
சலம் முன்பதிவை நேற்று தொடங்கி வைத்த வாசக நண்பர்களுக்கு நன்றி. ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் இயக்குநர் சமுத்திரக்கனி இதன் முன்பதிவுச் சுட்டிகளை வெளியிட்டு வாழ்த்தினார். மகிழ்ச்சியாக இருந்தது.
எவ்வளவோ எழுதுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். எல்லாமே இருப்பதன் பொருட்டு நிகழ்வது. ஆனால், நாம் இருந்ததன் நியாயத்தை நமது காலத்துக்குப் பிறகு சொல்வதற்கு ஒவ்வோர் எழுத்தாளனும் ஒன்றை எதிர்பார்த்து நிச்சயமாகத் தவமிருப்பான். எனக்கு இது, அது.
ஆகக் கூடியவரை பிழையற்ற பதிப்பாக, இம்மியளவும் நேர்த்தி குலையாத பதிப்பாக, தூக்கி வைத்துக்கொண்டு பிரித்துப் படிக்கையில் ஓரங்களில் எழுத்து ஒளிந்துகொண்டு சிரமம் தராத பதிப்பாக, அனைத்தினும் முக்கியமாகக் கண்ணை உறுத்தாத வடிவத்தில் இது அமைவதற்கு என்னால் முடிந்த வரை முயற்சி செய்திருக்கிறேன். தயாரிப்புப் பணிகளின்போது ஜீரோ டிகிரி ஊழியர்களைக் கிட்டத்தட்ட சித்திரவதையே செய்திருக்கிறேன் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வருத்தமாகவும் சிறிது வெட்கமாகவும்கூட இருக்கிறது. வேறு எந்த எழுத்தாளரும் ஒரு பதிப்பாளரை இவ்வளவு இம்சிக்க இயலாது. எதற்குமே முகம் சுளிக்காமல் கேட்ட அனைத்தையும் செய்தளித்த ராம்ஜியை இந்நேரத்தில் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். உடன் இருந்து உதவிய வித்யா, செல்வகுமார், மகேஷ், விஜயன், ராஜன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
ஆயிரம் ரூபாய்க்கு மேலே விலை கூடிய ஒரு நாவலை எத்தனை பேர் ஆர்வமுடன் வாங்கிப் படிக்க நினைப்பார்கள் என்கிற – கவலையல்ல – சிறிய யோசனை நேற்று காலை வரை இருந்தது. கெட்டி அட்டைப் பதிப்பினும் வழக்கமான பதிப்பைத்தான் அதிகம் பேர் முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லை. நேற்றிரவு ராம்ஜி அளித்த புள்ளி விவரம் வேறு விதமாக இருந்தது. நேற்று நாளெல்லாம் நண்பர்கள் முன்பதிவு செய்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். எல்லோருக்கும் என் அன்பு.
இரண்டு வினாக்கள் நேற்று அதிகம் கேட்கப்பட்டன.
1. இந்த முப்பது சதவீத விலைக் குறைப்பு இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தானா? பிறகு இருக்காதா?
2. வெளியீட்டு விழா எப்போது, எங்கே? நேரில் சந்தித்துக் கையொப்பமுடன் பிரதியைப் பெற விரும்புகிறேன்.
இதில் முதல் வினாவுக்கு மட்டும் இப்போது பதிலளித்துவிடுகிறேன். விலைச் சலுகை இந்தப் பத்து நாள்களுக்கு மட்டும்தான். அதன் பிறகு வழக்கமான பதிப்பின் விலை ரூ. 1000 ஆக இருக்கும். கெட்டி அட்டைப் பதிப்பின் விலை ரூ. 1200. முப்பது சதவீதத் தள்ளுபடி விலை என்பது முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே.
இரண்டாவது வினாவுக்குச் சிறிது விளக்கமாக பதிலெழுத நினைக்கிறேன். எனவே தனியாக, பிறகு.
சலம் முன்பதிவுச் சுட்டிகள் கீழே உள்ளன. ஏப்ரல் 13 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். சித்திரை பிறந்ததும் நூல் உங்களை வந்தடையும்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.