அழகர்சாமியின் குதிரை

சினிமாவுக்கு கௌரவம் சேர்க்கும் எழுத்து அடிக்கடி கண்ணில் படும். எழுத்துக்கு கௌரவம் சேர்க்கும் சினிமா அபூர்வம். சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை, பாஸ்கர் சக்தியின் எழுத்துக்கு கிரீடம் சூட்டியிருக்கும் படம். சினிமாவுக்கென செய்யப்படும் சமரசங்கள் அதிகமின்றி, அதே சமயம் வெகுஜன மக்களின் ரசனையை விட்டும் நகராமல் மிகவும் கச்சிதமாக வந்திருக்கிறது இந்தப் படம். சுசீந்திரனுக்கு மனமார்ந்த பாராட்டு. பாஸ்கரை நான் பாராட்டுவது அபத்தம். அவர் என் நண்பர். நன்றாக மட்டுமே எழுதத் தெரிந்தவர்.

மிக எளிய கிராமத்துக் கதை. இங்கே நீங்கள் கதையை வாசித்துவிடலாம். எனக்கென்ன வியப்பு என்றால், மூலக்கதையிலிருந்து சற்றும் நகராதபடிக்குத் திரைக்கதையை இழுத்துப் பிடித்திருக்கும் லாகவம். இது எளிதல்ல. கதையில் மறைந்து நிற்கும் ஒரு சாதியப் பிரச்னையை உள்ளடக்கிய காதல், சினிமாவில் என்னவாகிறது என்று பார்க்க எனக்கு ஒரு சிறு ஆர்வம் இருந்தது. சற்றும் எதிர்பாராவிதமாக இடைவேளைக்குப் பிறகு வரும் குதிரைக்காரன் அழகர்சாமிக்கு ஒரு ஜோடியைப் போட்டு இரண்டே காட்சிகள் வைத்து இந்தக் காதலையும் அந்தக் காதலையும் குதிரை வாகனத்தைத் தாங்கும் தூண்களாக்கியிருக்கும் சாமர்த்தியம் ரொம்ப ஆச்சரியம் அளித்தது. இதில் மிக முக்கியம், இந்தக் காதல்கள் சினிமாவுக்காக அரையங்குலம்கூடப் புவியைவிட்டு உயரவில்லை. அவர்களுக்கான பாடல்களும்கூட தமது இருப்பின் நியாயத்தை வெளிப்படுத்துவதைச் சொல்லவேண்டும். Hats off.

இளையராஜா. என்னத்தைச் சொல்ல? நேற்று வரையிலான தமிழ் சினிமாவின் இசை என்பது ஒரு பாகமென்றால், இந்தப் படத்தின் பின்னணி இசை, இரண்டாம் பாகத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. சராசரி மனிதச் செவியும் மனமும் உணரமுடியாத காற்றின் இசையைக் கவர்ந்து வந்துவிடுகிறார் இந்த மனிதர். இவர் எப்படி இதை எழுதுகிறார், எப்படி இதை எழுதுகிறார் என்று ஒவ்வொரு இசைத் துணுக்குக்கும் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. கிராமத்தில் நடக்கும் கதைக்கு ஒரு சில இடங்களில் ராஜா வழங்கியிருக்கும் மேற்கத்தியப் பாணி நாடோடி இசை, ஒரு வகையில் நமக்குப் புதிது. ஆனால் காட்சிகளுடன் அது பின்னிப் பிணையும்போது இடமும் காலமும் இலக்கணங்களும் கரைந்து காணாமல் போய்விடுகின்றன. நேடிவிடி முரண் என்று இதனை யாராவது பெரியவர்கள் சொல்லக்கூடும். இது மண்ணையல்ல; மனிதர்களின் விசித்திரமான மனநிலைகளையே முதன்மையாகக் காட்சிப்படுத்துகிற திரைப்படம். காட்சியாகும் சம்பவங்களை மட்டுமல்லாமல், காட்டாமல் கடந்து செல்கிற உணர்வுகளையும் இசையால் காட்டிவிடுகிறார். இந்தப் படத்தின் பின்னணி இசை ஓர் அபூர்வம். இதற்கு முன்னால் ஹே ராம் வந்தபோது இப்படித் தோன்றியது.

ஒரு விஷயத்தைச் சொல்லி முடித்துவிடுகிறேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திரைப்பட விழாவில் ஒரு ஜப்பானியத் திரைப்படம் பார்த்தேன். குதிரைகளைப் பற்றிய படம். குதிரைக்குட்டி விற்கப்படும்போது அதன் தாய்க்குதிரை தவித்துத் துடிக்கிற ஒரு காட்சி, அந்தப் படத்தில் உண்டு. இன்னமும் என் கண்ணில் நிற்கும் காட்சி அது.

இது ஒரு குதிரையைப் பற்றிய படம். தொலைந்துபோன தன் குதிரை அகப்பட்ட பிறகும், ஒரு கிராமமே அதற்கு உரிமை கொண்டாடும்போது அந்தக் குதிரைக்காரன் தவிக்கிற தவிப்பு எனக்கு நான் முன்னர் பார்த்த அந்த ஜப்பானியப் படத்தின் தாய்க்குதிரையை நினைவு படுத்திவிட்டது. அப்புக்குட்டி என்னும் இந்தக் கலைஞன் எப்பேர்ப்பட்ட திறமைசாலி! வியக்கிறேன்.

அழகர்சாமியின் குதிரை, மிக நிச்சயமாக ஒரு சிறந்த படம். இப்படியொரு படத்தைத் தருகிற பலத்தை சுசீந்திரனுக்கு ‘நான் மகான் அல்ல’வின் வெற்றிதான் தந்திருக்கிறது என்பதையும் மறக்காதிருக்க வேண்டியது நம் பொறுப்பு.

பின்குறிப்பு: இன்று சென்னை சத்யம் திரையரங்கில் எழுத்தாளர்களுக்காக ஒரு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் பார்த்தேன். படம் இன்னும் இரு தினங்களில் வெளியாகிறது என்று பேப்பரில் பார்த்தேன்.

Share

17 comments

 • ஐயோ நானும் எழுத்தாளனாக இருந்திருந்தால் இந்நேரம் படமும் பார்த்திருப்பேன், விமர்சனம் எழுதி இருப்பேன்.,
  இப்ப படம் எப்ப பார்க்கலாம்ன்னு எதிர்பார்ப்போடு காத்திருக்கிறவன் கிட்ட, போய் விமர்சனம் எல்லாம் எழுதி,போங்க இன்னைக்கு தூக்கம் போச்சு

 • //எனக்கென்ன வியப்பு என்றால், மூலக்கதையிலிருந்து சற்றும் நகராதபடிக்குத் திரைக்கதையை இழுத்துப் பிடித்திருக்கும் லாகவம். இது எளிதல்ல//
  எழுத்தாளரின் கற்பனையச் சிதறடித்து சினிமாவுக்காக சில மாற்றங்கள் என்ற பெயரில் கதையைக் கொலை செய்யாமல் எடுக்க முடிவு செய்வதற்கே ஒரு துணிவு வேண்டும் – இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும். இதன் பிறகாவது நல்ல் கதைகளைப் படங்களாக எடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்.

 • பாரா சார்! நீங்கள் எல்லா படங்களையும் பார்த்துவிடுபவர் என்று தெரியும். ஆனால் சினிமா விமர்சனம் நீங்கள் எழுதுவதில்லை. மிக பாதித்த படத்தினைப் பற்றி மட்டுமே எழுதி வருகிறீர்கள்.நீங்கள் இத்தனை தூரம் இந்த படத்தினைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தால் உடனே சென்று பார்க்க தோன்றுகிறது. நூறு மசாலா படங்கள் வந்தாலும் வருடத்திற்கு இம்மாதிரி ஒன்றிரண்டு நல்லப் படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பது ஆறுதலான விசயம்.

 • எழுத்தாளர்களுக்குதான் ஷோ போட்டார்கள்.

  எழுத்தாளர்களுக்கு எங்களுக்கு நண்பர்கள் என்பதால் நாங்களும் பார்க்க முடிந்தது.

 • ஓர் எழுத்தாளரின் கதை, சிதைக்கப்படாமல் படமாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்கையில் அதீத மகிழ்ச்சி. படம் கமர்ஷியலாகவும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவன் ‘அழகிரி’யை வேண்டுகிறேன்.

 • இத்திரைப்படம் இன்னும் ஒரு மைல் கல்லாக அமையட்டும்.

 • அதெல்லாம் இருக்கட்டுங்க!…..உங்க காக்கா என்னாச்சி?..
  திரும்ப எப்போப் பறக்கும்!….

 • கிராமத்து பிண்ணனி படங்களுக்கு எப்பவும் ஒரு மவுசு இருக்க தான் செய்கிறது. வெற்றியும் பெறுகிறது. நானும் இது போன்ற படங்களின் ரசிகன். சரியான குக்கிராமத்தில் பிறந்தவன். சரி இந்த படம் executive peoples க்கு பிடிக்குமா ? அதாங்க நவநாகரீக மக்கள், எனக்கு டமில் தெரியாதுன்னு சொல்லி பெருமைப்படுகிறவர்கள், ஸ்பென்சர் பிளாசாவுக்கு ஷாப்பிங் வர்ரவுங்க, கால்செண்டர்ல வேலை பாக்குறவங்க, மல்டி நேஷனல் கம்பெனில வேலை பாக்குறவங்க இந்த படத்தை ரசிப்பாங்களா ?

 • //இந்தப் படத்தின் பின்னணி இசை ஓர் அபூர்வம். இதற்கு முன்னால் ஹே ராம் வந்தபோது இப்படித் தோன்றியது.//

  பிதாம‌க‌ன் ம‌ற்றும் நான் க‌ட‌வுள் ப‌ட‌த்திலும் பின்ன‌னி இசை அற்புத‌மாக‌ இருந்த‌து.

  குதிக்கிற‌ குதிக்கிற‌ குதிரைக்குட்டி பாட‌லின் பி.ஜி.எம்மில் பிதாம‌க‌னின் இள‌ங்காத்து வாச‌னை தூக்க‌லாக‌ இருக்கும் ( ஒரே ராக‌மாக‌ இருக்குமோ? )

  பின்ன‌னி இசையிலும் இதோ போன்ற‌ பின்ன‌னி இசை கோர்ப்பை பிதாம‌க‌னின் க‌ஞ்சா தோட்ட‌ காட்சிக‌ளில் கேட்க‌லாம்.

  குதிரையை திருடிய‌வ‌ர் ப‌ற்றிய‌ திருப்ப‌மும், க‌தையில் இல்லாத‌ இன்னொரு பிளாஷ்பேக் காத‌லும் ப‌ட‌த்தின் பின்பாதி திரைக்க‌தைக்கு ஆதார‌ஸ்ருதி.

  மூல‌க்க‌தையின் இணைப்பிற்கு ந‌ன்றி.

 • உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.

  Share

 • ஒரு அழகான கவிதை மாதிரி இருக்கு இந்த படம். அந்த குதிரைகாரனின் மனிதாபிமானம் திகைக்க வைக்கிறது. திருடனுக்கும் பசிக்கும் என்று அவனுக்கு உணவு தருவது உன்னதம். நமக்கு பிடிக்குது, எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரியலை.

 • தங்களின் விமர்சனத்தை வாசிக்கும் போது உடனே இப் படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.இங்கு திரையரங்குக்கு வந்த மாதிரி தெரியவில்லை.டிவிடி வந்திருக்கிறது.இன்று இரவு கட்டாயம் பார்ப்பேன்

  டானியல்ஜீவா(கனடா)

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter