அஞ்சலி: கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார்

புத்தகக் காட்சியில் ஞாநி ஸ்டால் வாசலில் சிவகுமார் அமர்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் சட்டென்று இழுத்து அருகே உட்காரவைத்து, ‘அப்றம்? எளச்சிட்டாப்டி?’’

நான் இளைத்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தபோது அழகியசிங்கரிடம் இருந்து போன் வந்தது. விருட்சத்தின் 101வது இதழை வெளியிட வரவேண்டும் என்று சொன்னார்.

‘சிவா, மௌலி கூப்பிடறார். விருட்சம் வெளியிடணுமாம். வாயேன்கூட.’

அன்று விருட்சத்தின் 101வது இதழை நான் வெளியிட அவந்தான் பெற்றான். பிறகு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். நான் எழுத உத்தேசித்திருக்கும் நாவலின் ஒருவரியைச் சொல்லப் போக, அடுக்கடுக்காக நூறு கேள்விகள் கேட்டான். முக்கால் மணி நேரம் சென்றிருக்கும். ‘நல்லாருக்குய்யா. நீ எழுதிருவ. என்னைய மாதிரி சோம்பேறி இல்ல’ என்றான்.

‘நீ ஏன் இப்படி இருக்க? தினமலர் வேலைய ஏன் விட்ட?’

‘போதுமே, இப்ப என்ன? அதவிடு. ஒரு செம சப்ஜெக்ட் இருக்கு. ஆதிமங்கலத்து விசேஷம், குணசித்தர்களையெல்லாம் தூக்கி சாப்ட்டுரும். சொல்றேன் கேக்கறியா? தனித்தனி சேப்டரா படிச்சா கட்டுரை. சேத்துப் படிச்சா நாவல்.’

‘சொல்லு.’

சொன்னான். அவன் பிறவிக் கலைஞன். அனுபவங்களை வெகு அநாயாசமாகக் கலையாக்கத் தெரிந்தவன். விதை தூவும் விவசாயியின் லாகவத்தில் மொழியைக் கையாளுவான். அரை வட்ட விரிப்பில் வீசியெறியப்படும் வித்து மொட்டுகள் தமக்கான மண்ணைத் தேடிப் புதைவதுபோன்றது அவன் மொழி. கவிதைக்கும் உரைநடைக்கும் இடையில் தனக்கென ஒரு பிரத்தியேக மயக்க வெளியை உருவாக்கி வைத்திருந்தவன். அவனது சொற்களின் சங்கீதம் மட்டும் எப்போதும் தனித்துக் கேட்கும். அவன் என்ன எழுதினாலும் ரசிப்பேன். எப்போதாவது மோசமாக எழுதினாலும் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் எனக்கு அவனைத் தெரியும். குறை நிறைகளோடு. தகுதி தகுதியின்மைகளோடு. சுமார் ரகத்தில் அவனிடமிருந்து என்னவாவது ஒன்று வந்திருக்கிறதென்றால், பயல் பாக்கெட்டில் கொஞ்சம் காசு இருக்கிறது என்று பொருள். அந்தக் கதையோ கட்டுரையோ கெட்டுப் போனால் என்ன? அவன் சந்தோஷமாக இருக்கிறான். அது போதும் என்று எண்ணிக்கொள்வேன்.

‘சொல்லு. இத எங்க டிரை பண்ணலாம்? விகடன் வேணான்னு படுது. இப்ப அதுல வர்ற பத்திய எல்லாம், படிக்கறப்பவே ஜன்னி கண்டுடுது…’

‘உன்னோடது உருப்படியா இருக்கா? அது வரைக்கும் பாரு போதும். கண்ணண்ட்ட பேசு. அவருக்கு இது பிடிக்கும்னு படுது. இல்லன்னா, சிவராமன்ட்ட பேசு. ரசனை உள்ள ஆளு. நீயும் ஃப்ரீயா எழுதலாம். குங்குமத்துல வந்தாலும் ரீச் நல்லாவே இருக்கும்.’

பேசினானா தெரியாது. இன்று அவன் இல்லை என்று செய்தி வருகிறது.

கண்காட்சியில் சந்தித்தபோது, அவன் ஒரு வேலையில் நிலைக்கமாட்டாத ஆதங்கத்தில் கொஞ்சம் நிறையவே கடிந்துகொண்டேன். என்னைப் பற்றிய கடைசி நினைவு எனது கோபத்தைக் குறித்துத்தான் அவன் மனத்தில் பதிந்திருக்கும் என்பது இப்போது வருத்தமாக இருக்கிறது.

Share