நானொரு மாண்டேக் சிங் அலுவாலியா

ஒவ்வொரு புத்தாண்டு தொடங்குவதற்கு முன்பும், அதற்கு முந்தைய டிசம்பரில் அடுத்த ஒரு வருடத்துக்கான திட்டங்களை எழுதுகிறேன். இந்தத் திட்டம் எழுதும் பணி என்பது ஒரு நாவல் எழுதுவதினும் கடினமானது, கவனம் கேட்பது. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் போராளி மனநிலையுடன்தான் இச்செயலில் ஒவ்வொரு முறையும் ஈடுபடுகிறேன். அந்தத் தீவிரத்தை உங்களால் புரிந்துகொள்ளவே முடியாது, நீங்கள் என்னை நிகர்த்த அல்லது என்னைக் காட்டிலும் தீவிரமான செயல் வெறியனாக இருந்தாலொழிய.

இருபது வருடங்களுக்கும் மேலாக எனக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. கேலண்டரில் என் நட்சத்திரத்துக்குரிய நாள் பார்த்து, வளர்பிறையா என்று பார்த்து, கரிநாள், சந்திராஷ்டமக் கசுமாலங்கள் இல்லாதிருக்கிறதா என்று பார்த்து அதன் பிறகே திட்டம் எழுதுவேன். இது இன்றுவரை என் மனைவிக்குக் கூடத் தெரியாது. தெரிந்தால் மிக நிச்சயமாகக் கிண்டல் செய்வாள் என்கிற அச்சமே காரணம்.

ஒரு முழு வருடத்துக்கான திட்டத்தை எழுதி முடிக்க எனக்குக் குறைந்தது பத்து மணி நேரம் பிடிக்கும். பத்து மணி நேரத்தில் என்னால் தலா ஐந்நூறு சொற்கள் அளவில் ஆறேழு கட்டுரைகள் எழுதிவிட முடியும். ஒரு நாவலில் இரண்டு அத்தியாயங்களை எழுதிவிட முடியும். ஏதாவது சீரியலுக்கு வசனம் என்றால் அநாயாசமாக முப்பது காட்சிகளை எழுதி முடிக்க முடியும். ஆனால் இத்திட்டக் குறிப்புகள் அதிகபட்சம் இரண்டு பக்கங்களுக்கு மிகாது. ஆனால் அதுதான் அனைத்தினும் உயிரை உறிஞ்சக்கூடியது. மாற்றி, மாற்றி, மாற்றி, மாற்றிப் பைத்தியமே பிடித்துவிடுமளவுக்கு மாற்றிக்கொண்டே இருப்பேன். அதை வடிவமைப்பது அவ்வளவு எளிதல்ல.

முதலில் என்னாலேயே நம்ப முடியாத, நடப்பதற்கு வாய்ப்பே இல்லாத மிகப்பெரிய இலக்கைத் தீர்மானித்துக்கொள்வேன். அதுதான் தொடக்கம் என்பதால் அதுதான் அனைத்தினும் முக்கியம். பிறகு அந்த இலக்கைத் தொடுவதற்கு என்னிடம் உள்ள பிரச்னைகள் என்னென்ன என்று பட்டியல் இடுவேன். எனக்கு வெளியில் இருந்து வரக்கூடிய பிரச்னைகள் அடுத்து. இந்தச் சிக்கல்களை எழுதும்போது சிறிதும் மிகை இருக்கக் கூடாது. பொய்க் கலப்பு கூடாது. கற்பனை நுழைந்துவிடக் கூடாது என்பது முக்கியம்.

இதன் பிறகு இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க என்னிடம் என்னென்ன வழிகள் உள்ளன என்று பட்டியலிடுவேன். அநேகமாக ஒரு வழியும் இருக்காது. ஏனென்றால் crisis management இல் நான் ஒரு பெரிய சைபர். எனவே, பிரச்னை வரும்; வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று எழுதிவிட்டு, பணியைத் தொடங்கும் கட்டத்துக்குச் செல்வேன்.

மேற்சொன்ன மாபெரும் இலக்கை 365 சிறிய துண்டுகளாகப் பிரிப்பது அடுத்தப் பணி. இதைச் சுலபமாகச் செய்துவிடுவேன். பிரிக்கும்போதே என் பிரத்தியேக சோம்பேறித்தனத்துக்கும் மூட் இல்லாத நாள்களுக்கும் எதிர்பாராத சம்பவங்களுக்கும் இன்னபிற excuseகளுக்கும் இடைவெளிவிட்டே பிரிப்பேன். குத்துமதிப்பாக 65 நாள்களை விடுமுறை நாள்கள் என்று எடுத்துக்கொண்டு முந்நூறு நாள்களுக்கான திட்டமாக அதனை வகுத்துக்கொள்வது வழக்கம். சில வருடம் அது 250 நாள் திட்டமாகவும் சுருங்கும். நாள்களின் எண்ணிக்கை சுருங்குமானால் ஒவ்வொரு நாளின் வேலையளவு அதிகரிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதன் பிறகு ஒவ்வொரு நாளுக்குமான திட்டத்துக்குள் நுழைவேன். காலை எத்தனை மணிக்கு எழுவது? இரவு எப்போது படுக்கச் செல்வது? நடுவே மதியத் தூக்கத்துக்கு எவ்வளவு நேரம் தர வேண்டும்? வெட்டி வேலைகளுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும்? இவற்றை முதலில் குறித்துவிட்டு, ஒரு நாளில் எழுத்துக்குத் தரவேண்டிய நேரத்தை வரையறை செய்வேன். பொதுவாக ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாக நான் எழுதியதில்லை. அதிகபட்சம் பதினாறு மணி நேரம் வரை அது சென்றிருக்கிறது. சில நெருக்கடிக் காலங்களில் பதினெட்டு மணி நேரம்கூட எழுதியிருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. சராசரியாக ஒரு நாளைக்கு எழுதுகிற நேரம் என்பது எட்டு முதல் பத்து மணி நேரமாக இருக்கும்படி அமைத்துக்கொள்வது வழக்கம். (வேஸ்டேஜ் உள்பட.) நடுவே கன்னத்தில் கை ஊன்றி சிந்திக்கும் காலமெல்லாம் கணக்கில் சேரக் கூடாது. சிந்திக்கும் நேரத்தைத் தனியே கொடுத்துவிடுவேன் (பெரும்பாலும் காலை நடை நேரம் மற்றும் மூன்று வேளை உணவு உண்ணும் நேரம், டாய்லெட்டில் இருக்கும் நேரம்.) அதைக் காலை-மாலை என்று பிரித்துக்கொண்டு எதை எவ்வளவு நேரம் எழுதுவது என்று அடுத்தக் கட்டத்துக்குச் செல்வேன்.

இதற்கு முதலில் ஓராண்டில் என்னவெல்லாம் எழுதவிருக்கிறோம் என்கிற தெளிவான திட்டம் கைவசம் இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நாவல், மூன்று non fiction புத்தகங்கள், ஒன்றிரண்டு பத்திகள், ஆயிரம் ஃபேஸ்புக் குறிப்புகள் என்று ஒரு திட்டம் போடுவோமானால், அதனதன் சப்ஜெக்ட் என்ன, ஒவ்வொன்றும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கும், எவ்வளவு வேலை வாங்கும் என்று குத்துமதிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். எவ்வளவு படிக்க வேண்டியிருக்கும், என்னவெல்லாம் படிக்க வேண்டியிருக்கும் என்ற தெளிவு அதனினும் முக்கியம். படிப்பதற்கு நேரம் ஒதுக்குவது அனைத்தினும் அவசியம். நான் பொதுவாக ஒவ்வொரு இருநூறு வார்த்தை எழுத்துக்கும் ஐந்நூறு சொற்கள் படிப்பது என்ற வழக்கத்தை (இப்போது) வைத்துள்ளேன். ஆனால் நாவல் எழுதும்போது இன்னொருவரின் நாவலைப் படிக்க மாட்டேன். ஏதாவது நான் ஃபிக்‌ஷன் தான் படிப்பேன். அதே போல நான் ஃபிக்‌ஷன் எழுதிக்கொண்டிருக்கும்போது கட்டுரை நூல்களைத் தொட மாட்டேன். அச்சமயங்களில் பஷீர், கிரா, மீரான் போல மொழிக் கொச்சையைக் கலையாக்கும் படைப்பாளிகளையே பெரிதும் விரும்புவேன்.

இலக்கில்லாமல், தோன்றுவதை எழுதுவது, அவ்வப்போதைய தேவைக்கு எழுதுவது என்ற வழக்கம் எனக்குக் கிடையாது. குத்துமதிப்பாகவேனும் திட்டம் அவசியம். இல்லாவிட்டால் எதுவும் புத்தகமாகாது. அப்படியே டிஜிட்டல் மரணம் அடைந்துவிடும்.

இந்தத் திட்டங்களைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு எனது அன்றாட நேர ஒதுக்கீட்டுக் கட்டங்களில் ஒவ்வொன்றையும் பொருத்துவது அடுத்தக் கட்டம். தீவிரமாகத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்த காலத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்கும் இடையில் பத்து நிமிட ஓய்வு; அதில் ஐந்து நிமிடம் யோசித்து, அடுத்த ஐந்து நிமிடத்தில் ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ் எழுதிவிடுவது என்று ஒரு திட்டம் வைத்தேன். இப்படி எழுதிய குறிப்புகளில் தேர்ந்தெடுத்துத் தொகுத்தவைதான் ‘உய்’ – வரி இலக்கியம் தொகுப்பு. வேறொரு வருடம் டாய்லெட்டில் இருக்கும் நேரத்தில் மட்டும் ஃபேஸ்புக் குறிப்புகளை எழுதுவது என்று திட்டமிட்டேன். அந்த ஆண்டு எழுதியவற்றின் தொகுப்புதான் 14ஆம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்.

எழுத்தைத் தவிர எதுவும் முக்கியமில்லை என்று நினைப்பவன் இதற்கெல்லாம் வெட்கமே படக்கூடாது. எவன் சிரித்தால் என்ன? எவன் என்ன சொன்னால் நமக்கென்ன? கிடைத்திருக்கும் சிறிய வாழ்க்கையில் அதிகபட்சம் என்ன முடியும் என்று பார்க்காமல் போய்விடக் கூடாது என்றொரு எண்ணம் சிறு வயதிலேயே ஏற்பட்டுவிட்டது.

பொதுவாகக் காலை வேளைகளில் எனக்கு எழுத்து வேகம் குறைவாக இருக்கும். எனவே அதிகம் மூளையைக் கசக்க வேண்டிய அவசியமில்லாத பணிகளை அந்தப் பொழுதுக்கு அளிப்பேன். பகல் பொழுதுகளில் எனக்கு நான் ஃபிக்‌ஷன் எழுதுவது சுலபம். நாவல் என்றால் இரவு பத்து மணிக்குப் பிறகுதான் நன்றாக வரும். இது நபருக்கு நபர் மாறக்கூடியது. நமக்கு எது வசதி என்பதைக் கவனித்துக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் சொற்களிலிருந்து மூவாயிரம் சொற்கள் வரை எழுதுவது என் வழக்கம். தேவைக்கேற்ப இதில் கூடுதல் குறைவு இருக்கலாம். ஆனால் இரண்டாயிரத்துக்குக் குறைந்தால் அன்று சரியாக உறக்கம் வராது.

புனைவு, புனைவல்லாதவை இரண்டையும் பிரித்து வைக்கும் அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டிலும் வேலை செய்யும்படியாகவே திட்டமிடுவேன். அதுதான் வேலை கெடாமல் நடப்பதற்கு உதவும். ஒன்றை முடித்துவிட்டு அடுத்ததற்குச் செல்லலாம் என்று நினைத்தால் கதை முடிந்தது. பொதுவாக நாவல்கள், சிறுகதைகள் எல்லாம் எங்கே போய் முட்டிக்கொண்டு நிற்கும் என்று சொல்லவே முடியாது. முட்டிக்கொண்டு பல மாதங்கள், வருடங்களுக்குக் கூட எழாமல் அடம் பிடிக்கும். என் அனுபவம் அப்படிப்பட்டது. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை ஒரே சமயத்தில் தொடங்குவதே எனக்கு வசதி. இப்படிச் செய்வதன் மூலம் இடையே குறுக்கிடும் சிறு தோல்விகளால் மனச் சோர்வு ஏற்படாதிருக்கும்.

ஒரு நாளில் இரண்டாயிரம் சொற்கள் என்றால் அதில் எழுநூற்றைம்பது நாவலுக்கு. இரண்டு ஐந்நூறுகள் இருவேறு நான் ஃபிக்‌ஷன் புத்தகங்களுக்கு. மீதம் உள்ளவை ஃபேஸ்புக் குறிப்புகளுக்கு என்று பிரித்துவிடுவது. அதிலும் நகைச்சுவைக் குறிப்புகள் இவ்வளவு, இலக்கியம் இவ்வளவு, சாப்பாடு இவ்வளவு, பொது விஷயம் இவ்வளவு, ஊர் வம்பு இவ்வளவு என்று உட்பிரிவுகள் உண்டு.

நூறு சதம் இதனைக் கடைப்பிடிப்பது என்பது நிச்சயமாக முடியாதுதான். ஆனால் இந்தளவு திட்டம் இருந்தாலொழிய என்னால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. ஏனெனில், என் சோம்பேறித்தனம் உங்களால் கற்பனைகூடச் செய்ய முடியாதது.

இவ்வளவு யோசித்து, திட்டமிட்டு, ஒவ்வொரு நாளையும் பிரித்துக்கொண்டு செய்ததெல்லாம் சரியாக இருந்துவிடுமா என்றால் அதிகபட்சம் நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து சதமானம் தேறும். அதற்குத்தான் தொடக்கத்திலேயே நம்ப முடியாத மிகப் பெரிய இலக்காக நிர்ணயித்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னேன். அதில் பாதிக்கும் கீழாக வருமானால்கூட நமக்கு லாபமாகத்தான் இருக்கும். ஒரு புயலடித்து ஓய்ந்தால் மாநில அரசு ஐயாயிரம் கோடி நிதி கேட்கிறது. மத்திய அரசு தருவதென்ன? ஐந்நூறு கோடிக்கும் குறைவு. ஆனால் நிதி, நிதிதானே? பத்து சதமானாலும் லாபம்தான். அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிற்க. இவ்வளவு சொன்னபின்பு இறுதியாக ஒன்று மிச்சம்.

ஒவ்வோராண்டும் இப்படித் திட்டமிட்டுத்தான் ஆரம்பிக்கிறேன். ஆனால் இதுவரை ஓராண்டுகூட என் திட்டப்படி முழுதாக எதுவுமே நடந்ததில்லை. நிறைய மாறிவிடும். முழுவதுமேகூட மாறிவிடும். திட்டத்தைவிடக் கூடுதலாகவும் சில சமயம் அமையும். சொற்பமாகவும் போய்விடும். ஒன்றும் செய்ய முடியாது. இந்த வருடமே நான் போட்ட திட்டம் வேறு, நடந்திருப்பது வேறு. மணிப்பூர் கலவரம், கணை ஏவு காலம் இரண்டுமே நான் எண்ணிப் பாராதவை. ஆனால் அமைந்தது.

அது ஒரு பிரச்னையில்லை. புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். மாறுதலுக்குள்ளாவதற்காகவேனும் எனக்குக் கைவசம் ஒரு திட்டம் இருந்தாக வேண்டும். அதுதான் அடிப்படை. அது இல்லாவிட்டால் என்னால் 108 ஓம் முருகா கூட ஒழுங்காக எழுத முடியாது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter