
சலம் வெளியீட்டு விழா எங்கே? எப்போது?
முன்பதிவு ஆரம்பமானதிலிருந்து பலபேர் தொடர்ச்சியாக இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். விழாவின்போது நேரில் சந்தித்துப் பெற விரும்புவதாகவும் சிலர் சொன்னார்கள். அனைவருடைய அன்புக்கும் என் நன்றி.
ஆனால் முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன். எனக்குப் புத்தக விழாக்களில் நம்பிக்கை இல்லை. நான் வெளியீட்டுக்கு விழாவெல்லாம் வைப்பதில்லை. என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு விழா நடந்தது. அது என் மனைவியின் ஏற்பாடு. அதன் பிறகு எப்போதும் விழா நடந்ததில்லை; நான் அதை விரும்புவதும் இல்லை. சம்பந்தமில்லாத யாரோ ஒரு பிரபலம் வந்து வெளியிட, இன்னொரு பிரபலம் முதல் பிரதி பெற, மூன்றாவது பிரபலம் இன்னும் நான் படிக்கவில்லை என்று ஆரம்பித்துப் பத்து நிமிடங்கள் பேச, அதையும் கேட்டுத் தொலைக்க வாசகர்களுக்கு என்ன தலையெழுத்து?
எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் இடையில் புத்தகம் மட்டும் போதும். பிரசாரகர்கள் தேவையில்லை. ஒரு புத்தகத்துக்கு நேர்மையாகப் பிரசாரம் செய்யத் தகுதி படைத்தவர்கள் இரண்டு பேர். எழுதியவரும் வெளியிட்டவரும். மூன்றாம் தரப்பென்பது எப்போதும் இடைஞ்சலே. நான் இங்கே எழுதுகிறேன். ராம்ஜி தொடர்ந்து சலத்தில் அவரைக் கவர்ந்த வரிகளை அவரது பக்கத்தில் பிரசுரம் செய்து வருகிறார். போதுமே? எனவே சலத்துக்கு வெளியீட்டு விழாவெல்லாம் கிடையாது.
எப்போதும் போலப் புத்தகம் அச்சாகி வந்ததும் முன்பதிவு செய்யும் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டு அனுப்புவதற்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்வேன். என்னைப் பொறுத்தவரை விழா என்பது அதுதான். வெறும் விழா அல்ல அது. திருவிழா. எழுத்தாளனுக்கும் அவனை விரும்பும் வாசகர்களுக்கும் இடையிலுள்ள உள்ளார்ந்த உறவு நிகரற்றது. மூன்றாவது மனிதர்களால் புரிந்துகொள்ள இயலாததும்கூட. எனக்கு அது போதும். இன்றல்ல. என்றென்றும்.
ஒரு விழா என்பது வாசகர்களும் எழுத்தாளரும் நேரில் சந்தித்துப் பேச ஒரு வாய்ப்பில்லையா என்று ஒருவர் கேட்டிருந்தார். அது உண்மைதான். ஆனால் என்னைச் சந்திப்பதெல்லம் ஒரு பெரிய விஷயமா? யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லிவிட்டு, நேரம் குறித்துக்கொண்டு என் அலுவலகத்துக்கு வரலாம். சந்தித்துப் பேசலாம்.
அவ்வளவு ஏன், புத்தகம் தயாரானதும் முன்பதிவு செய்திருப்போரின் பிரதிகளில் கையெழுத்திட என்றைக்கு ஜீரோ டிகிரி அலுவலகத்துக்குச் செல்லவிருக்கிறேன் என்பதை நிச்சயமாக இங்கே அறிவிக்கத்தான் போகிறேன். ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு அன்றைக்கு அங்கே நேரில் வந்து சந்தித்துப் பெற்றுக்கொண்டால் போயிற்று.
வாசகர்களைச் சந்திக்க எப்போதும் விரும்புகிறேன். எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு ஆவலுடன் காத்திருக்கவே செய்கிறேன். ஆனால் என்றைக்குமே புத்தக வெளியீட்டு விழா மட்டும் வைக்க மாட்டேன்.
அது வெறும் நேர விரயம். சமோசா விரயம்.
நிற்க. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை சலத்தின் இரு பதிப்புகளுக்கும் முன்பதிவு செய்யலாம். முப்பது சதவீதச் சலுகை விலையில் புத்தகம் உங்களை வந்தடையும். முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் புத்தகத்தில் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பேன். இதில் மாற்றமில்லை. முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன.
சலம் முன்பதிவுச் சுட்டிகள்:
Paperback Edition
HardCover Edition
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.