ராயப்பேட்டை ஒய்யெம்சியே மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு இரண்டு நாள் சென்றேன். முதல் நாள் சுமார் ஒரு மணிநேரம். இரண்டாம் முறை சென்றபோது சுமார் மூன்று மணி நேரம்.
இந்தக் குறுகிய கால அவகாசத்தில் அங்கு சந்திக்க நேர்ந்த பெரும்பாலான எழுத்தாள நண்பர்கள் [நவீன இலக்கியம் சார்ந்தோர் அல்லர்] மிகுந்த கவலையுடன் பேசிய விஷயம் ராயல்டி. மழைச் சாக்கில் இவ்வாண்டு யாருக்குமே ராயல்டி இருக்க வாய்ப்பில்லை என்கிற முடிவுக்கு அநேகமாக எல்லோருமே வந்துவிட்ட மாதிரி தெரிந்தது. இந்தக் கண்காட்சியே பதிப்பாளர்களின் வெள்ள நிவாரணம்தான் என்று ஒருவர் சொன்னார். [ஆனால் சில விற்பனையாளர்கள் புத்தக விற்பனை எப்போதும்போலத்தான் உள்ளது என்றார்கள். கவனிக்கவும்: விற்பனையாளர்கள்தாம். பதிப்பாளர்கள் அல்லர்.]
எனக்கு இது புரியவில்லை. புதிய புத்தகங்கள்தாம் அதிகம் வரவில்லையே தவிர ஸ்டாக்கில் உள்ளவை இருக்கத்தான் செய்கின்றன; விற்கத்தான் செய்கின்றன. ஒரு சிலர் உண்மையிலேயே நட்டமடைந்திருப்பார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கண்காட்சி ஜோரைப் பார்த்தால் யாரும் யாருக்குமே ராயல்டி தரமுடியாத அளவுக்கெல்லாம் நிலைமை கவலைக்கிடம் என்று தோன்றவில்லை.
மழையே இல்லாத காலத்திலும் ராயல்டி வராமை / தாமதங்கள் இருக்கத்தான் செய்தது. மழை ஒரு கூடுதல் சாக்கு மட்டுமே. பல்வேறு காரணங்களால் பல எழுத்தாளர்கள் தாம் தொடர்பில் உள்ள பதிப்பகங்களில் இருந்து புத்தகங்களை இடம் மாற்றிக் கொடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி ஒரு நண்பர் கேட்டார், ‘ராயல்டியைவிட வேறு பெரிய காரணம் என்னவாயிருக்க முடியும்?’
கணிசமான ராயல்டி பாக்கிகள் எனக்கும் உண்டு என்றாலும் அதை மட்டுமே ஒரு காரணமாக என்னால் கருத இயலவில்லை.
அப்படியானால் கடந்த சில வருடங்களாக உங்களுடைய புதிய புத்தகங்கள் ஏன் வரவில்லை என்றார். இதற்குப் பல காரணங்கள். எனது தொலைக்காட்சித் தொடர் பணிகள் புத்தக எழுத்துக்குப் பெரும்பாலும் இடமளிப்பதில்லை. கொஞ்ச நேரம் கிடைத்தால் படிக்கத்தான் மனம் அலைகிறதே தவிர எழுத அல்ல. இன்னொன்று, ஒரு கட்டாயம் இல்லாது போனால் என்னால் பெரிய பணிகளைப் பொதுவாகச் செய்ய முடிவதில்லை. பத்திரிகைத் தொடர்கள் வேண்டாம் என்று முடிவு செய்த பிறகு அத்தகு கட்டாயம் எனக்கு இல்லாது போனதை நினைவுகூர்கிறேன். ஜெயமோகன் தனது தளத்தில் எழுதுவதையே ஒரு கட்டாயமாக வைத்துக்கொண்டிருக்கிறார். பிசாசுகளுக்கு இது சாத்தியம். பரம சோம்பேறிகளுக்கல்ல.
இத்தனை காரணங்கள் இருப்பினும் எழுதுவோரை உறிஞ்சிப் பிழைக்கும் பதிப்பு நிறுவனங்கள் மொத்த வருமானத்தில் வெறும் பத்து சதத்தை அவர்களுக்கு அளிப்பதில் ஏன் இத்தனை சுணக்கம் காட்டவேண்டும் என்ற வினா எழாதிருப்பதில்லை. மனச்சோர்வு அளிக்கும் அளவுக்கு இது எனக்குப் பெரிய விஷயமல்ல. ஆனாலும் உறுத்தலாக இது எப்போதும் உள்ளது.
கூடிய விரைவில் பல எழுத்தாளர்கள் சொந்தப் பதிப்பு நிறுவனம் அல்லது சொந்த மின் நூல் தயாரிப்பு என்று இறங்கக்கூடும் என்று தோன்றியது. என் நூல்கள் அனைத்தையும் நானே மின் நூல்களாகத் தயாரித்திருப்பதைச் சொல்லி, விரைவில் அவை விற்பனைக்கு வரும் என்றபோது, ‘ஒருநாள் வந்தா அந்த டெக்னிக்க சொல்லிக் குடுப்பிங்களா சார்?’ என்று ஒரு நண்பர் கேட்டார்.
பரவாயில்லை. இன்னொரு பிசினஸுக்கும் கதவு திறக்கும் போலுள்ளது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.