சலம் எதைப் பற்றிய நாவல்?

சலம் வெளிவருவது குறித்து அறிவித்த நாள் முதல் தினமும் ஒருவராவதுஇது எம்மாதிரியான நாவல்?’ என்று கேட்டுவிடுகிறார்கள். திரும்பத் திரும்ப எப்படி யோசித்தாலும் இதற்கு ஒரு வரியில் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

காலம் ஒரு கண்ணியில் கோத்துக் கட்டிய இரண்டு அதிமானுடர்களின் கதை என்று சொல்லலாம். அவர்கள்   வாழ்ந்த காலத்தின் கதை என்று சொல்லலாம். அக்காலத்தின் சாட்சி பூதமாக இருந்து இல்லாமல் போன சர்சுதி என்ற நதியின் கதை என்று சொல்லலாம். சர்சுதி இல்லாமல் போனதற்கு இருந்திருக்கக் கூடிய நியாயமான காரணத்தைத் தேடிச் சென்ற கதை  என்று சொல்லலாம்.

ஆரியர்களின் நான்கு வேதங்களில் நான்காவதாகக் குறிப்பிடப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் சர்சுதி (சரஸ்வதி என்பது பிற்கால வழக்கு.) நதிக்கரையில் வேத மந்திரங்களுடன்கூட வேறென்னவெல்லாம் தழைத்திருக்க முடியும் என்று அந்த வேதத்துக்குள் இருந்தே எடுத்த தகவல்களைக் கொண்டு இந்நாவலை எழுதினேன்.

இந்தியாவில் அதர்வ வேதம் பயில்பவர்கள், அறிந்தவர்கள் அதிகம் கிடையாது. காலத்தால் மூத்த ரிக்யஜுர்சாமம் மூன்றும் பெரும்பாலும்  துதிப் பாடல்களால் ஆனவை. சில நூற்றுக் கணக்கான கவிஞர்களால் (ரிஷிகள் என்பர்) பாடப்பட்டவை. அதர்வம் மட்டும்தான் பெரும்பாலும் ஒரு தனி மனிதனால், மனித குலத்தின் நலனைக் கருதி இயற்றப்பட்ட வேதம். அதைத்தான் பைசாச வேதம் என்று சொல்லிவிட்டார்கள்.

உண்மையில் மனித குலத்தை இன்றுவரை பீடித்திருக்கும் பல்வேறு பேதப் பிசாசுகளை விரட்டியடிக்கும் வழிகளைச் சொல்லித் தருவது அது. கடவுள்களை விடுத்து, மனிதனை நோக்கிப் பேசியதாலேயே அந்தப் பிரதி பெரும்பாலும் மறைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றினால் பிழையில்லை.

எண்ணிப் பாருங்கள். அதர்வன் ஒரு ரிஷி. அவ்வளவுதான் நமக்குத் தெரியவரும் விவரம்.  இதர பிரபல ரிஷிகளைப் போல அவனுக்கு வாழ்க்கைக் குறிப்போ, கதைகளோ, பிற்காலத்தில் எழுதப்பட்ட புராணஇதிகாசங்களில் இடமோ கிடையாது. எனவே, அதர்வ வேதத்தின் சாரத்தையும் குணத்தையும் தொனியையும் மட்டுமே கொண்டு அதர்வன் என்கிற கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்.

ரிக்வேதத்தில் சூத்திர குலத்தில் உதித்த கவசன் என்கிற ரிஷியின் பாடல் ஒன்று உண்டு. பல்லாயிரம் பாடல்களைக் (அல்லது மந்திரங்களை) கொண்ட வேதத்தில் பிராமணரல்லாத ஒரே ஒரு ரிஷியின் பாடல் என்றால், அதுதான். அது ஒன்று மட்டும்தான். அவரை அந்நாளைய பிராமணர்கள்ரிஷியாக ஏற்பதற்குமுன்பு நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவங்களைப் படித்தபோது இக்கதையின்  நாயகன் எனக்கு அகப்பட்டான்.

சர்சுதி என்கிற நதி, பாய்ந்த காலத்தில் பலமுறை தனது பாதையை மாற்றிக்கொண்டது குறித்தும் இறுதியில் இல்லாமலேயே போய்விட்டதன் காரணங்கள் குறித்தும் பேசும் தற்கால ஆய்வு முடிவுகளுடன் அதிசயமாக ஒத்துப் போகும் அச்சம்பவத்தின் பின்னணி,  இந்நாவலில் வரும் குத்சன் பாத்திரத்துக்கு அடர்த்தியையும் வீரியத்தையும் அளித்தது.

இதுதான். இவ்வளவுதான். இனத்தாலும் குலத்தாலும் சாதியாலும் பிறவற்றாலும் மனிதர்களைப் பிரிக்கத் தொடங்கியவரலாறு இல்லாத காலத்தின்மனிதர்களைப் புனைவின் நிகரற்ற சாத்தியங்களைக் கொண்டு மீளப் பிறக்கச் செய்து சர்சுதியின் கரையில் மீண்டும் நடமாடவிட்டுப் பார்த்தேன்.  நான் வரலாற்றை எழுதவில்லை. ஏனெனில், முன்பே சொன்னது போல வேத காலத்துக்கு வரலாறு கிடையாது. அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் கிடையாது. அறிவியல்பூர்வமான நிரூபணங்கள் கிடையாது. வரலாறு போலத் தோற்றமளிக்கும் ஒரு புனைவைத்தான் முயற்சி செய்தேன்.

சலம் பிறந்தது

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Recent Posts

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading