
சலத்தின் முகப்பை நேற்று மாலை (மார்ச் 17) பதிப்பாளர் ராம்ஜி வெளியிட்டார். நாவல் என்பதாலும் அளவில் பெரிது என்பதால் விலை கூடும் என்பதாலும் முன்பதிவுச் சலுகை அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்நாவலின் முக்கியத்துவம் கருதி, இரண்டு விதமான பதிப்புகளைத் திட்டமிட்டிருக்கிறோம். ஒன்று, வழக்கமான பதிப்பு (softcover book). மற்றது கெட்டி அட்டைப் பதிப்பு (Hard bound).
சிக்கல் என்னவென்றால் இன்றைய தேதியில் கெட்டி அட்டைப் பதிப்பெல்லாம் எட்டிப் பிடிக்க இயலாத விலை உயர்வைத் தொட்டுவிட்டது. சாதாரண பதிப்பைவிடக் குறைந்தபட்சம் இருநூறு ரூபாய் கூடுதலாக இருக்கும். ஆனால் படித்து முடித்த பின்பும் நெடுநாள்களுக்குப் பாதுகாத்து வைக்க விரும்புவோருக்கு அந்தக் கட்டுமானமே உதவும்.
தனிப்பட்ட முறையில் எனக்கு கெட்டி அட்டைப் பதிப்பு அதிகம் விற்பனையாகும் என்ற எண்ணமோ எதிர்பார்ப்போ இல்லை. ஆனால் இந்தக் குறிப்பிட்ட நாவலுக்கு அப்படி ஒரு பதிப்பு இருப்பதே இதன் பின்னணியில் உள்ள தவத்துக்கு நியாயம் சேர்க்கும் என்று திடமாக நம்புகிறேன். என் இருப்புக்கும் செயல்பாட்டுக்கும் என் காலத்துக்குப் பிறகு பொருள் சொல்லக்கூடிய நாவல் இது. எனவே எனக்கு இது முக்கியம்.
இன்னும் சில நாள்களில் முன்பதிவுத் திட்டத்தை ஜீரோ டிகிரி பதிப்பகம் அறிவித்துவிடும். வழக்கமான பதிப்பு / கெட்டி அட்டைப் பதிப்பு இரண்டுமே முன்பதிவுக்கு வரும். இரண்டிலுமே முன்பதிவுச் சிறப்பு விலைக் குறைப்பு இருக்கும். வாசகர்கள் தமது விருப்பப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஒன்று. கெட்டி அட்டைப் பதிப்பு மீண்டும் எப்போது வரும் என்று தெரியாது. வருமா என்பதும் தெரியாது. இப்போதைய பதிப்பிலேயே மிகக் குறைந்த அளவு பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும் என்று நினைக்கிறேன். எனவே அதில் ஆர்வம் உள்ளவர்கள் தாமதம் செய்யாமல் முன்பதிவு செய்துகொள்வது நல்லது. மற்றபடி வழக்கமான பதிப்பில் தட்டுப்பாடு இருக்காது. எத்தனை பேர் கேட்டாலும் கிடைக்கும்; எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.
முன்பதிவு அறிவிப்பு விரைவில் வரும். வந்ததும் இங்கே சொல்கிறேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.