இருண்ட மலைகளும் இனப்பகை அரசியலும்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் சென்றிருக்கிறேன். அப்படிச் சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்று இப்போது புரிகிறது. ஏனென்றால் அன்று இம்பால் பள்ளத்தாக்கை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு மணிப்பூரைப் பார்த்துவிட்டதாக நினைத்துக்கொண்டேன். உண்மையில் மணிப்பூரின் மொத்த பரப்பளவில் இம்பால் என்பது ஒன்றுமேயில்லாத ஒரு சிறு புள்ளி.

ஆனால் அந்நிலப்பரப்பில் வாழும் மெய்தி பெரும்பான்மை சமூகத்தினர்தாம் மொத்த மணிப்பூரையும் கட்டி ஆள்கிறார்கள். மாபெரும் மலைவெளிகளில் வசிக்கும் சிறுபான்மை குக்கிகளும் நாகாக்களும் இதர இனக்குழு மக்களும் தமது சரித்திரம் முழுதும் விவரிக்க முடியாத கொடுமைகளைச் சந்தித்து வந்திருக்கிறார்கள். பாதுகாப்பற்ற வாழ்க்கை அவர்களை நிரந்தரமான அச்சத்தில் தள்ளியதன் விளைவு, மூர்க்கத்தனம் அவர்களுடைய அடையாளமானது. முறையான போர்ப்பயிற்சி பெற்ற பிரிட்டிஷ் படைகளுடன் மோதித் தோற்றதன் விளைவாகத் தமது கடவுள்களையே நிராகரித்துவிட்டு மதம் மாறியவர்கள் அவர்கள். தங்களைத் தோற்கடித்தவர்கள் எதிரிகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களை வெல்லச் செய்த கடவுளுடன் சகாயம் அவசியம் என்று முடிவு செய்யும் அளவுக்கு அப்பாவிகளாகவும் அன்றைக்க இருந்தார்கள்.

பிறகு கல்வி கற்றார்கள். ஆனால் அரசுத் துறைகளிலோ, இதர தனியார் துறைகளிலோ அவர்களுக்கு இரக்கமேயில்லாமல் வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டபோது வெறுப்பில் போதைப் பயிர் செய்யத் தொடங்கினார்கள். மணிப்பூருக்கு மியான்மர் பின் வாசல். மியான்மருக்கு மணிப்பூரின் அடர்ந்த மலைப் பிராந்தியங்கள் ஒரு தங்கச் சுரங்கம். கொஞ்சம் விட்டிருந்தால் ஓபியம் உற்பத்தியில் மணிப்பூர் ஆப்கனிஸ்தானை விஞ்சியிருக்கும்.

கணக்கு வழக்கில்லாத பணம் புரளத் தொடங்கும் இடங்களில் கண்மண் தெரியாத அரசியல் விளையாட்டுகள் இருக்கவே செய்யும். ஆனால் மணிப்பூர் மலைகளில் நடப்பவை மரண விளையாட்டுகள். ஒரு விஷயம். செய்தி என்று இங்கே நமக்கு வந்து சேருபவை அனைத்தும் இம்பால் பள்ளத்தாக்கில் இருந்து செய்து அனுப்பப்படுபவை மட்டுமே. மர்மங்கள் மிகுந்த மலைவெளிகளில் நடக்கிற எதுவும் முழுதாக வந்து சேராது.

இந்த 2023 கலவரத்துக்கு முன்பு மணிப்பூரில் குக்கிகளின் மலைக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமானால் அதற்குத் தனியே அரசு அனுமதி பெற வேண்டும். அது கேட்டதும் கிடைப்பதல்ல. ஏராளமான விசாரணைகள், சோதனைகளுக்குப் பிறகு மிகச் சிலருக்கு மட்டும் சாத்தியமாகும். செல்வாக்கு வேண்டும். சாமர்த்தியம் வேண்டும். இன்னும் நிறைய வேண்டும்.

கலவரத்துக்குப் பிறகு கடவுளே நினைத்தாலும் மலையேறிச் செல்ல முடியாத நிலை உண்டாகிவிட்டது. மலைக் கிராமங்களின் காவல் பூதங்களாகச் சுற்றி வந்துகொண்டிருக்கும் குக்கி தீவிரவாத இயக்கங்களிடம் அனுமதி பெறாமல் பள்ளத்தாக்கில் வீசும் காற்று கூட மேலேறிச் சென்று வீச முடியாது. அவ்வளவு கெடுபிடி. அத்தனைக் கொடூரங்கள்.

இன்றைக்கு அங்கே சக மனிதன் என்று யாருமில்லை. சக இனத்தவன் என்றால் மட்டும் தப்பிக்கலாம். வன்மத்தை வளரவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது அது தலைவிரி கோலமாகப் பேயாட்டம் ஆடும்போது கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இனம், மதம், சாதி, அரசியல் எல்லாமே பிரச்னையின் மையப்புள்ளிதான் என்றாலும் இவற்றுக்கு அப்பால் வேறொரு தீவிரமான பிரச்னை மணிப்பூரை இன்று ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. இன்றல்ல; என்றுமே அது தீரப் போவதுமில்லை, கலவரங்கள் ஓயப் போவதும் இல்லை. அமைதி என்று அவ்வப்போது எட்டிப் பார்ப்பதெல்லாம் மணிப்பூர் மக்கள் தமக்குத்தாமே தந்துகொள்ளும் இடைக்கால நிவாரணம் மட்டுமே. துயரம்தான். ஆனால் அதுதான் கள யதார்த்தம்.

கடந்த ஐந்து மாதங்களாக இந்த விவகாரத்துக்கு உள்ளேயேதான் உழன்றுகொண்டிருந்தேன். ஆய்வில் தெரிய வந்தவற்றை இதில் எழுதியிருக்கிறேன். இந்நூல் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். பதற்றம் தரலாம். உலகின் பெரிய ஜனநாயக தேசங்களுள் ஒன்றெனச் சொல்லிக்கொண்டு இவ்வளவு கீழ்த்தரமாகவெல்லாம் நம்மால் நடந்துகொள்ள முடியுமா என்று நிலைகுலைந்து போகச் செய்யலாம்.  ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன். உண்மைக்கு மாறாக இதில் ஒரு சொல்லும் இராது.

மணிப்பூர் கலவரம்: இனப்பகை அரசியலின் இருண்ட சரித்திரம் புத்தகத்தை முன்பதிவு செய்ய இங்கே செல்க.

 

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!