எழுத்தாளர்களின் தலையாய பிரச்னைகளுள் முதன்மையானது, கழுத்து வலி. பண்டைக்காலத் தமிழ் சினிமா மணப்பெண்களைப் போலப் பெரும்பாலான நேரங்களில் குனிந்த தலை நிமிராமல் மானிட்டரைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருப்பதால் இது வருகிறது. ஒப்பீட்டளவில் மற்ற எழுத்தாளர்களுக்கு உள்ளதைப் போல எனக்குக் கழுத்து பெரிதில்லை என்றாலும் கழுத்து என்ற ஒன்று இருக்கிறது. அது வலிக்கவும் செய்யும். மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள இன்னொரு வேறுபாடு என்னவென்றால், கழுத்து வலி வந்தால் அவர்கள் எழுந்து சென்று வேறேதாவது செய்வார்கள். நான் அப்போதும் குனிந்த தலை நிமிராதவனாகவே இருப்பேன். வணங்காமுடியாக வளைய வந்த காலமெல்லாம் காணாமல் போய் யுகமாகிவிட்டது.
நிற்க.
இந்த கழுத்து எக்சர்சைஸ், யோகா, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று உடனே ஆயிரத்தொரு நல்லுபாயங்கள் இதற்கு மாற்றாகத் தோன்றும். எல்லாம் உள்ளவைதான். எல்லாம் தெரிந்தவைதான். நான் எத்தனை ஒழுங்கு என்பது மட்டும்தான் நாட்டு மக்களுக்குத் தெரியாது.
நல்லதோ கெட்டதோ. எந்த ஒரு பழக்கத்துக்கும் ஆயுள் சந்தா விசுவாசம் செலுத்தும் வழக்கம் எனக்கில்லை. எல்லாம் சிறிது நாள்களுக்கு மட்டுமே. எண்ணிப் பார்த்தால் பெற்றோர், மனைவி, மகளைத் தவிர நான் மாற்றாமல் வைத்திருப்பவை என்று ஏதுமில்லை. இந்த முன்னெச்சரிக்கை போதும் என்று நினைக்கிறேன்.
பொதுவாகக் கலைஞர்களுக்குத் தலைக்கு மேலே இருக்கும் பாரம் எனக்கு நெஞ்சுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. அது பூர்விக சொத்து என்பதால் விட்டுத் தொலைக்கவும் முடியவில்லை. எனவே, மத்தியப் பிரதேசத்துக்கு இடையூறில்லாமல் டைப் செய்ய வசதியாக என்னுடைய எழுதும் மேசையை அமைத்துக்கொண்டதுதான் உள்ளதிலேயே நான் செய்த பெருந்தவறு. மேசை இரண்டடியில் இருந்தால் மானிட்டர் கண்ணுக்கு நேரே உள்ளபடி அமையவேண்டும் என்றெல்லாம் அப்போது தோன்றவில்லை. இரண்டடி உயர மேசையில் என்னுடைய பதினான்கு இஞ்ச் லேப்டாப்பை வைத்ததால் நான் க்ளோஸ்டு பிராக்கெட் மாதிரியே எப்போதும் வாழவேண்டியதாகிவிட்டது. இதன் விளைவுதான் நாள்பட்ட கழுத்து வலி. எட்டு அம்ச எக்சர்சைஸ் முதல் வீரியம் மிக்க வெர்ட்டீன் வரை எல்லாம் பார்த்துவிட்டேன். அது போவேனா என்றது.
சரி, ஒரு மாற்று உபாயம் செய்யலாம் என்று லேப்டாப்புக்கு அமேசானில் ஒரு ஸ்டாண்ட் வாங்கி நிற்க வைத்தேன். அது புஷ்பா 2வில் அல்லு அர்ஜுன் தனது என்ட்ரி காட்சியில் தொத்திக்கொண்டு தொங்குவது போல நிற்பதால் கை வைத்து டைப் செய்ய முடியாது. இதற்காக ஒரு ஆப்பிள் கீ போர்ட் வாங்கினேன். கீ போர்டை முன்னால் வைத்துக்கொண்டு, அதற்கு முன்னால் லேப்டாப்பை வைத்துக்கொண்டு டிராக் பேடைப் பயன்படுத்த இயலாதல்லவா? எனவே மௌஸ் தேவைப்பட்டது.
வெறும் லேப்டாப்புடன் வாழ்ந்தவன் கீ போர்ட், மௌஸுடன் காலம் தள்ளத் தொடங்கிய சிறிது காலத்துக்கு எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் இருந்தது. என்ன சிக்கல் வந்ததென்றால், திடீர் திடீரென்று மௌஸானது சொதப்பும். டொப் டொப் என்று அதன் தலையில் தட்டி, தேய் தேய் என்று சேட்டுகள் மாவா தேய்ப்பது போலத் தேய்த்து நகரச் செய்யும்படி ஆனது.
இது ஆப்பிள் கருவிகளுக்கும் சாதாரண மௌஸுக்கும் இடையில் நடக்கும் துவந்த யுத்தம் என்று நினைத்தேன். பிறகு ப்ளூ டூத் சிக்கல் இருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஒரு கட்டத்தில் மௌஸ் வேலை செய்தது. ஆனால் ஒருபோதும் அதனை file menuவுக்கு எடுத்துச் செல்லவே முடியாமல் போனது. கட்டத்துக்குள் நிற்கும் கஸாப்ளாங்காவினைப் போல ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்குள் மட்டும்தான் அலைந்து திரிவேன் என்று அழிச்சாட்டியம் செய்தது.
அடுத்தது என்ன? ஆப்பிள் மவுஸ். விலை விசாரித்தால் ஏழாயிரத்து ஐந்நூறு.
இருநூறு முந்நூறு விலைக்கு மௌஸ் இருக்கும்போது ஏழாயிரத்து ஐந்நூறு செலவழித்து ஆப்பிள் மௌஸ் வாங்குவதா என்று மிகவும் யோசனையாக இருந்தது. ஆனால் இருநூறு முந்நூறு மௌஸ் ஏனோ என் மேக்புக் ப்ரோவுடன் செட்டு சேர மறுத்தது.
எனவே மனச்சாட்சிக்கும் உறுத்தல் இல்லாமல், வேலையும் கெடாமல் இருக்கும் பொருட்டு மௌஸ் என்னும் எண்ணத்தை முற்றிலும் தொலைத்துத் தலை முழுகி ஒரு எக்ஸ்டர்னல் டிராக் பேட் வாங்கினேன்.
இது நடந்தது நேற்று.
இந்த டிராக் பேட் ஆப்பிளுடையது. எனவே ஆன் செய்ததுமே அன்பே அன்பே என்று ஓடிச் சென்று என் லேப்டாப்பைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டது. ஆக ஒரு தொல்லை தீர்ந்தது என்று நினைத்துக்கொள்கிறேன்.
ஸ்டாண்ட் வைத்து அதற்கு மேலே லேப்டாப். லேப்டாப்பில் கீபோர்ட் உண்டு. ஆனாலும் ஒரு எக்ஸ்டர்னல் கீபோர்ட். லேப்டாப்பில் டிராக்பேட் உண்டு. ஆயினும் ஒரு எக்ஸ்டர்னல் டிராக்பேட். மௌஸுக்கு மகத்தான மாற்றுதான். சந்தேகமில்லை. ஆனால் விலை 12,500. இதற்கு ஆப்பிள் மௌஸே வாங்கியிருக்கலாம் என்று மனச்சாட்சி உறுத்தியது.
இருநூறு முந்நூறு விலை கொண்ட மௌஸ்கள் வாழும் உலகில் ஏழாயிரத்தைந்நூறு விலை கொண்ட மௌஸ் என்பது அடாத செயலாக இருக்கலாம். ஆனால், இருநூறு முந்நூறுக்குக் கிடைக்க வாய்ப்பில்லாத டிராக் பேடைப் பன்னிரண்டாயிரத்து ஐந்நூறுக்கு வாங்கலாம் அல்லவா?
பெரிய செலவுதான். ஆனால் மனச்சாட்சி உறுத்தாது. கழுத்தும் வலிக்காதிருக்குமானால் சரி.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.