர்ந்து வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டு சென்றன. அவர்களுக்கு வயதானது. அவன்தான் முதலில் மரணமடைந்தான். துயரம் அழுத்த, அவள் அழுதாள்.
மறுநாள் அவனைச் சந்தித்தபோது அவன் முகத்தில் புன்னகை இல்லை. வெறுமனே ஏக்கத்துடன் பார்த்து நின்றான். அவளுக்கு அது என்னவோ போல இருந்தது. ‘கொஞ்சம் சிரியேன்’ என்று சொன்னாள்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
அவன் இயல்பைப் பிடுங்கிவிட்டு என்ன வாழ்க்கை
இயல்பை பிடுங்கினாலும்.. ஏற்றுக்ெகாண்டான்..காதல் –