இடமும் இருப்பிடமும்

யதியின் முதல் பதிப்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு புதிய பதிப்பகம் தொடங்கி, அதன் வாயிலாக வெளியிட்டது. பொதுவாக எனக்கு இந்தப் பத்திரிகைகள் பதிப்பகம் தொடங்குவது சார்ந்து, கசப்புணர்வு உண்டு. கூடாது என்பதல்ல. ஆனால் தெரியாத ஒன்றில் கை வைத்துக் கெடுப்பது தொழில் என்ற அளவில் அவர்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுக்கு அது எவ்வளவு பெரிய இழப்பு என்பதைப் பத்திரிகை நிறுவனங்கள் உணர்வதேயில்லை.

எல்லாம் காலச்சுவடு-விகடனைப் பார்த்துத்தான் செய்ய ஆரம்பித்தார்கள். விகடன் வென்றதன் காரணம், பதிப்புக்கென்று அவர்கள் பொருத்தமான ஆசிரியர்களையும் விற்பனை அதிகாரிகளையும் கண்டறிந்து நியமித்தது. காலச்சுவடு குறித்துச் சொல்லவே வேண்டாம். அவர்கள் இரண்டையும் ஒரே தரத்தில் வைத்துக் காக்க முதல் நாளிலிருந்தே மெனக்கெடுபவர்கள். ஆனால், அச்சடிக்கும் இயந்திரம் பொதுவானது என்கிற கருத்தின் அடிப்படையில் மட்டும் பதிப்பகம் தொடங்கும் தினசரி, வார, மாத இதழ்கள் ஆரம்பிக்கும் எந்தப் பதிப்பகமும் பெரிய அளவில் வென்றதற்கு இங்கே வரலாறில்லை. புத்தகக் கண்காட்சிகளில் அந்தப் பத்திரிகைகளின் வாசகர்கள் அரங்குக்கு வருவார்கள். தொடராக வந்தபோது விரும்பிப் படித்திருந்தால் புத்தகமாகவும் வாங்குவார்கள். மற்றபடி ஆண்டு முழுவதும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்கள் தேங்கிக் கிடக்கும். விற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொன்னாலும் வாங்கிப் படித்தேன் என்று சொல்ல யாரும் தென்பட மாட்டார்கள்.

எனக்கு மூன்று முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறது. தினமலரில் வெளியான ஒரு தொடரை அவர்களே புத்தகமாக வெளியிட்டார்கள். காணாமல் போனது. ஆனால் விற்ற வரை ராயல்டி கொடுத்தார்கள். இந்து நாளிதழில் ஒன்று. அதுவும் அப்படியே. தினமணியில் யதி. எவ்வளவு விற்றதென்றும் தெரியவில்லை; ராயல்டி என்ற ஒன்று அங்கிருந்து இக்கணம் வரை வந்ததில்லை. இந்த மூன்று புத்தகங்களின் பதிப்புரிமையைத் திரும்ப வாங்கி இரண்டாம் பதிப்பாக என் வழக்கமான பதிப்பு நிறுவனம் மூலமாகக் கொண்டு வந்தபோதுதான் அவை நியாயமான விற்பனையையும் வரவேற்பையும் கண்டன. பரவலாகவும் செய்தன.

இதனாலேயே பத்திரிகைத் தொடர் என்று யார் கேட்டாலும் இப்போதெல்லாம் மிகவும் யோசிக்கிறேன். தொடர் முடிந்ததும் நாங்களேதான் புத்தகம் போடுவோம் என்பதைத்தான் இரண்டாவது வரியாகச் சொல்கிறார்கள். ஒரு புத்தகம் வந்தால் போதும் என்று நினைக்கும் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு இது சரி. எல்லோருக்கும் உகந்ததல்ல.

சலம் எழுதவிருக்கிறேன் என்று அறிவித்ததும் யதியை நினைவுகூர்ந்து இதைத் தொடராக வெளியிடுகிறோம் என்று உடனே ஒரு பத்திரிகை நிறுவனம் கேட்டது. அதே நிபந்தனைதான். புத்தகத்தை நாங்களே வெளியிடுவோம். மறுத்துவிட்டேன். அம்மாதிரி நிபந்தனை ஏதுமில்லாமல் தொடராக வெளியிடுவதாக நண்பர் பரிசல் கிருஷ்ணா சொன்னார் (புதிய தலைமுறை இணையம்). ஆனால் சலத்தை மெட்ராஸ் பேப்பரில் வெளியிடுவது பத்திரிகைக்கு நல்லது என்று சொன்னவர் என் மனைவி. அது நியாயமென்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன். உங்களுக்கென்று ஒரு பத்திரிகை இருக்கும்போது இன்னொரு பத்திரிகைக்கு உங்கள் எழுத்தைக் கொடுக்காதீர்கள் என்று மாமல்லனும் சொன்னார்.

உண்மையில் மெட்ராஸ் பேப்பர் நான் எழுதுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை அல்ல. அது முற்றிலும் என் மாணவர்களுக்கும் நான் மதிப்பவர்களுக்கும் மட்டுமானது. அது அவர்களுடைய களம். அப்படி நினைத்துத்தான் தொடங்கினேன். அதில் தினசரிப் பகுதி ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தபோது பரீட்சார்த்தமாக சலத்தை அதில் வெளியிட்டுப் பார்க்க நினைத்தேன். அப்போது அத்தியாயக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்ளாமல் மனம் இழுத்துச் சென்ற திசையெல்லாம் பரவி எழுதிக்கொண்டிருந்தேன். அன்றாடப் பிரசுரத்துக்கு அதிலிருந்து பகுதி பகுதியாகப் பிய்த்துக் கொடுத்ததுடன் சரி. பிறகு புத்தகமாக்க அமர்ந்த போதுதான் முறையாக எடிட் செய்து நியாயமான அத்தியாய எல்லைகளை வகுத்தேன்.

இது எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. சொந்த வீட்டில் வசிப்பவனின் சொகுசுகளோடு இதனை ஒப்பிடலாமா என்று தெரியவில்லை. ஆனால் எழுதும்போது எழுத்துக்கு அப்பாற்பட்ட கவலைகளும் அச்சங்களும் இல்லாதிருப்பது பெரிதென்று நினைக்கிறேன்.

இனி பத்திரிகைத் தொடர் என்றால் மெட்ராஸ் பேப்பர் போதும் என்று தோன்றிவிட்டது. முன் சொன்ன காரணம்தான். மிகப்பெரிய பத்திரிகைகள் தொடங்கி, சின்னஞ்சிறு பத்திரிகைகள் வரை எல்லோருமே ஆளுக்கொரு பதிப்பகம் வைத்திருக்கிறார்கள். வெளியாகும் தொடர்களை அதில்தான் புத்தகமாக வெளியிடுவோம் என்கிறார்கள். எனக்கு இதில் அணுவளவும் உடன்பாடில்லை. ஓர் எழுத்தாளனின் புத்தகங்கள் ஒரே இடத்தில் எப்போதும் வாங்கக் கிடைப்பதுதான் சரி. அது, அவனைத் தேடிப் படிக்க வரும் வாசகருக்கு அவன் செய்துதரும் குறைந்தபட்ச வசதி. எழுதுகிற ஒவ்வொரு நூலையும் வேறு வேறு பதிப்பகங்களுக்குத் தருகிற எழுத்தாளர்கள், புத்தகக் காட்சி சமயம் எந்தெந்தப் புத்தகங்கள் எங்கெங்கே கிடைக்கும் என்று நீளமாகப் பட்டியல் போடுவதைப் பார்க்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படும். தமிழைத் தவிர வேறெங்கும் இந்த அபத்தம் நிகழ்வதில்லை என்று நினைக்கிறேன். நமக்கென உள்ள சிறுபான்மை வாசகர் சமூகத்தை வீதி வீதியாக அலையவிடுவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.

புத்தகப் பதிப்பு என்பது வேறு; பத்திரிகைப் பதிப்பு என்பது வேறு. இரண்டின் வாசகர்களும் வர்த்தகமும் முற்றிலும் வேறு. நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் இரண்டும் புத்தகமாக வெளிவந்து எத்தனை பதிப்புகள் கண்டன என்ற எண்ணிக்கையே எனக்கு நினைவில்லை. இன்று வரை ஆண்டு தவறாமல் அவை மறு அச்சு கண்டுகொண்டேதான் இருக்கின்றன. நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாம் பாகமாக எழுதிய கணை ஏவு காலம் தமிழ் இந்துவில் தொடராக வந்தபோது நிலமெல்லாம் ரத்தம் அளவுக்கே பேசப்பட்டது; பாராட்டப்பட்டது. ஆனால் அவர்களே அதைப் புத்தகமாக வெளியிட்டபோது போகவேயில்லை. 1993 ஆம் ஆண்டு என் முதல் புத்தகத்துக்குக் கிடைத்ததைக் காட்டிலும் குறைவான ராயல்டி வந்ததில், திகைத்துவிட்டேன். புத்தகத்தை அவர்களிடமிருந்து வாங்கி, ஜீரோ டிகிரியில் இரண்டாம் பதிப்புக்குக் கொடுத்தபோதுதான் கணை சரியாகச் செலுத்தப்பட்டது உறுதியானது.

பத்திரிகைகளால் ஏன் வெற்றிகரமாகப் பதிப்பகப் பணியைச் செய்ய முடிவதில்லை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது, பத்திரிகை என்பது அன்றில் வாழ்வது. புத்தகம் என்பது என்றும் இருப்பது. அதை மனத்தில் கொண்டு உள்ளடக்கம் முதல் உருவம் வரை வடிவமைக்கப்பட வேண்டும். இது பத்திரிகை ரத்தம் ஊறியவர்களால் நிச்சயமாக முடியாது. அதைப் போலவே, புத்தக விற்பனை என்பது பத்திரிகை விற்பனையைப் போல உடனே நிகழ்வதல்ல. நீடித்த பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம். அது இங்கே கிடையாது. அனைத்தினும் முக்கியம், புத்தகத்துக்கான வாசகர்கள் யாரென்று தெளிவாகத் தெரிந்திருப்பது. பல லட்சம் பேர் பத்திரிகை படிப்பவர்கள் இருக்கலாம். புத்தகம் படிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தாம். அவர்களைத் துல்லியமாகச் சென்றடைவது என்பது கலையும் நுட்பமும் கலந்ததொரு தனி இயல்.

எழுதுவதுடன் என் பணி முடிந்தது என்று பலர் இருக்கலாம். என்னால் அது முடியாது. எழுதுகிற ஒவ்வொரு புத்தகமும் தனது இறுதி வாசகனின் கரங்கள் வரை சிதறாமல் சென்று சேர வேண்டும் என்று நினைப்பேன். அது குறித்த பதற்றம் எப்போதும் இருக்கும். அதனாலேயே புத்தகப் பதிப்பை ஒரு பக்கவாட்டுத் தொழிலாகக் கொள்ளும் பத்திரிகைகளின் பதிப்பகங்களைக் கண்டு அஞ்சுகிறேன். முன்பெல்லாம் எந்தப் பத்திரிகையிலாவது தொடர் எழுத அழைத்தால் அக்கணம் என் உறக்கம் தொலைந்துவிடும். திட்டமிடுவதில் தொடங்கி, எழுதி நிறைவு செய்வது வரை மறு சிந்தனையே இல்லாமல் அதிலேயே மூழ்கிப் போய்விடுவேன். இனி அந்த எண்ணம் இல்லை; எனவே அக்கவலையும் இல்லை. ஒன்று மெட்ராஸ் பேப்பரில் எழுதுவேன். அல்லது இங்கே எழுதுவேன். அல்லது நேரடியாகப் புத்தகமாக.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading