லா.ச.ரா : அணுவுக்குள் அணு

லாசரா எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது நான் விவேக் ரூபலாவின் கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில் அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான். உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான். அத்தகு ரத்த தினம் ஒன்றில் எங்கள் குடும்ப நண்பர் கவிஞர் நா.சீ. வரதராஜன், ‘நீ நிறைய படிக்கறியாமே? லாசரா படிச்சிருக்கியா?’ என்று கேட்டார்.

‘ராஜேஷ்குமார் மாதிரி சூப்பரா எழுதுவாரா சார்?’

அவர் பதில் சொல்லவில்லை. மாறாக, பைண்ட் செய்யப்பட்ட பழைய புத்தகம் ஒன்றை எடுத்துக் கொடுத்து, ‘முடிஞ்சா படிச்சிப் பாரு. புரியலன்னா கவலப்படாத. அப்பறமா புரியும்’ என்று சொன்னார். இந்த அறிமுகமே எனக்கு திகிலாக இருந்தது. சரி, ராஜேஷ்குமாரைவிடப் பெரிய ஆள் போலிருக்கிறது என்று எடுத்து வந்து புரட்ட ஆரம்பித்தேன். அது ஜனனி சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு. தடிதடியான தாள்கள். பழுப்பேறி இருந்தது. முதல் பக்கத்தில் லாசராவின் ஆட்டோகிராஃப் இருந்தது. அந்தக் கையெழுத்து எனக்குப் பிடித்தது. இஸ்திரி செய்த அங்கவஸ்திரத்தைக் கொடியில் போட்ட மாதிரி எழுத்து.

ஆனால் கையெழுத்து கவர்ந்த அளவுக்குக் கதை கவரவில்லை. முதல் சிறுகதையின் முதல் பத்தியிலேயே நான் காலி. அணுவுக்குள் அணுவாம் பரமாணுவுக்குள் எனக்கு அப்போது நுழையத் துப்பில்லை.

ஆனால் நான் லாசராவின் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு திரிந்ததைக் கண்ட ஒரு சிலர் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தர்கள். அந்த லுக் எனக்குப் பிடித்தது. புரியாவிட்டாலும் இந்த ஆள் நமக்கு உதவுவார் என்று தோன்றியது.

இதே மாதிரி ரகத்தில் வேறு யார் யாரெல்லாம் உண்டு என்று எனக்குத் தெரிந்த மாபெரும் இலக்கிய ஏஜெண்டான லீலா லெண்டிங் லைப்ரரியின் உரிமையாளர் சாமியப்பனிடம் கேட்டபோது அவர் அம்மா வந்தாளை எடுத்துக் கொடுத்தார்.

பகல் பதினொரு மணிக்கு அதைப் படிக்க ஆரம்பித்து மூன்று மணிக்கு முடித்தது முதல் எனக்கு நிலைகொள்ளாமல் போய்விட்டது. அந்தக் கதை என்னவோ செய்தது. இரவு தூக்கம் வரவில்லை. மறுநாள் மீண்டும் படித்தேன். மேலும் சிலது புரிவது போலிருந்தது. மூன்றாம் நாள் மறுபடியும். முற்றிலும் பிடிபட்டு கிறுகிறுத்துவிட்டது.

பிசாசு அடித்த மாதிரி அது முதல் ஜானகிராமனின் அத்தனை நாவல்களையும் தேடிப் பிடித்து மூன்று மாதங்களில் படித்துத் தீர்த்தேன். அதன் பிறகுதான் மீண்டும் லாசராவுக்கு வந்தேன்.

அணுவுக்குள் அணு.

அப்போதும் எனக்கு ஜனனி பிடிபடவில்லை. ஆனால் த்வனி பிடித்தது. கதை புரிதலைவிட இம்முறை மொழியை ரசிக்க ஆரம்பித்தேன். கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது என்னும் வரியை நாளெல்லாம் நினைத்து வியந்துகொண்டிருந்தேன். லாசராவின் பெண்களையும் ஜானகிராமனின் பெண்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் உண்டானது. என்னால் ஜானகிராமன் காட்டிய பெண்களை சுலபமாகத் திருட்டுக்காதல் செய்ய முடிந்ததைப் போல ராமாமிருதம் சுட்டிய பெண்களை நெருங்க முடியவில்லை. அது பயமில்லை. மிரட்சி. சுநாதனி போன்ற ஒரு பெண்ணை வாழ்வில் என்றேனும் சந்திக்க நேர்ந்தால் விழுந்து சேவித்துவிடுவேன் என்று தோன்றியது.

சுமார் பத்து முறையாவது திரும்பத் திரும்பப் படித்து அந்தத் தொகுப்பை ஒருவாறு உள்வாங்கியபிறகு ஒரு நாள் லாசராவுக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டேன். அப்போது அவர் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் இருந்தார். ‘எனக்குப் புரியவில்லை; ஆனால் படிக்காமல் இருக்கமுடியவில்லை’ என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். மிகவும் மொக்கையான மொழியில் இதைச் சுற்றி வளைத்துத் தெரிவித்திருந்தேன். அவரிடமிருந்து நாலு நாளில் பதில் கார்ட் வந்தது.

சிரஞ்சீவி ராகவனுக்கு, ஆசிகள் என்று ஆரம்பித்து அஞ்சலட்டையின் ஒன்றரைப் பக்கத்திலும் இடைவெளியின்றி எழுதியிருந்தார். அதே கையெழுத்து. அதே அழகு. அதில் ஒருவரி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. எல்லாம் புரிந்தேதான் தீரவேண்டுமென்று என்ன கட்டாயம்? என்றாவது புரியட்டும். அவசரப்பட வேண்டாம். இறுதிவரை புரியாவிட்டாலும் நஷ்டமில்லை.

இது என்னைச் சீண்டியது. இந்த மனிதரைப் புரிந்துகொள்ளாமல் அடுத்த வேலை இல்லை என்று முடிவு செய்து மீண்டும் மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். அவரது மாய மொழியின் அடர்ந்த வலைப்பின்னலைக் களைந்து கதையின் அந்தராத்மாவைத் தொடுவதுதான் அங்கே எனக்கிருந்த ஒரே ட்ராப். மொழி போதையிலேயே திளைத்து உள்ளே போகாதிருந்ததுதான் நான் செய்த தவறு. அதைப் புரிந்துகொண்ட மறுகணமே லாசராவின் விஸ்வரூப தரிசனம் எனக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டது.

தமிழ் சமூகத்தில் அப்போதுதான் குடும்பம் என்னும் அமைப்பு ஆங்காங்கே சிதைய ஆரம்பித்திருந்தது. தனிக்குடித்தனத் தனியாவர்த்தனங்கள் பரவலாக அரங்கேறத் தொடங்கியிருந்தன. லாசராவின் கதைகள் எனக்குக் குடும்பத்தின் மீதான பிரேமையை உருவாக்கியளித்தன. உறவுக்கார மகாஜனங்களின் குற்றம் குறைகளையும் ரசிக்கப் பழகினேன். மனிதன் என்பவன்தான் யார்? ஏராளமான பிசிறுகளின் நேர்த்தியான தொகுப்பே அல்லவா? சிக்குப் பிடித்த தலைமுடியை உட்கார்ந்து எண்ணெய் தடவி வாரி, சல்லாத்துணி போலாக்குவதில் ஒரு லயம் உள்ளது. சிக்கு பிடிக்கத்தான் செய்யும். வாரிக்கொண்டேதான் இருக்கவேண்டும். மொட்டையே சுகமென்றால் சொல்ல ஒன்றுமில்லை. லாசராவின் ஒரு கதாநாயகி பிரமாதமான கூந்தலழகி. இறுதியில் அவள் உயிரைக் கொடுத்த இறைவனுக்கு மயிரைக் கொடுக்கிற தருணம் ஒன்று கதையில் வரும். மழித்தாலும் அது விளைந்துவிடுவதுபோலத்தான் உறவென்னும் நினைவுப் போதம்.

பின்னர் அவருக்கு எத்தனையோ தபாலட்டைகள் அனுப்பியிருக்கிறேன். அவரும் சளைக்காமல் பதில் போடுவார். கதைகள் மீதான எனது புரிதல் அளவு உயர்ந்து வருவதை ஒரு கடிதத்தில் பாராட்டியிருந்தார். அவரது சுபமங்களா பேட்டி வெளியானபோது, ‘இதற்குமேல் தாங்காது; உங்களை நேரில் சந்திக்கவேண்டும்’ என்று எழுதினேன். வரச் சொல்லி வீட்டு விலாசத்தைக் குறிப்பிட்டு குரோம்பேட்டையில் இருந்து எப்படி வருவது என்று வழியெல்லாம் விளக்கியிருந்தார்.

அந்த நாளை என்னால் மறக்க முடியாது. முதல் பார்வையில் எனக்கு அவர் ஒரு மகரிஷி போலக் காட்சியளித்தார். கண்ணைச் சுருக்கி என்னைப் பார்த்தார். சரேலென ஒரு புன்னகை. உட்காரச் சொல்லி நிறைய பேசினார். என்ன படிக்கற. அப்பா என்ன பண்றார். மூத்தவனா நீ? கூடப் பொறந்தவா எத்தன பேர். எழுதறியா. ஜாக்கிரதை. படிப்ப கெடுத்துண்டுடாம எழுது. சினிமா பாப்பியா. குறைச்சிக்கோ. ராத்திரி ரொம்ப நேரம் கண்ணு முழிக்காத.

என்னைப் பொறுத்தவரை அவர் மகரிஷிதான். ஆனால் அந்த முதல் சந்திப்பிலேயே என் அப்பாவின் அன்னியோன்னியத்தை அவரிடம் காண முடிந்தது. இது எனக்குப் பெரிய வியப்பை அளித்தது. வாழ்வில் நான் சந்தித்த கொம்பு முளைக்காத முதல் எழுத்தாளர். (அடுத்தவர் அசோகமித்திரன்.)

லாசராவைப் படிக்கத் தொடங்கியபிறகு வெகுகாலம் நான் வேறெந்த எழுத்தாளரையும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மற்ற எதுவுமே வேண்டாம் என்று நினைக்கச் செய்துவிடும் எழுத்து அவருடையது. மொழியின் மீதான அவரது சாகசம் திரும்பத் திரும்ப இங்கு பேசப்பட்டிருக்கிறது. உண்மையில் வாழ்வின்மீது அத்தகு சாகசம் நிகழ்த்தாமல் மொழியில் அது பிரதிபலிக்க வாய்ப்பில்லை.

ஜென் குரு ஒருவர் இறக்கும் தருவாயில் ஆசைப்பட்டு ஓர் இனிப்புப்பண்டம் வாங்கி வரச் சொல்லி உண்டு முடித்த வேளையில் அவரது சீடர்கள் கேட்டிருக்கிறார்கள். ‘குருவே, இறுதியாக ஒரு சொல்லை அளியுங்கள்.’

குரு சொன்னார், ‘அப்பா! என்ன ருசி!’

லாசராவின் எழுத்தில் நான் அடைந்தது அதுதான். வாழ்வின் மீதான பூரண ருசி.

[வலம் – டிசம்பர் 2016 இதழில் வெளியானது]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி