பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கிளுகிளுப்பு தரக்கூடிய சில விஷயங்களுள் ஒன்று, புத்தகங்களில் கையெழுத்திடுவது.
எழுதத் தொடங்கி, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு அந்த மகிழ்ச்சி அருளப்பட்டது. மறக்கவே முடியாது. 2005 சென்னை புத்தகக் காட்சியில் டாலர் தேசம் வெளியாகியிருந்த நேரம். ஒவ்வொரு நாளும் குறைந்தது இருபது முதல் நாற்பது கையெழுத்துகள் போடுவேன். அவ்வளவு பேர் நம்மை விரும்புகிறார்கள், நம் எழுத்தை நம்புகிறார்கள் என்ற எண்ணம் தருகிற பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் விவரிக்கவே முடியாதவை. எப்போதும் பதற்றமாகவே இருக்கும். சிறிது அச்சமாகவும். அனைத்துக்கும் மேலே ஒரு ஜிகினாப் படலம் போல மேற்சொன்ன கிளுகிளுப்பும் இருக்கும்.
இதை அனைத்து எழுத்தாளர்களும் அனுபவித்திருப்பார்கள். என் விஷயத்தில் ஒரு சிறிய வித்தியாசம், இந்த அனுபவம் தருகிற கிளுகிளுப்புடன்கூட ஒரு குற்ற உணர்வு மெல்லச் சேரும். ஏனெனில் நான் முதல் முதலில் போட்ட கையெழுத்து என்பது என்னுடையதல்ல. என் அப்பாவினுடையது.
பள்ளி, கல்லூரி நாள்களில் நான் எவ்வளவு மோசமான மாணவனாக இருந்தேன் என்பது குறித்துப் பலமுறை சொல்லியிருக்கிறேன். அப்போது ஆடிய ஆட்டங்களுள் ஒன்று, தேவைப்படும் இடங்களில் அப்பாவின் கையெழுத்தை நானே போட்டுக் கொடுத்தது. ஒருமுறை, இருமுறை அல்ல. ஏராளமான தருணங்களில் அதைச் செய்திருக்கிறேன். என் அப்பாவின் கையெழுத்து அவ்வளவு ஒன்றும் எளிதானதல்ல. ஆனாலும் பழக்கத்தில் வராதது என்று ஏதுமில்லை அல்லவா? பலமுறை போட்டுப் பழகி, அவரது கையெழுத்தை அவரைக் காட்டிலும் துல்லியமாகப் போடும் அளவுக்குத் தேறியிருந்தேன்.
அவரது கடைசிக் காலத்தில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு, எழுதவே முடியாமல் போனபோது வேறு வழியின்றிச் சில முக்கியத் தாள்களில் அவர் அறியவே அவரது கையெழுத்தை நான் போடும்படி ஆகியிருக்கிறது. இதனாலெல்லாம் எப்போது ஆட்டோகிராஃப் போட நேர்ந்தாலும் கணப் பொழுதும் தாமதமின்றி அப்பாவின் நினைவு வந்துவிடுகிறது.
நான் என்ன ஆவேன் என்று எனக்கே சரியாகத் தெரியாதிருந்த காலத்தில், எப்படியும் உருப்படாமல்தான் போவேன் என்று சுற்றமும் நட்பும் சூடம் அணைத்து சத்தியம் செய்தது. எண்ணிப் பார்த்தால் சிறிது திகைப்பாகவே உள்ளது. எப்படி யோசித்துப் பார்த்தாலும் என்னை முற்றிலும் நம்பியவர்கள் இந்த உலகத்தில் இரண்டே பேர்தான். ஒருவர் என் அப்பா. இன்னொருவர் என் மனைவி. எனவே ஒவ்வொரு ஆட்டோகிராஃபின் போதும் மனத்துக்குள் அவர்கள் இருவருக்கும்தான் நன்றி சொல்கிறேன்.
இன்று மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கு முன்பதிவு செய்திருந்தவர்களுக்காக இரண்டு மணி நேரம் நிறுத்தாமல் கையெழுத்திட்டேன். அதே பதற்றம். அதே குற்ற உணர்வு. அதே கிளுகிளுப்பும்கூட.
உலகில் எவனெவனோ செய்கிற செயற்கரிய செயல்களைப் பார்க்க, இதெல்லாம் ஒன்றுமேயில்லை. ஆனால் நான் இருப்பதையும் செயல்பட்டுக்கொண்டிருப்பதையும் வேறெப்படி எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள இயலும்?