பைந்நாகப் பாய்

ஒரு செங்கல் அளவு பெரிதான நோக்கியா, அதில் பாதி அளவுள்ள ஒரு விண்டோஸ் போனுக்குப் பிறகு ஐபோன் 3ஜி வாங்கினேன். கடந்த பதிமூன்று ஆண்டு காலமாகப் பல்வேறு ஐபோன்களைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறேன். அதன் எளிமை, சொகுசு, நூதனங்களின் ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்றுவரை அதில் மாற்றமில்லை என்றாலும் இன்று ஐபோனுக்கு விடை கொடுத்துவிட்டு ஆண்டிராய்ட் போனுக்கு மாறினேன்.

காரணம் இது: 

என் ஐபோன் 14 இல் பேட்டரி பிரச்னை. அதிகம் சூடானது. சார்ஜ் நிற்கவில்லை. பேட்டரி மாற்றினால் சரியாகிவிடும். ஆனால் வாரண்டி காலம் முடிந்த பிறகு ஆப்பிளில் ஒரு ஸ்பேர் பார்ட் வாங்குவது என்பது ஒரு சொந்த செலவு சூனியம். அதற்கு இன்னொரு போன் வாங்கிவிடலாம். ஆப்பிளில் 14ஐ விட்டால் நான் வாங்கக்கூடிய ஒரே மாடல் SE. ஐம்பதாயிரம் ரூபாய் செலவு என்றாலும் பழைய போனைப் போட்டுவிட்டு வாங்கும்போது சரி பாதி கொடுத்தால் போதும். எனக்கு 14க்கும் மேலே உள்ள மாடல்களுக்குச் செல்ல ஆர்வமில்லை. ஏனெனில் நான் போன் வெறியன் இல்லை. பயன்பாடும் குறைவானதே.

இக்காரணங்களால் ஆப்பிள் கடையில் SE மாடலைக் கேட்டேன். அது வருவதில்லை என்று சொன்னார்கள். தெரிந்த வேறொரு மொத்த கொள்முதல் ஏஜெண்டிடம் விசாரித்தபோதும் இல்லை, வருவதில்லை என்று சொன்னார். ஆனால் ஆப்பிள் தளத்தில் அந்த மாடல் இருந்தது. சரி, ஆன்லைனில் மட்டும் விற்கிறார்கள் என்று நினைத்து அதையும் முயற்சி செய்து பார்த்தேன். எல்லா பக்கமும் ஒழுங்காக நகர்கிறது. ஆனால் வாங்குமிடம் வரும்போது மட்டும் சண்டித்தனம் செய்து சலிப்பூட்டி அனுப்பிவிடுகிறது. ஒருமுறை இருமுறை அல்ல. பல முறை முயற்சி செய்தும் ஒன்றும் நடக்கவில்லை. (நான் அமேசானில் விலைகூடிய பொருள்களை வாங்குவதில்லை.)

ஒரு விலை குறைவான மாடலை, இருப்பது போலக் காட்டிக்கொண்டு இல்லாமலாக்கி முற்றிலும் ஒழித்துவிட்டு ஐபோன் 14ஐயே லோ-எண்ட் மாடலாக்கிவிடும் திட்டம் என்பது புரிந்தது. அதாவது ஆப்பிளின் லோ எண்ட் விலை என்பதை எழுபதாயிரம் ஆக்கி, அதற்குக் கீழே இறங்கவே முடியாமல் செய்துவிடுவது. மாறுவது என்றால் அப்கிரேட் மட்டும்தான் என்பது சர்வாதிகாரமாகத் தோன்றியது. அவர்கள் கொடுக்கும் இரண்டு அல்லது மூன்று அப்கிரேட் ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது ஒன்றே ஆப்பிள் ரசிகர்களின் விதி என்பது இதன் பொருள்.

இவனுக்கோ எவனுக்குமோ என்றைக்குமே அடிமையாக இருக்க என்னால் முடியாது. என் சுதந்தரத்தை மறுக்கும் எதனுடனும் உறவு காக்க விருப்பமில்லை. எனவே, இப்போதைக்கு போன் அளவில் ஆப்பிளைத் தலைமுழுகிவிட முடிவு செய்தேன்.  வாசகரும் நண்பருமான லுதுபுர் ரஹ்மான் நெடுங்காலமாக என்னை அவரது போன் கடைக்கு அழைத்துக்கொண்டிருந்தார். இன்று இம்முடிவெடுத்ததும் அவரை அழைத்து விவரம் சொன்னேன். என் ஐபோன் 14ஐப் போட்டுவிட்டு நேற்று வரை எண்ணிக் கூடப் பார்த்திராத ஒரு ஆண்டிராய்ட் போனை முதல் முதலாகத் தொட்டுத் தேர்ந்தெடுத்தேன். (S23)

அவரது ஊழியரே சேதாரமில்லாமல் என் பழைய போனிலிருந்த அனைத்தையும் (வாட்சப் நீங்கலாக) புதிய போனுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டார். இனி இதைப் புரிந்துகொள்ள வேண்டும். பழக வேண்டும். இன்னொரு அனுபவம்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அநேகமாகப் பத்தாண்டுகள் ஆகியிருக்கும். நண்பர் மாயவரத்தான் ரமேஷ்குமார் (பின்னாளில் ரஜினியின் அரசியல் பல்டி சமயத்தில் நான் தொடர்ச்சியாகக் கிண்டல் செய்ததன் விளைவாகக் கோபித்துக்கொண்டு பேசாமல் போய்விட்டார்.) ஒருமுறை சொன்னார். ஆண்டிராய்டை இவ்வளவு கிண்டலடிக்கும் நீங்கள் கண்டிப்பாக ஒருநாள் இதற்கு வந்தே தீருவீர்கள்.

மாட்டவே மாட்டேன் என்று அன்று சொன்னேன். ஆனால் அவர் சொன்னதுதான் நடந்திருக்கிறது.

 நண்பர் வென்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter