புளித்த பழம்

இது தொடர்பாக எழுதவே கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். ஏனோ முடியவில்லை.

காலை செய்தித் தாளில் கலைஞரின் செயற்குழுப் பேச்சு விவரங்கள் பார்த்தபிறகு இந்தியாவில் அல்ல, உலகிலேயே இவருக்கு நிகரான இன்னொரு அரசியல்வாதி இருக்கமுடியாது என்று தோன்றிவிட்டது. எத்தனையோ பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பிரபாகரனின் ஒரு பேட்டியின்போதே ஈழப்போராட்டம் தனக்குப் புளித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஈழம் மலர்ந்தால், அங்கே சர்வாதிகார ஆட்சிதான் இருக்கும் என்று பிரபாகரன் அப்பேட்டியில் சொல்லியிருப்பதாகப் பின்னிணைப்பு. ஜனநாயகக் காவலரல்லவா. புளித்துத்தான் போகும்.

ஆனால் புளித்த பிறகும் கவலைப்படலாம், பிழையேதுமில்லை. மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தலாம். தமிழ்ச்செல்வன் செத்துப்போனால் இரங்கல் கவிதை எழுதலாம். எம்.பிக்களிடம் ராஜினாமா கடிதங்கள் எழுதி வாங்கலாம். உயிர் இருக்கும் வரை தமிழினத்துக்காகப் போராடுவேன் என்று கண்ணீர்க் கடிதங்கள் எழுதலாம். தம்பி பிரபாகரனின் தன்னிகரற்ற வீரத்தைப் போற்றியும் பாடலாம்.

எதுவும் செய்யலாம். திருமாவளவன் உண்ணாவிரதம் இருக்காத வரை. ராமதாஸ் போர்க்கொடி தூக்காத வரை. பா.ம.க. பத்திரிகை ஊழியர் முத்துக்குமார் எரித்துக்கொண்டு இறக்காதவரை. மாநிலமெங்கும் மாணவர்கள் கொதித்து எழாதவரை.

தனது இந்தப் பேச்சும் தி.மு.க. பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட முடிவுகளும் பெரும்பான்மை தமிழகத் தமிழர்கள் மத்தியில் கடும் மனக்கசப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் ஞானி கலைஞர் எதிர்பார்த்திருக்கவில்லையானால் அது வியப்புக்குரியதே. முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தப் போயிருந்த ஒரு தி.மு.க. மாவட்ட செயலாளரை அங்கிருந்தவர்கள் செருப்பால் அடித்து விரட்டினார்கள் என்று கேள்விப்பட்டேன். கலைஞரின் காதுகளுக்குப் போகாமல் பார்த்துக்கொண்டிருக்கக் கூடும். எப்படியானாலும் மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது. ஒரு பண்பட்ட அரசியல்வாதியின் பேச்சாகவும் நடவடிக்கையாகவும் இது இல்லை.

*

நீ ஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறாயா, எதிர்க்கிறாயா என்பது இல்லை முக்கியம். மனச்சாட்சிப்படி எடுக்கிற நிலைபாடுகளை இதில்கூட ஒருவரால் மாற்றிக்கொள்ள இயலுமா என்பதுதான் என் வியப்பு. இந்த விஷயத்தில் நான் ஜெயலலிதாவை மதிக்கிறேன். ஹிந்து பத்திரிகையை மதிக்கிறேன். துக்ளக்கை மதிக்கிறேன். ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளை மதிக்கிறேன். தமது புத்திக்குச் சரியென்று தோன்றிய ஒரு முடிவை இன்றளவும் இவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை. தமிழக அரசியல் சார்ந்து ஆயிரம் முறை பல்டி அடிக்கக்கூடியவர்களே என்றாலும் ஈழப் பிரச்னை தொடர்பாகப் பால் மாறியதில்லை. கொண்ட கொள்கையில் உறுதி காக்கக்கூடியவர்களாகவே இன்றுவரை இருக்கிறார்கள். தம்பி தம்பி என்று உருகிவிட்டு, கம்பி நீட்டியதில்லை. அல்லது தீவிரவாதம் வளர்க்கிறார்கள் என்று சொல்லிவிட்டு அதை விடுதலைப் போராட்டமாகச் சித்திரித்துப் பேசியதில்லை.

ஆட்சியில் நிலைத்திருக்க, பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க, மத்திய அரசின் பாசப்பிணைப்பு தொடரவேண்டுமே என்கிற பரிதவிப்புதான் கலைஞரின் இப்பேச்சுக்குக் காரணமாக இருக்குமா என்று என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அவர் சந்திக்காத பதவி நீக்கங்கள் இல்லை, ஆட்சிக்கவிழ்ப்புகள் இல்லை, போராட்டங்கள், சிறையடைப்புகளில்லை. தமிழகத்தை மிக அதிக முறை, மிக நீண்ட காலம் ஆண்ட ஒரு முதியவர், தனது தள்ளாத வயதில் இப்படியொரு அழிக்க முடியாத அவப்பெயரை வேண்டி விரும்பித் தேடிக்கொள்ளத் தூண்டியது எதுவாக இருக்கும்?

உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை. பெரும்பான்மை மக்களின் உணர்வு எப்படியிருக்கிறது என்று நிஜமாகவே உளவுத்துறை அவருக்குத் தெரியப்படுத்தியிருக்காதா? முத்துக்குமார் மரணத்துக்குப் பிறகும்? தமிழகமெங்கும் கல்லூரி, பள்ளி மாணவர்களின் எழுச்சிக்குப் பிறகும்? அத்தனை வெண்ணெய் வெட்டிகளாகவா இருந்திருப்பார்கள்?

முத்துக்குமாரின் தற்கொலையை அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்யும் கட்சிகள்கூட ஈழப் போராட்டத்தையோ, விடுதலைப் புலிகளின் நோக்கத்தையோ கொச்சைப்படுத்தி சந்தர்ப்ப அரசியல் செய்ததில்லை. குறைந்தபட்சம் எனக்குத் தெரிந்த அளவில்.

கலைஞர் செய்திருப்பது, அருவருப்பாக உள்ளது.

*

இலங்கையில் நடைபெறும் இனப்போராட்டத்தினையும் அதன் பின்னணியையும் நான் இதுநாள் வரை அபிப்பிராயம் ஏதுமில்லாமல் மட்டுமே கவனித்து வந்திருக்கிறேன். ஒரு பத்திரிகையாளனாகச் சில போராளிகளைச் சந்தித்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். இப்போதல்ல. பத்திரிகைப் பணியில் இருந்தபோது.

ஆனால் ஒருபோதும் இலங்கைப் பிரச்னை குறித்து எழுதியதில்லை. காரணம், தகவல்களின் போதாமை மட்டுமே. தமிழ்ப் பத்திரிகைகளின் கடும் சார்பு நிலைகளை மட்டுமே தரவுகளாக வைத்துக்கொண்டு இலங்கைப் போராட்டம் குறித்து ஒருவர் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினால் விபரீதம் மட்டுமே விளையும். இன்றளவும் இங்கே இரு சார்பு நிலைகளில் நின்று பேசுவோரில் எத்தனை பேருக்கு அவரவர் சார்ந்த வகையிலேனும் முழுத் தகவல்கள் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்த ஒரு வருட காலமாக அநேகமாக தினசரி ஆறு மணிநேரங்கள் இது தொடர்பான ஆய்வுகளுக்கெனச் செலவிட்டு வருபவன் என்கிற முறையில் இப்போது என்னால் பேசமுடியும். அடிப்படை தெரியும். இதன் ஆழ அகலங்களை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. கண்மூடித்தனமான ஆதரவோ, எதிர்ப்போ, அனுதாபப் பிரயோகங்களோ இல்லாமல் தெளிவாக அணுக முடிகிறது.

ஆனால் என்னுடைய ஆய்வு தொடர்பாக நான் தகவல்கள் கோரி அணுகிய பெரும்பாலானவர்களிடம் எனக்கு வழங்க ஏதுமில்லை. இத்தனைக்கும் நான் எழுதுவது நடந்தது பற்றியே. நடப்பு நிலவரமல்ல. இதற்காக நான் அலையும் அலைச்சல்களும் படும் பாடுகளும் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு கள்ளத்தோணி பிடித்து ஈழத்துக்கே கூடப் போய்வந்துவிடலாம். ஆனால் அப்படி ஒருமுறை போய்வந்து விடுவதால் மட்டுமே அனைத்து உண்மைகளும் தெரிந்துவிடுமா? போய் வந்தவர்களுக்கேதான் தெரியுமா? நான் நம்பவில்லை.

வாழ்ந்து பார்த்தாலொழிய வாழ்க்கையில்லை. அடிபட்டாலொழிய வலியில்லை. இந்தளவில், நாம் செய்யக்கூடிய மாபெரும் உபகாரம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது மட்டுமே.

அதையாவது கலைஞர் செய்திருக்கலாம்.

*

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் சில சரித்திர மரணங்களுக்குக் காரணமாக இல்லாமல் இருந்ததில்லை. ரஷ்யா தொடங்கி அயர்லாந்து வரை, பாலஸ்தீன் தொடங்கி இந்தியா வரை இதற்கு உதாரணங்களை எடுத்துப் போட்டுக்கொண்டே இருக்கலாம். என்ன சொல்லியும் தனி மனிதக் கொலைகளை நியாயப்படுத்த இயலாது என்றாலும் இத்தகைய இடறல்கள் போராட்டப் பாதைகளெங்கும் இருக்கவே செய்திருக்கின்றன. வரலாறை அதன் வண்டல்களுடனும் ஏற்பதுதான் சரி. இறைவன் கூட இறுதி நாளன்றுதான் நியாயத்தீர்ப்பு கொடுப்பான் என்பார்கள். இப்படி இடையிடையே தலைக்குத்தலை நியாயத்தீர்ப்பு வழங்குவது அடுக்காது என்றே தோன்றுகிறது.

அறுபது வருடங்களாக ஓர் இனம் ஒடுக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் கிட்டத்தட்ட காலி செய்யப்பட்டுவிட்ட நிலையில் – ஒரு போராட்டம் அதன் உச்சக்கட்டத்தைத் தொடுகிறது. பொதுவாழ்வில் அதனைக் காட்டிலும் அதிக வருடங்கள் அனுபவம் சேகரித்த ஒரு மனிதர் இப்படி முற்றிலும் ஏமாற்றம் தரும் விதத்தில் பேசுவார் என்று நான் எண்ணிப் பார்க்கவேயில்லை.

எனக்கு எக்காலத்திலும் கட்சி சார்புகள் இருந்தது கிடையாது. பிரச்னைகளின் அடிப்படையில், வேட்பாளர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் இதுநாள் வரை வோட்டுப் போட்டு வந்திருக்கிறேன். வாழ்விலேயே முதல் முறையாக, தி.மு.க. சார்ந்த எந்த வேட்பாளருக்கும் இனி வோட்டுப் போடக்கூடாது என்று இன்று தோன்றியது.

என்னைப்போல் வேறு பலருக்கும் தோன்றியிருக்கக் கூடும்.

தொடர்புடைய பத்திரிகைச் செய்தி இங்கே.

Share

23 comments

  • //ஈழப்போராட்டம் தனக்குப் புளித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.//
    புளித்ததை உண்டால் போதை வரும். அப்போ என்ன வேணா பேசலாம். தான் செய்தது செய்வது எல்லாமே சரி எனத் தோன்றும். மனதில் அசாதாரணமான பலம் வரும். நல்ல நிலமையில் செய்யத் தோன்றாவை எல்லாம் செய்யத் தோன்றும். முடிவில் வாந்தி வரும். அஷ்டே!

  • //கலைஞர் செய்திருப்பது, அருவருப்பாக உள்ளது//
    uNmaiyaana udan piRappu enakkE irukkungka

  • கலைஞர் அறிக்கை : புளித்த பழம் – பா. ராகவன்…

    எனக்கு எக்காலத்திலும் கட்சி சார்புகள் இருந்தது கிடையாது. பிரச்னைகளின் அடிப்படையில், வேட்பா…

  • தல.. சத்தியமா உங்களிடம் எதிர் பார்த்த பதிவு.. இந்த பதிவால் இலங்கை மக்கள் (தமிழ் + சிங்களம்) நேரடி பயன் பெறாவிட்டாலும் இந்தப் பதிவை படிக்கும் தமிழகத்தை சேர்ந்த சிலராவது அரசியல் புரிதல் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.. பொது நோக்கம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துக்கு பாதிப்புக்கு உள்ளாவது முத்துக்கள் (குமார்) மட்டும் தான்.. இதில் எந்த கட்சியும் விதி விலக்கல்ல..

  • //பா.ம.க. பத்திரிகை ஊழியர் முத்துக்குமார் எரித்துக்கொண்டு இறக்காதவரை.//
    ?
    ?

    //எப்படியானாலும் மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது. ஒரு பண்பட்ட அரசியல்வாதியின் பேச்சாகவும் நடவடிக்கையாகவும் இது இல்லை.//
    ரொம்ப சரி

  • YES Ragavan,
    It is sad.
    The best we can DO is patiently observing the developments.
    Thanks a LOT for writing these thoughts.
    God Bless and Take good rest.
    Anbudan,
    Srinivasan.

  • பாரா!

    இலங்கை தமிழர்கள் பலபேர் இணையத்தில் உங்களை ரவுண்டு கட்டி அடிக்கும்போதெல்லாம் நீங்கள் ஏன் பதில் பேசாமல் இருக்கிறீர்கள் என்று யோசித்திருக்கின்றேன்.ஆனால் பிரசினையை ஆழமாக்ப் புரிந்துக்கொண்டபிறகு பேசுவதுதான் சரியானது என்று முடிவு செய்து, அதற்கென உழைத்து(தினம் 6 மணியா? அடேங்கப்பா!)தெள்ள தெளிவாக, நடுவுநிலைமையோடு எழுதியிருக்கிறீர்கள். ஈழ தமிழர்கள்பால் உங்களுக்கு உள்ள அக்கறையும் ஈடுபாடும் புரிகின்றது. விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை நீங்கள் ஏற்கின்றீர்களா?

  • அருமை பாரா! சார்பு நிலை என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடுநிலைமை என்றால் என்ன என்று நீங்கள் அடையாளம் காட்டியிருக்கின்றீர்கள். சாயாத உங்கள் துலாக்கோலுக்கு வாழ்த்துக்கள்!

  • எத்தனை இழிவான குணம் கலைஞருக்கு? படித்த தமிழர்கள் எல்லோரும் அயல்நாடுகளில் இருந்து தேர்தல் அன்று தமிழகம் வந்து ஓட்டு போட்டு புதிய திருடர்களை (Sorry பழக்க தோஷம்) புதிய அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

  • வருத்தமாக இருக்கிறது பாரா…இவ்விதயத்தில் அரசியல் நாடங்களைப் பார்க்கும் போது சலிப்பாகவும் வெறுப்பாகவும் உள்ளது. தமிழ் தமிழ் என்பவர்களின் இன மானம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுவிட்டது. இது தீராத அவமானமாக நமக்குத்தான் தோன்றும், அவர்களுக்கில்லை..என் தோழி தமிழ்நதியின் கட்டுரையை படியுங்கள் http://tamilnathy.blogspot.com/2009/02/blog-post.html

  • // வாழ்ந்து பார்த்தாலொழிய வாழ்க்கையில்லை. அடிபட்டாலொழிய வலியில்லை. இந்தளவில், நாம் செய்யக்கூடிய மாபெரும் உபகாரம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது மட்டுமே.

    அதையாவது கலைஞர் செய்திருக்கலாம். //

    எந்த காலத்தில் அரசியல்வாதிகள் சும்மா இருந்திருக்கிறார்கள்…??

    // எத்தனையோ பல வருடங்களுக்கு முன்பு வாசித்த பிரபாகரனின் ஒரு பேட்டியின்போதே ஈழப்போராட்டம் தனக்குப் புளித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்.//

    கலைஞரின் பல்டியை பார்த்து பார்த்து நமக்கு புளித்து விட்டு.இதை எங்கு போய் சொல்வது…?

  • //வாழ்விலேயே முதல் முறையாக, தி.மு.க. சார்ந்த எந்த வேட்பாளருக்கும் இனி வோட்டுப் போடக்கூடாது என்று இன்று தோன்றியது//

    அருமை நான் முன்னமெ முடிவு செய்ததை நீங்கள் எழுதி விட்டிற்கள் ,
    இவரை கைது செய்தால் துடிக்க வேண்டும்.
    முத்து குமார் மரணத்தை கண்டுகொள்ள கூடாது என்பதெ இவர் அரசியல்
    கேவலம்!!

  • கலைஞர் அவர்களிடம், அவர் பதவி மற்றும் கம்பனி மன்னிக்கவும், கட்சி இரண்டை தவிர வேறுப் பிரச்சனைகளில் உறுதியான நிலைபாடு என்று உங்களுடைய எதிர்பார்ப்பே தவறு. அதற்கு அவர் என்ன செய்வார்? பாவம்.
    அவர் வென்றால், தமிழன் அறிவுள்ளவன், தோற்றால், நன்றி கெட்டவன். இதுதான் அவரது நிலைபாடு.

    பத்திரிக்கையாளர் (குறிப்பாகச் செய்தியாளர்)பணி என்பது நிகழ்வுகளை விருப்பு/ வெறுப்பின்றி உண்மையைக் கொடுப்பது. இதை பல பத்திரிகைகள் கடைப்பிடிப்பதுக் கிடையாது.

    நமது அரசியல்வாதிகளுக்கு ஒரே பிரச்சனைக்கு நாடு வாரியான,மாநில வாரியான, மாவட்ட வாரியான நிலைபாடு என்று பல நிலைபாடுகள்.

    சத்தியம் பிரம்மாஸ்மி!

  • //வாழ்ந்து பார்த்தாலொழிய வாழ்க்கையில்லை. அடிபட்டாலொழிய வலியில்லை. இந்தளவில், நாம் செய்யக்கூடிய மாபெரும் உபகாரம் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பது மட்டுமே.

    அதையாவது கலைஞர் செய்திருக்கலாம்.//

    Very true…
    But how are we going to react to this?
    We chose this person to rule us; Wouldn’t a kilo of rice for 0.50 paise and a cellphone for everyone in family (below poverty line ofcourse) will bring him to rule next time too? How many of us are sure it wont?
    ‘அரசியல் ஞானி கலைஞர் ‘ have the intelligence to swift people’s mind very easily…
    All this nonsense will end only when our people are least attracted towards freebies and everyone acquires the knowledge to say ‘பிரச்னைகளின் அடிப்படையில், வேட்பாளர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் இதுநாள் வரை வோட்டுப் போட்டு வந்திருக்கிறேன்’

    Thanks for the nice post Para Sir.

  • dear para…

    just read your book about excellence….
    this article is one of a kind in decades….

    one cannot compromise with all the people,and all the issues ,all the time…now when situation demands..when life requires make or break decisions….if your idealist is hospitalised then…your life is also attacked by cancer…..

    r.ramachandran
    99656 27599

  • Dear Para
    You have expressed exactly what was going on in my mind for the past two days. I am not able to digest his words because i feel completely let down by him. I had been such a big supporter of him all these days!!!

  • இது உண்மையில் ஒரு பெரிய ரோதனை. கலைஞர் என்னலாமோ சொல்கிறார் , அங்கு இப்பொழுது இருக்கும் உச்சகட்ட மனித அவலத்தை மறந்து விட்டு . பா.ரா பலமுறை உங்கள் இணையதளத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை , ஏன் ? 🙁

  • பிரபாகரன் எப்பொழுதோ இந்து ஏட்டுக்குக் கொடுத்த செவ்வியில் தமிழ் ஈழம் கிடைத்தால் சர்வாதிகார ஆட்சி நடத்துவோம் என்று கூறியதாகக் கருணாநிதி சொல்கிறார். அது உண்மையல்ல. யுகாஸ்லாவியாவில் இருப்பது போன்ற ஒரு கட்சி ஆட்சிமுறை இருக்கும் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். யுகாஸ்லாவியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அப்போது நடந்தது. அன்று, சோவியத் ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் நடந்தது. இன்று சீனா, வியட்நாம், கியுபா, வடகொரியா போன்ற கம்யூனிஸ்ட் நாடுகளில் ஒரு கட்சி ஆட்சிமுறை தான் நடக்கிறது. அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி முறையை ஒருவர் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவ்வாறான ஒரு கட்சி ஆட்சி அரசு உலகில் ஏற்கப்பட்டு, அந்நாடுகள் பல கட்சி நாடுகளுடன் நல்லுறவு கொண்டுள்ளன. அரசு அமைப்பு முறைகளில் ஒரு கட்சி ஆட்சி முறையும் ஒன்று.

    யுகாஸ்லாவியத் தலைவர் டிட்டோ ஒரு கம்யுனிஸ்டாக இருந்தாலும் சோவியத் முகாமில் சேராமல் அணிசேரா நாடாக யுகாஸ்லாவியாவை வழி நடத்தினார். அது போல் தான் நிறுவ வரும்பும் தமிழீழம் சோசலிசப் பாதையைப் பின்பற்றினாலும் அது தமது மண்ணிற்கு ஏற்ற வடிவம் பெறும் என்றும், அணி சேரா நாடாக தமிழீழம் திகழும் என்றும் அப்பேட்டியில் பிரபாகரன் கூறியிருக்கிறார். இதனைக் கருணாநிதி கொச்சைப்படுத்தி, பிரபாகரன் அதிகார வெறியர் என்று காட்டவும், சர்வாதிகாரி என்று காட்டவும் திரிபு வேலைகளைச் செய்கிறார். ஒரு கட்சி ஆட்சி என்பதற்கு மாறாக ஒரு குடும்ப ஆட்சி நடக்கும் என்று பிரபாகரன் கூறியிருந்தால் கருணாநிதி மனநிறைவடைந்திருப்பாரோ என்னவோ?

    http://karthikramas.blogspot.com/2009/02/blog-post_06.html

  • அருமையான கட்டுரை.

    அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது என்று முதல் நாளும்,

    பின்னால் அதிமுகவிற்கு வாருங்கள் சேர்ந்து குரல் கொடுப்போம் என்று இரண்டாவது நாளும்.

    பின் எதையும் தாங்கும் இதயத்தைக் கொடு என்று மூன்றாவது நாளும் மாற்றி மாற்றிப் பேசி உண்மையிலேயே முதுமையின் கோலத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

    அன்று ஞாநியும், பின்னர் நெடுமாறனும் சொன்ன போது எகிறிக் குதித்த உடன் பிறப்புகள் கூட இன்று கலைஞரின் புலம்பலுக்கு செவி சாய்க்க மாட்டார்கள்.

    நாளொரு சகோதரன் தமிழ்நாட்டில் தீக்குளித்து மாண்டு கொண்டிருக்கிறான். இலங்கையில் ஆயிரக் கணக்கானோர் கானக் நடுவே சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இவர் மட்டும் அட ராமச்சந்திரா என்று உட்கார்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

  • நீங்கள் இதைப் பற்றி எழுதியதே சரி. தனிப்பட்ட முறையில் கலைஞர் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லையென்ற போதிலும், பெரும்பாலும் தி.மு.கவிற்கே வாக்களித்திருக்கிறேன் (ஒரு முறை மதிமுகவிற்கும், கேரளாவிலிருக்கும் போது சி.பி.எமிற்கும் தவிர்த்து). இனி 49-O தான் என்ற முடிவிற்கு அவரின் செயல் என்னை தள்ளிவிட்டது.

    நன்றியுணர்ச்சியும், விருந்தோம்பலும் தமிழரின் பெருங்குணங்கள். தமிழ், தமிழர், தமிழினம் என்று கூறியே வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டவருக்கு சிறிதும் நன்றியில்லாது போனது வேதனையளிக்கிறது.

    முதுமையடையும் போது சிறிது சுயநலமாயிருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா கருணாநிதி ரொம்ம்ம்ப ஓவராபோயிட்டாரு.

    பா.இரா

  • Sir,

    I just read your news link and I will not agree with your statement of
    “”எனக்கு எக்காலத்திலும் கட்சி சார்புகள் இருந்தது கிடையாது. பிரச்னைகளின் அடிப்படையில், வேட்பாளர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே ஒவ்வொரு தேர்தலிலும் இதுநாள் வரை வோட்டுப் போட்டு வந்திருக்கிறேன் ( I smell your feeling)
    வாழ்விலேயே முதல் முறையாக, தி.மு.க. சார்ந்த எந்த வேட்பாளருக்கும் இனி வோட்டுப் போடக்கூடாது என்று இன்று தோன்றியது.”””

    Ok, who then we can Vote in the Great Tamil Nadu?
    The Great, stable, Intelligent, Broad minded, Non-corrupted, family Girl, Jaya or your Great CHO?
    Who always oppose LTTE and srilankan Tamils?

    Can you also please suggest anyone of your smart choice? I only remember my Old grand father told me about you people.
    If Jaya done the same, you people never say “அ. தி.மு.க. சார்ந்த எந்த வேட்பாளருக்கும் இனி வோட்டுப் போடக்கூடாது என்று இன்று தோன்றியது.”””

    Iam sorry …..Iam not supporting kalanger (I have also had serious concern about his speeches etc on Sun TV /kalanidahi affaires).

    Tamil periyan

  • Hi friends,

    karunanadi is a biggest fraud …he will try to take political mileage on all the issues…Ex..Agance hind language, people emotations on LTTE…Kavari Issues…Infect he diched there one family members …good ex..Sun TV scrood a year back Dayanidhi maran got scrooed 6 month back for no reason….

    my sugesion is vote to the upcoming party who did not get spoiled still ….
    Every senor politician or party should lead the state as per the people expectation with in the system..
    they should not take it for granted that in the time of election we can through some pe nets to people like giving rice for Rs 2 for KG..gas stove…ext ..
    who is he to give the wavers on all this …
    Give wavers if people ar struggling in some disaster situation ..or else announce this type of scheme from your own fund…

    Regards
    Gopinath venkatesan

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!