இந்த ஆண்டு விகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களுக்கு எழுதியிருக்கிறேன். விகடனில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை. லேடீஸ் ஸ்பெஷலில் ஒரு சிறுகதை. தொடர்ந்து அரசியலே எழுதிக்கொண்டிருப்பதால் சிறிது மூச்சுவிட்டுக் கொள்ளவும் வேண்டுமல்லவா?
ஒரு காலத்தில் தீபாவளி மலரில் எழுதுவது என்பது தீபாவளியினும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும். மலரில் ஒரு துணுக்கு வெளியானால்கூட இனிப்பு அளித்துக் கொண்டாடியவர்களை அறிவேன். மலருக்கு எழுதுபவனாக மட்டுமன்றி, மலர் தயாரிப்பிலும் இருந்திருக்கிறேன் என்ற விதத்தில் இது குறித்து மிக நன்றாகத் தெரியும்.
என் கணிப்பில், இணையத்தின் வளர்ச்சி வார இதழ்களையும் நாளிதழ்களையும் பாதித்திருக்கலாமே தவிர, தீபாவளி மலர்களின் முக்கியத்துவம் குறைந்து போனதற்கு மிக நிச்சயமாக அது காரணமாக இருக்க இயலாது. ஏனெனில் வார, மாத இதழ்களில் இடம்பெற இயலாத பல அழுத்தமான, ஆழமான கட்டுரைகள் மலரில் வெளியாகும். பக்க அளவுகள் ஒரு பொருட்டாக இராது. சிறுகதைகளுமே, மேலோட்டமாக அல்லாமல் செறிவுடன் எழுதப்படும். தவிர, வார இதழ்களில் பெரும்பாலும் எழுதத் தயங்கும் எழுத்தாளர்கள் தீபாவளி மலரென்றால் மட்டும் சரி என்று முன்வருவார்கள். இதையெல்லாம் மிக நெருக்கமாக நின்று பார்த்திருக்கிறேன்.
வருடம் நினைவில்லை. கல்கி தீபாவளி மலர் ஒன்றில் லா.சு. ரங்கராஜன் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைக் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். என் நினைவு சரியென்றால் சுமார் மூவாயிரம் சொற்கள் அளவுக்கு நீண்ட கட்டுரை அது. ஆனால் ஒரு சொல்லைக் கூட எளிதில் கடந்து சென்றுவிட முடியாதபடி அவ்வளவு அடர்த்தியான தகவல்கள் நிறைந்திருந்தன. இப்படி ஒரு கட்டுரையை எப்படி எழுதியிருப்பார், எப்படி எழுதியிருப்பார் என்று பல நாள் திகைத்துத் திகைத்துத் தணிந்திருக்கிறேன்.
தகவல் களஞ்சியங்களாகப் பயணக் கட்டுரைகள், அரிய பல வரலாற்றுக் கட்டுரைகள், இசை, நடனம், சிற்பம் போன்ற நுண்கலைகள் சார்ந்த துறைசார் வல்லுநர்களின் கட்டுரைகள், அபூர்வமான புகைப்படங்கள், சிறுவர் பகுதி, பெண்கள் பகுதி என்று ஒரு மலரில் எல்லாமும் இருக்கும். எதையுமே தவிர்க்கத் தோன்றாத தரம்தான் அன்றைய மலர்களின் சிறப்பு. நான் சொல்வது தொண்ணூறுகளின் காலம். என் தந்தை ஐம்பதுகளில் வெளியான சுதேசமித்திரன் மலர்கள் சிலவற்றை மட்டும் மிகவும் பத்திரமாகச் சேகரித்து வைத்திருந்தார். அவற்றில் இருந்த சிறுகதைகள் ஒவ்வொன்றும் மிகத் தரமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் அம்மலர்களை எடுத்துக் கொடுத்து, ‘சிறுகதைன்னா இப்படி எழுதணும்’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.
எல்லாம் முன் ஜென்ம நினைவு போலாகிவிட்டது.
திடீரென்று ஓராண்டு ஒரு தீபாவளி மலருடன் உப்பு, புளி, மிளகாய், தனியாவெல்லாம் இலவசம் என்று அறிவித்தார்கள். உடனே அனைத்து தீபாவளி மலர் வெளியீட்டாளர்களும் விதவிதமான இலவசப் பொருள்களை இணைத்துத் தருவதாகச் சொன்னார்கள். ஒன்றென்ன, இரண்டு மலர்கள் என்று ஒரு பத்திரிகை அறிவித்தது. உடனே இரண்டல்ல மூன்று என்று இன்னொன்று சொன்னது. அதன்பின் தீபாவளி மலர் என்றாலே என்ன இலவசம் என்று கேட்கும் வழக்கம் ஆரம்பமானது. மலர்களை விளம்பரதாரர்கள் குத்தகை எடுத்துக்கொண்டார்கள். இடப்பக்கமெல்லாம் கட்டுரை, கதைகள், வலப்பக்கம் நிச்சயமாக விளம்பரங்கள் மட்டுமே என்றானது. தீபாவளி மலர்கள் அதன்பின் விளம்பர மலர்களாகிப் போனதால் தரமான படைப்புகளுக்கு வெகுஜனத் தளத்தில் இருந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் ஆனது. எனவே அவை விற்பனை வீழ்ச்சி காணத் தொடங்கின.
இன்றைக்கும் ஒரு கடமையாகச் சில தீபாவளி மலர்கள் வரத்தான் செய்கின்றன. ஒன்றிரண்டு படைப்புகள் அவற்றில் தப்பித்தவறி நன்றாகவும் அமைந்துவிடுகின்றன. ஆனால் பழைய சுவாரசியம் நிச்சயமாக இல்லை. படிப்பவர்கள் மட்டுமல்ல. மலர்களைத் தயாரிப்பவர்களும் இதனை ஒப்புக்கொள்ளவே செய்வார்கள்.
கால மாற்றம் என்பது தர வீழ்ச்சியாக மட்டுமே காட்சியளிக்க வேண்டும் என்று யாரோ நேர்ந்துகொண்டிருக்க வேண்டும்.