மாலனின் ‘தோழி’ நாவல்

வாழ்வில் நாம் மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த சில சந்தர்ப்பங்கள் இருக்கும். எவ்வளவு காலமானாலும் அது மறக்காது. முதலில் ஏமாந்து, பிறகு அது கிடைத்துவிட்டாலுமே ஏமாந்த தருணம் நினைவில் எங்காவது உட்கார்ந்திருக்கும். எனக்கு அப்படிச் சில உண்டு.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய பத்திரிகையில் விளம்பரம் ஒன்று வந்தது. ஒரு தொடருக்கான விளம்பரம். மாலன் எழுதுகிறார் என்றிருந்தது. இரண்டே சொற்களைக் கொண்ட அந்தத் தலைப்பில் ஒரு பிரம்மாண்டமான சரித்திரம் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டுகொண்டேன். அந்த விளம்பரத்தைப் பார்த்த கணத்தில் எழுந்த ஆவலை விவரிக்கவே முடியாது. இப்போதே வெளியாகி, இந்தக் கணமே படித்துவிட மாட்டோமா என்று அன்று முழுதும் அதையே எண்ணிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது.

ஆனால் குறிப்பிட்ட இதழுக்குக் காத்திருந்தும் பயனில்லை. தொடர் வெளியாகவில்லை. சில அரசியல் காரணங்களால் அத்திட்டம் தடுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்துகொண்டேன்.

வெறும் தலைப்பு. அதனைக் கொண்டே ஒரு முழு வரலாற்றை எல்லோராலும் ஊகிக்க முடிந்திருக்கிறது; அது வெளிவராமல் தடுக்கவும் முடிந்திருக்கிறது.

இதனைக் காட்டிலும் சுவாரசியம் ஒன்றுண்டு. பல நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டில் அச்சடிக்கப்படும் அனைத்துத் திருமணப் பத்திரிகைகளிலும் – சாதி பேதமில்லாமல் பயன்படுத்தப்படும் மிக எளிய சொற்கள்தாம் அவை. இன்று வரையிலுமேகூட. ஆனால் வேறு யார் எங்கே பயன்படுத்தும்போதும் சிக்கல் தராத சொற்களை ஒரு தொடருக்கு மாலன் தலைப்பாக வைத்தபோது தீப்பற்றிக்கொண்டு விட்டது.

இடமும் காலமும் அவசியமும் கருதிச் செய்யப்படும் சில நேர்மையான செயல்பாடுகள் இம்மாதிரியான மோசமான விளைவுகளை எதிர்கொண்டே தீரவேண்டியது தமிழ்ச் சூழலின் தீயூழ்.

நாம் அரசியலில் தேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வோம். ஆனால் யாருக்கும் விமரிசனங்கள் ஆகாது. காழ்ப்புக்கும் விமரிசனத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து நம்மால் பல மணி நேர சொற்பொழிவாற்ற முடியும். ஆனால் மிக எளிய, நேர்மையான விமரிசனங்களைக் கூடக் காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக மட்டுமே எடுத்துக்கொள்வோம். அவரவருக்கு அவரவர் அரசியல் என்று பொதுவில் பேசுவோமே தவிர, அடுத்தவர் அரசியலை மதிக்க நாம் பயிற்றுவிக்கப்பட்டதில்லை. அல் காயிதாவுக்கு எதிராக அமெரிக்கா படை திரட்டிக்கொண்டு ஆப்கனிஸ்தானுக்குக் கிளம்பிய நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். ஒன்று நீ என் கட்சி. அல்லது எதிரிக் கட்சி. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்.

அப்படித்தான் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையும். அமெரிக்காவுக்காவது அன்று போர்க்கால நியாயம் என்று ஒரு சப்பைக்கட்டுக்கு இடம் இருந்தது. எப்போதும் அமைதிப் பூங்காவாகவே இருந்தாலும் நமக்கு இந்த ஒரு விஷயத்தில் எப்போதும் போர்க்கால நியாயம்தான்.

சிரிக்கத்தான் முடியும். வேறென்ன செய்ய?

ஆனால் மாலன் ஒரு பத்திரிகையாளராக அன்று செய்ய நினைத்து முடியாமல் போனதை ஒரு கலைஞனாக இந்த நாவலில் நேர்த்தியாகக் கொண்டு வந்துவிட்டார். தமிழ்நாட்டில் ஒரு படைப்பிலக்கியவாதியாக வாழ்வதுதான் எவ்வளவு வசதியானது. தவறிக்கூட அரசியல்வாதிகள் இலக்கியம் படித்துவிட மாட்டார்கள் என்று நம்பி, துணிந்து எதையும் எழுத முடியும் இங்கே.

மக்கள் நிம்மதியாக உண்டு, உறங்கிப் பிழைப்பு நடத்தப் பேச்சு போதும் என்பது திராவிட அரசியலின் அடிப்படைகளுள் ஒன்று. என்றாவது அவர்கள் விழித்துக்கொள்ள விரும்பினால் உதவட்டுமே என்று எழுதி வைக்க நினைப்பதுதான் எந்தக் கலைஞனும் செய்யக்கூடியது. இந்நாவலில் மாலன் செய்திருப்பதும் அதனைத்தான்.

மாலனின் இந்தத் தோழியை அடையாளம் கண்டுகொள்வதோ, புரிந்துகொள்வதோ, சரித்திரத்தின் பழைய பக்கங்களில் நினைவின் துணையோடு பயணம் செய்வதோ சிக்கலான செயலல்ல. ஆனால், சுதந்தரம் அடைந்த நாளாகத் தமிழ் நாட்டில் திராவிட அரசியல் சாதித்தவற்றுள் மேலோங்கி நிற்பவை எவை என்கிற வினா எழுமானால், அதன் விடையை நோக்கி நேர்மையாக நகர்வதற்கு ஒரு திராணி தேவைப்படும். சாமர்த்தியங்களுக்கு நாம் சாணக்கியம் என்ற கிரீடம் சூட்டிவிடுகிறோம். அதன் உள்ளோடிய குரூரங்களை அதனைக் கொண்டே மறைத்தும் விடுகிறோம். மறைக்க முடியாவிட்டாலும் மறந்துவிட விரும்புகிறோம். காரணம், அதற்குத்தான் நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.

எண்ணிப் பார்த்தால் சிறிது விசித்திரமாகத்தான் இருக்கிறது. அரசாங்கத்தில் ஒரு கடைநிலை ஊழியராகப் பணியாற்றுவதற்குக் கூட ஒரு குறைந்தபட்சக் கல்வித் தகுதி வேண்டியிருக்கிறது. ஒரு தேர்வு எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு எந்தத் தகுதியும் அவசியமில்லை. குற்றத் தகுதிகளையும் சொத்துத் தகுதிகளையும் பகிரங்கமாகக் குறிப்பிட்டே அவர்களால் தேர்தலில் நிற்கவும் வெற்றிபெறவும் முடிகிறது. சாத்தியமில்லை என்பதை மக்களும் அறிவார்கள் என்பதை அறிந்தே அவர்கள் வாக்குறுதிகளைத் தருகிறார்கள். சாத்தியமாகாதவற்றுக்கு எதிர்க்கட்சியையும் மத்திய அரசையும் காரணம் சொல்லிவிடலாம். அதையும் மக்கள் ஏனென்று கேட்க மாட்டார்கள்.

நட்சத்திரங்களை நாம் நேசிக்கிறோம். காதுகளில் ரீங்கரிக்கும் விதமாக மேடைப் பேச்சுகளைக் கட்டமைக்கும் வித்தகர்களை நேசிக்கிறோம். தடவிக் கொடுத்தால் நேசம் காட்டும் ஒரு குட்டி நாயாகவே காலமெல்லாம் வாழ்ந்து தீர்த்துவிட்டுப் போய்விடவே விரும்புகிறோம்.

இந்த எளிய மனங்களை மூலதனமாக்கி நடைபெறும் அரசியல் வியாபாரங்கள் அபாயகரமானவை. அதிகாரத்துக்கு வருபவர்கள். அவர்களை அண்டிப் பிழைக்க வருபவர்கள். ஒற்றறிய வருபவர்கள். ஒளிந்து நின்று வேல் எறிய வருபவர்கள்.

இந்நாவலில் மேற்சொன்ன அத்தனை ரக மனிதர்களையும் நீங்கள் சந்தித்து, அடையாளம் கண்டுகொள்ளலாம். ஏனெனில் இதில் உலவுகிற அனைவருமே உண்மையான மனிதர்கள். வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் மட்டுமே வசிக்கும் நாவல் இது. பெயர்களைத் தவிர வேறு எதுவுமே புனையப்பட்டதல்ல. சரித்திரம், சிறிது குரூரமான ஆசிரியர். தன்னைத் திறந்து வைத்துப் படித்துக்கொள்ளச் சொல்லுமே தவிர குறுக்கே வந்து விளக்கம் சொல்லாது. படித்து முடித்த பின்பும் முன்பிருந்ததைக் காட்டிலும் வினாக்கள்தாம் பெருகுமே தவிர, விடைகள் அவ்வளவு எளிதில் அகப்படாது.

சரித்திரத்துக்கு மட்டுமல்ல. நல்ல நாவலுக்கும் அடிப்படை இதுதான். தமிழில், சமகால அரசியலைத் தொட்டுப் பேசுகிற நாவல்கள் பெரும்பாலும் உண்மையும் புனைவும் கலந்து நெய்யப்பட்டதாகவே இருக்கும். அது ஒரு குறைந்தபட்சப் பாதுகாப்பு. அபூர்வமாக இந்நாவல் வேறு முகம் கொள்கிறது. இந்தளவு உண்மைக்கு விசுவாசமான இன்னொரு அரசியல் நாவல் இங்கு எழுதப்பட்டதில்லை.

மாலன் இந்நாவலில் தமிழ்நாட்டின் தலையெழுத்தைச் சில காலம் தீர்மானித்த சில பெண்களை மிக நெருக்கமாக நின்று ஆராய்கிறார். நாமறிந்த அரசியலுக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. உள்ளே இறங்கிவிட்டால் உக்கிரமன்றி வேறில்லை. முதல் தரக் குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லிவிட்ட பின்பும் அம்மாவெனப் பரிவும் பாசமும் பொங்க அழைக்கும் சமூகமல்லவா நாம்? இங்கேதான் சந்தன வீரப்பனும் தியாகி, ஜெயலலிதாவும் தியாகி. மரணம், தன்னியல்பாகப் பூசும் தியாக முலாமும் இம்மாநில அரசியலின் ஓரங்கம்தான்.

இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியல் மட்டுமல்ல காரணம். பெண் மனம் என்றொரு கருத்தாக்கம் இங்கே அதிகம் பேசப்படுகிறதொரு விஷயம். எந்தப் பெண் எழுத்தாளரையும்விட மாலன் இதில் அதனை ஆழத் தோண்டி அகழ்ந்தெடுத்திருக்கிறார். அதிகாரத்தில் உள்ள பெண்கள். அதிகாரத்துக்கு ஆசைப்படும் பெண்கள். அதிகாரத்தில் உள்ளவர்களால் முகம் பொசுங்கி, காலத்தில் கரைந்துவிடுகிற பெண்கள்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று என்பது எளிய சமாதானம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கூற்றுக்கு முன்பு நிகழ்ந்து முடிந்துவிடும் தேவராளக் கூத்துகளைப் பொருட்படுத்த மறந்துவிடுகிறோம். அல்லது, அதையும் கொண்டாடிக் களித்துவிடுகிறோம்.

காலம் கடந்த பின்பாவது நிறுத்தி நிதானமாகச் சிந்திக்கவும் தெளிவு பெறவும் நிச்சயமாக நமக்கு முன்சொன்ன மேடைச் சொற்பொழிவுகள் உதவப் போவதில்லை. இத்தகு நாவல்களைத்தான் நாம் சரணடைய வேண்டியிருக்கும்.

மாலனின் ‘தோழி’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி