பேட்டா

இன்றைக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று தணிகாசலம் சொல்லியிருந்தான். எத்தனை நாள் பேட்டா என்று உடனே கேட்கத் தோன்றியதைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ரொம்ப நன்றி சார் என்று மட்டும் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தான் சுப்பிரமணி.

மனித மனம்தான் எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது! மூன்றாண்டு காலமாக வேலையே இல்லை. வீட்டில் சும்மா படுத்துக் கிடந்ததில் நாடி நரம்புகளெல்லாம் உலர்த்தாமல் சுருட்டிப் போட்ட ஈரத்துணி போலாகிவிட்டிருந்தது. நாறுதுடா.. கிட்ட வரவே முடியல; போய்க்குளியேன் என்று அவ்வப்போது அம்மா சொல்லுவாள். சுப்பிரமணிக்கு அதென்னவோ குளிக்காததால் எழுகிற துர்நாற்றமாகத் தோன்றியதில்லை. வெளியே காண்பிக்க முடியாத துக்கத்துக்கு ஒரு வாடையுண்டு. துக்கம் வெளிப்பட்டு விடக்கூடாது என்று மேலுக்குப் பூசியெழுப்பும் சவடால்களின் பர்ஃப்யூம் வாடை அதனோடு சேரும்போது மேலும் சகிக்கமுடியாததாகிவிடும். என்றாவது ஒருநாள் எனக்கும் விடியும் என்று எத்தனை காலமாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று ஒரு கணம் நினைத்துப் பார்த்தான். சரியாக நினைவில்லை.

2013 பிப்ரவரி 27ம் தேதி சுப்பிரமணிக்கு ஒரு குறைந்த பட்ஜெட் படத்தில் வேலை செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஏழெட்டு மாத அலைச்சலுக்குப் பிறகு யாரோ சொல்லி யாரோ வழி மொழிந்து எப்படியோ கிடைத்துவிட்ட கடைசி உதவியாளன் வேலை. கிளாப் அடிக்கிற பணிகூட இல்லை. இயக்குநரின் கைப்பையை எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டு அவர் அருகே நிற்கிற வேலை. அவர் வலக்கையை நீட்டினால் வியர்வை துடைத்துக்கொள்ள கர்ச்சிப் எடுத்துத் தரவேண்டும். இடக்கையை நீட்டினால் சிகரெட். டேய் என்று குரல் மட்டும் கொடுத்தால் ரத்தக்கொதிப்பு மாத்திரை. எங்க அவன் என்று யாரிடமாவது கேட்டால் சாப்பாட்டு கேரியரை எடுத்துப் பிரித்து வைத்து இலை போட்டுத் தயாராக வேண்டும். முதலில் அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் இரண்டு வருடங்கள் ஒரு தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றியிருக்கிறான். காஸ்ட்யூம் அசிஸ்டெண்ட்டாகப் பணி. அது கெட்டுப் போனதிலிருந்து வேறு வாய்ப்பில்லாமல் அலைந்து களைத்து விழுந்தவன் தான். மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. தற்செயலாகக் கிட்டிய வாய்ப்பு இது. உண்மையிலேயே பெரிய விஷயம்.

இயக்குநர் நல்ல மனிதர்தான். நடு வயதுக்குப் பிறகு இயக்குநராகி சுமாரான ஒன்றிரண்டு வெற்றிப் படங்களை அளித்தவர். அதற்குப் பிந்தைய ஒரு பெரும் தோல்வி அவரை மீண்டும் அறிமுக இயக்குநராக்கிவிட்டது. இந்தப் படம் எப்படியாவது ஓடவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் மதிய உணவின்போது. இது ஓடினா எனக்கில்லடா; உங்க எல்லாருக்குமே இதான் லைஃப் என்பார்.

லைஃப் என்றால் என்னவென்று சுப்பிரமணி அப்போதெல்லாம் தீவிரமாக சிந்திப்பான். இந்தப் படம் ஓடினால் இயக்குநருக்கு அடுத்த வாய்ப்புக் கிடைக்கலாம். அதில் சுப்பிரமணி கிளாப் அசிஸ்டெண்ட் தரத்துக்கு உயரலாம். சம்பளமெல்லாம் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்றாலும் தினசரி பேட்டா நிச்சயம். ஒரு நாளைக்கு நூறு ரூபாய். படப்பிடிப்பு தினமென்றால் மாலையே கிடைத்துவிடும். டிஸ்கஷன் சமயம் என்றால்தான் சிக்கல். தினமும் அலுவலகத்துக்குப் போய் கதை விவாதம் செய்வதை வேடிக்கை பார்த்து, இண்டு இக்கு எடுபிடிப் பணிகளைச் செவ்வனே செய்து முடித்து இரவு ஒன்பது ஒன்பதரைக்குக் கிளம்பும்போது அக்கவுண்டண்ட் இருக்கமாட்டார்.

நீ வாங்கலியா சுப்பிரமணி? அக்கவுண்டண்டு நாலரைக்கே பேட்டா குடுத்துட்டாரே.. நாங்கல்லாம் வாங்கிட்டோம். நீ நாளைக்கு சேத்து வாங்கிடு என்று சொல்லிவிட்டு மூத்த உதவியாளர்கள் போய்விடுவார்கள். தனக்குத் தெரியாமல் இவர்கள் மட்டும் எப்போது சென்று பேட்டா வாங்கி வருகிறார்கள் என்பது சுப்பிரமணிக்குப் புரிந்ததே இல்லை. இயக்குநரிடம் சொல்லலாம். சார் எனக்கு நாலு நாளா பேட்டா அமௌண்ட் வரல சார். அவர் ஏற இறங்க ஒரு பார்வை பார்ப்பார். பிறகு ஏதாவது சொல்லியாகவேண்டும் என்று தோன்றினால், நாளைக்கு வாங்கிரு என்பார்.

கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது. இந்த வாய்ப்புக்கு நூறு பேர் வெளியே காத்திருக்கிறார்கள். யாரும் சம்பளத்தை எண்ணிக்கொண்டு உதவி இயக்குநர் வேலைக்கு வருவதில்லை. கனவு போல என்னவோ. சுப்பிரமணியும் அப்படி வந்தவன் தான். ஆனாலும் இயக்குநரிடம் சேர்ந்த முதல் வாரமே தனக்கும் பேட்டா கொடுப்பார்களா என்கிற ஆவலாதி எழுந்துவிட்டது.

மெதுவாகத் தன் சீனியர் ஒருவனிடம் இது குறித்துக் கேட்டபோது, என்ன இப்படி கேக்கற? நீ அசிஸ்டெண்டுதான? கண்டிப்பா உண்டு சுப்பிரமணி. ப்ரொடக்‌ஷன் மேனேஜர்ட்ட டைரக்டர் ஒரு வார்த்த சொல்லிட்டா போதும் என்ற பதில் வந்தது.

டைரக்டர் சொல்லவேண்டும். ஆனால் அவர் எப்போது சொல்லுவார்?

அவரிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. அவரே நாற்பதாயிரம் அட்வான்ஸ் கேட்டு, அது இன்னும் கிடைக்காத கடுப்பில் இருப்பதாக வேறொரு சீனியர் சொல்லியிருந்தான். டைரக்டருக்கேவா என்று சுப்பிரமணி ஆச்சரியப்பட்டான். அட நீ வேறய்யா. இந்த ப்ராஜக்டுல தலைவருக்கு சம்பளமே மூணார்ரூவாதான். தெரியுமா ஒனக்கு? என்று அவன் கேட்டபோது சுப்பிரமணி வாயடைத்துப் போய்விட்டான்.

இரண்டு சுமார் ரக வெற்றிப்படங்களுக்குப் பிறகு ஒரு பெரும் தோல்விப்படம். அடுத்த படியாகக் கிடைத்த ப்ராஜக்டில் வெறும் மூன்றரை லட்சம் சம்பளம். படம் ஆறு மாதத்தில் முடியலாம். ஒரு வருடமாகலாம். மேலும்கூட இழுக்கலாம். முடிந்த பிறகு வெளியாக வேண்டும். அதன்பின் ஓடவேண்டும். மூன்றரை லட்சம்.

சுப்பிரமணி அதன்பின் டைரக்டரிடம் தனது பேட்டா குறித்துக் கேட்பதில்லை என்று முடிவு செய்துகொண்டான். எப்படியோ டைரக்டருக்கே இந்த விவகாரம் மனத்தில் பட்டிருக்கவேண்டும். அவனுக்கே தெரியாத ஏதோ ஒரு நாள் அவர் அக்கவுண்டிடம் சுப்பிரமணியும் தனது உதவியாளன் தான்; புதிதாகச் சேர்ந்தவன் என்று சொல்லிவைக்க, ஒரு வெள்ளிக்கிழமை மாலை அக்கவுண்டண்ட் அவனை அழைத்து, இந்தாப்பா ஒனக்கும் இனி பேட்டா உண்டு என்று நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவன் கையில் வைத்தார்.

அன்றிரவெல்லாம் சுப்பிரமணியின் மனத்தில் டைரக்டர் ஒரு தெய்வமாகத் தெரிந்தார். சாகும்வரை அவரைவிட்டு விலகவே கூடாது என்றெல்லாம் எண்ணிக்கொண்டான்.

எல்லாம் ஒரு சில தினங்களுக்குத்தான். இடையில் நாலு நாள் ஷூட்டிங் போட்டுவிட்டு திரும்பவும் ஒரு பிரேக் விட்டார்கள். நாளைலேருந்து ஆபீஸ் வந்துருங்கடா என்று சொல்லிவிட்டு டைரக்டர் போய்விட்டார். ஓரிரு வாரங்களில் ஒரு பத்து நாள் ஷெட்யூல் இருக்கும் என்று மூத்த உதவி இயக்குநர் சொல்லியிருந்தபடியால் சுப்பிரமணி மறுநாள் முதல் உற்சாகமாக அலுவலகத்துக்குப் போய்வரத் தொடங்கினான்.

ஆனால் பேட்டா வரவில்லை. முதல் நாலைந்து நாள் சாப்பாட்டுக் காசு மட்டும் மொத்தமாகக் கொடுத்தார்கள். அதன்பிறகு மதிய வேளைகளில் அக்கவுண்டண்ட் தன் இருக்கையில் இருப்பதில்லை. பெரும்பாலும் அவர் தயாரிப்பாளரின் அறையில் இருந்தார். இயக்குநர் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வர ஆரம்பித்தார். அவர் வந்துவிட்டால் உதவியாளர்கள் அவரோடு உட்கார்ந்துவிட வேண்டியது. சாப்ட்டிங்களா என்று சும்மா ஒரு வார்த்தை கேட்டுவிட்டு அவர் கதை பேசத் தொடங்கிவிடுவார். அக்கவுண்டண்ட் அப்போதுதான் தன் இருக்கைக்கு வருவார்.

அவனுக்கு மாதச் சம்பளம் ரூபாய் ஒன்பதாயிரம் என்று இயக்குநர் சொல்லியிருந்தார். முதல் மாதம் மட்டும் அந்தச் சம்பளம் சரியாக வந்துவிட்டது. அதன்பின் சம்பளம் என்ற ஒன்றை யாரும் நினைப்பதில்லை. இயக்குநரின் நான்கு உதவியாளர்களுக்குமே ஐந்து மாதங்களாகச் சம்பளம் கிடையாது. இயக்குநருக்கு இந்த சங்கதி தெரியும். இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கடா. நமக்கு இந்த ப்ராஜக்ட் சக்சஸ் ஆவுறதுதான் முக்கியம். அடுத்ததுல சேத்து வெச்சி அள்ளிரலாம் என்றார். அது ஒன்றும் நம்பிக்கை தரத்தக்க சொல்லாக யாருக்குமே தோன்றியதில்லை. ஆனாலும் தினசரி பேட்டா உண்டு. ஒரு மனிதன் ஒருநாள் உயிர் வாழ நூறு ரூபாய் போதும்.

அதற்கும் பிரச்னை வந்தபோதுதான் சுப்பிரமணிக்குப் பதற்றமானது. அவனது சம்பாத்தியம் குறித்து வீட்டில் அம்மா அதுவரை கேட்டதில்லை. மூன்று வருடங்களாக எந்த வாய்ப்புமின்றி சும்மா கிடந்தவன் வேலை என்ற ஒன்றில் இருப்பதே போதும் என்று நினைத்தாள். அடுத்த வருடம் எப்படியாவது தங்கைக்குக் கல்யாணம் செய்துவிடவேண்டும் என்று அவ்வப்போது அவள் அறிவிக்கும்போதுதான் அவனுக்கு அடி வயிற்றில் பயம் திரண்டு எழும்.

இருபத்தியெட்ட வயதாகிவிட்டது. இதுவே மிகவும் தாமதம். இன்னும் தள்ளிப் போட்டுக்கொண்டிருப்பது அபத்தம். ஆனால் ஒரு கல்யாணம் என்பது பெரும் செலவு. வீதி வாழ் மக்களுக்கு அம்மா ரவிக்கை தைத்துக் கொடுத்து, பார்டர் அடித்துக்கொடுத்து சம்பாதிக்கும் பணமெல்லாம் கல்யாணச் செலவுக்குக் காணாது. அவன் பங்குக்கு என்னவாவது செய்ய முடிந்தால் நல்லதுதான். அம்மா இதுவரை வாய் திறந்து கேட்டதில்லை. தங்கையும் குத்திக்காட்டிப் பேசியதில்லை. எல்லோரும் ரொம்ப நல்லவர்களாக இருப்பதே ஒரு பிரச்னைதான்.

சுப்பிரமணியே ஒரு நாள் தன் அம்மாவிடம் சொன்னான். இந்தப் படம் நல்ல சப்ஜெக்டும்மா. கண்டிப்பா இருவது நாள் ஓடிடும். அடுத்த படத்துல எனக்கு இருவதாயிரம் சம்பளமாச்சும் கன்ஃபர்மா இருக்கும்.

அவனது அம்மா பதிலேதும் சொல்லவில்லை. சாப்பிட வா என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

0

ஓரிரு வாரங்களில் ஆரம்பமாகிவிடும் என்று சொல்லப்பட்ட அந்த பத்து நாள் ஷெட்யூல் தள்ளிப் போனது. தயாரிப்பாளர் ஃபாரின் போயிருக்கிறார் என்று முதலில் காரணம் சொன்னார்கள். அதன்பின் ஹீரோயின் டேட் பிரச்னை என்றார்கள். இயக்குநருக்கு டெங்கு காய்ச்சல் வந்து மூன்று வாரங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். அந்த நாள்களிலெல்லாம் சுப்பிரமணி அவரோடுகூட மருத்துவமனையிலேயே இருந்தான். அவரது மனைவி, மகள் இருவரும் பழக்கமானது தவிர சொல்லிக்கொள்ளும்படியான சாதனை ஏதும் அப்போது அவனால் செய்ய முடியவில்லை.

இயக்குநருக்கு காய்ச்சல் சரியாகி வீட்டுக்குப் புறப்பட்டபோது வழக்கத்தில் இல்லாத விதமாக அவனைப் பார்த்து மிகவும் சிநேகபாவத்துடன் ஒரு புன்னகை செய்தார். தோளில் மெல்லத் தட்டிக் கொடுத்தார். இரண்டில் எது சம்பளம் எது பேட்டா என்று அவனுக்குப் புரியவில்லை. இரண்டு நாளில் மீண்டும் வேலை ஆரம்பித்துவிடலாம் என்று அவர் சொன்னார்.

மீண்டும் சுப்பிரமணி அலுவலகத்துக்குப் போகத் தொடங்கினான். டேய் அடுத்த ஃப்ரைடேலேருந்து ஷூட்டிங்டா. பன்னெண்டு நாள் கண்டின்யுவஸா போறோம். முடிச்சா அப்பறம் ஒரு சாங்கு. ஒரு ஃபைட்டு. படம் ஓவர் என்றான் சீனியர் உதவியாளன். மிச்சமுள்ள காட்சிகளை அக்குவேறு ஆணி வேராக அலசி ஆராய்ந்து செப்பனிடும் பணிகள் வெறித்தனமாக நடக்கத் தொடங்கின. இம்முறை சாப்பாட்டுக் காசு ஒழுங்காகக் கொடுக்க ஆரம்பித்தார்கள். சார் பேட்டா என்றபோதுதான் மொத்தமா சேத்து வாங்கிக்கப்பா என்ற பதில் வந்தது.

சுப்பிரமணி கணக்குப் போட்டுப் பார்த்தான். இந்த பிரேக்கில் இதுவரை அனைவரும் இருபத்தி ஒன்பது நாள் அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்கள். இரண்டாயிரத்தித் தொள்ளாயிரம் ரூபாய் என்பது பெரிய பணம். மொத்தமாகக் கிடைத்தால் அப்படியே அம்மாவிடம் கொடுக்கலாம். வீட்டுக்குப் பணம் கொடுத்துப் பலகாலமாகிவிட்டது அவன் நினைவுக்கு வந்தது. உறுத்தியது.

ஆஸ்பத்திரியில் இயக்குநரோடுகூட இருந்த நெருக்கத்தில் இதைப் பற்றி மெதுவாக ஒருநாள் அவரிடம் பேச்செடுத்தான். ஆமால்ல? நானே கேக்கணுன்னு நெனச்சேன். இரு வரேன் என்று சொல்லிவிட்டு அவரே அக்கவுண்டண்டின் அறைக்குப் போனபோது சுப்பிரமணிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

ஆனால் அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த இயக்குநர் போன காரியத்தைப் பற்றி ஏதும் சொல்லாமல் ஹீரோயினுக்குத் தைக்கும் டெய்லரை உடனே தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டார். அவனுக்கு அழுகை வந்தது. தன் இயலாமை குறித்த சுய இரக்கம் மேலோங்கிவிட்டிருந்தது. எதிர்காலத்தில் தன்னாலும் ஓர் இயக்குநராகிவிட முடியும் என்று அநேகமாக தினமும் எண்ணிக்கொண்டிருந்தது போக, தங்கை திருமணம் முடிகிற வரைக்குமாவது இந்த சனியனை விட்டு விலகி வேறு ஏதாவது வேலைக்குப் போகலாமா என்று யோசிக்க ஆரம்பித்தான்.

எத்தனை நேரம் அங்கேயே அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்தோம் என்று அவனுக்கே தெரியவில்லை. சுய நினைவு திரும்பி சுற்றுமுற்றும் பார்த்தபோது அனைவருமே வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். சுப்பிரமணி அவசரமாக கர்ச்சிப்பை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு எழுந்தான். அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தபோது அக்கவுண்டண்ட்டும் அப்போதுதான் வெளியே வந்தார்.

சுப்பிரமணி, ஒரு நிமிஷம்.

சார் என்று பதைப்போடு அவர் அருகே ஓடினான்.

வீட்டுக்கா போற? நீ சாலிக்கிராமம்தான?

ஆமா சார்.

போற வழில என்னை டிராப் பண்ணிடுறியா.. வண்டி இருக்கில்ல?

வண்டி உண்டு. அது இயக்குநரின் பழைய மோட்டார் சைக்கிள். அவசர எடுபிடிப் பணிகளுக்காக அவனிடம் அதை அளித்திருந்தார்.

வண்டி இருக்கு சார். வாங்க சார்..

போகிற வழியில் அக்கவுண்டண்ட் அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தார். முப்பத்தி ஐந்து வயதாகியும் இன்னும் அவருக்குத் திருமணமாகவில்லை. ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. சம்மந்தம் பேச வருகிறவர்களெல்லாம் சினிமா கம்பெனி என்றால் ஓடிவிடுகிறார்கள். சம்பளம் பதினையாயிரம்தான் என்றால் தலைக்குமேலே கும்பிடு போட்டுவிடுகிறார்கள்.

பிரச்னைதான் சார் என்றான் சுப்பிரமணி.

இப்ப ஒரு ஜாதகம் வந்திருக்கு சுப்பிரமணி. பொண்ணுக்கு இருவத்தியெட்டு வயசாயிருக்குதாம். ரொம்ப சுமாரான ஃபேமிலிதான். அவங்கம்மா டெய்லரிங் பண்றாங்களாம். அண்ணன் ஒருத்தன் இருக்கானாம். அவன் சினிமாவுல இருக்கறாப்பல. அதனால இந்த சம்மந்தம் ஒர்க் அவுட் ஆயிரும்னு எங்கம்மா நினைக்கறாங்க..

ஒரு கணம் சுப்பிரமணிக்குத் தலை சுற்றியது. தன் கட்டுப்பாட்டை மீறி ஏதேதோ பேசிவிடுவோமோ என்று பயந்தான். அடக்கிக்கொண்டு, நிதானமாக, பொண்ணு பேர் என்ன சார் என்றான்

சரியா ஞாபகமில்லப்பா.. ரத்னாவோ என்னமோ சொன்னாங்க எங்கம்மா.

சந்தேகமே இல்லை. இருப்பினும் அவன் மேலும் உறுதிப்படுத்திக்கொள்வதன்பொருட்டு, அவங்கம்மா பேரு? என்று கேட்டான்.

சரஸ்வதின்னு சொன்னாங்கன்னு ஞாபகம்.

இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது என்று அக்கவுண்டண்ட் சொன்னார். சுப்பிரமணி வண்டியை நிறுத்தினான். அவனும் இறங்கினான்.

ரொம்ப தேங்ஸ்ப்பா. என் வண்டி சர்வீசுக்கு குடுத்திருக்கேன். அதான்..

பரவால்ல சார். உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். தப்பா நினைக்கமாட்டிங்கன்னா சொல்லுவேன்.

சொல்லு சுப்பிரமணி

எனக்கு இருவத்தொம்பது நாள் பேட்டா பாக்கி இருக்கு சார். வீட்ல ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு பதினஞ்சு நாள் அமௌண்ட்டாச்சும் ரிலீஸ் பன்ணிங்கன்னா நல்லாருக்கும் என்றான்.

0

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter