சாரு நிவேதிதாவின் இந்தக் கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். பத்திரிகைத் துறை முன்னைக்காட்டிலும் வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது போலிருக்கிறது. அதிர்ஷ்டவசமாகச் சிறிது காலமாகப் பத்திரிகை எழுத்திலிருந்து ஒதுங்கியிருப்பதால் என்னளவில் பாதிப்பின்றி இருக்கிறேன்.
சந்தடி சாக்கில் ஒரு சேதி சொல்லிவிடுகிறேன். ஓரிரு மாதங்கள் முன்னர் ஒரு பத்திரிகையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. விழா கொண்டாடுகிறோம்; நிறுவனத்துடன் உங்கள் தொடர்புகளை நினைவுகூர்ந்து ஒரு சிறு கட்டுரை தர இயலுமா என்று கேட்டார்கள்.
அப்போது நான் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். இணைய வசதி சரியாக இல்லாத இடம். இருப்பினும் கேட்ட மரியாதைக்கு எப்படியோ சமாளித்து எழுதி அனுப்பினேன்.
அவர்கள் வெளியிடுவதாகச் சொன்ன மலர் வெளியானதா, அதில் என் குறிப்பு இடம் பெற்றதா, யாராவது படித்தார்களா – ஒன்றும் தெரியாது, இன்றுவரை. இத்தனைக்கும் அங்குள்ள அத்தனை பேரும் என் நண்பர்கள். எழுதியதற்குப் பணம் வேண்டாம்; மரியாதைக்கு ஒரு பிரதி? ம்ஹும்.
நண்பர்கள் என்பதாலேயே இதுபற்றி நான் விசாரிப்பதைத் தவிர்த்தேன். தர்மசங்கடங்கள் எதற்கு?
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்திருக்கும் காலக்கட்டம். பத்திரிகைகளின் இடமும் இருப்பும் குறுகிக்கொண்டு வருவதை உணர முடிகிறது. இனியும் அச்சில் பேர் பார்க்கும் ஆவலற்ற எழுத்தாளன் பத்திரிகைகளை மறந்துவிட்டு மாற்று வழிகளில் செயல்படுவதே சரி என்று படுகிறது.
எழுத்தாளன் எந்த பொந்தில் தன்னைக் குறுக்கிக்கொண்டு இயங்கினாலும் அவனது வாசகர்கள் அவசியம் தேடி வருவார்கள். எறும்புக்கு இனிப்பும் எலிக்கு மசால்வடையும் எங்கிருக்கிறது என்று யாரும் சொல்லித் தருவதில்லை.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.