சொல்லாமல் சொல்லிவைத்த பாடம்

உவேசா முன்னுரைகள் என்ற சிறிய தொகுப்பு நூல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் பதிப்பித்த சில புராதன இலக்கியப் பிரதிகளுக்கு எழுதிய முன்னுரைக் குறிப்புகளைக் கொண்ட நூல் இது.

சிறுபாணாற்றுப்படை அதிலொன்று.

//சிறுபாணாற்றுப்படை என்பது நக்கீரர் முதலிய கடைச் சங்கப் புலவர்களால் இயற்றப்பட்டு, அவர்களால் தொகுக்கப்பெற்ற பத்துப் பாட்டினுள், மூன்றாவதாக உள்ள ஒரு நேரிசை ஆசிரியப்பா. இஃது இருநூற்றுப் பத்தொன்பது அடிகளையுடையது//என்று தொடங்குகிறார்.

இயற்றியவர்கள் குறித்த குறிப்பு, தொகுத்ததும் அவர்களேதாம் என்கிற குறிப்பு, எந்தப் பா வகை என்கிற சுட்டல், எத்தனை அடிகள் என்கிற கணக்கு – இவை அனைத்தும் முதல் வரியில் வந்துவிடுகின்றன.

இதன் பிறகு பத்துப் பாட்டில் உள்ள மற்றவை குறித்த பட்டியலைக் கொடுத்து எதையும் எங்கேயும் போய்த் தேட வேண்டாம் என்று தடுத்துவிடுகிறார். பிறகே சிறுபாணாற்றுப் படைக்குள் நுழைகிறார். மெல்ல மெல்ல அதன் சிறப்புகளைத் துலக்கிக் காட்டிக்கொண்டே வருகிறார்.

இதில் திகைக்க வைத்த அம்சம், சிறுபாணாற்றுப்படையின் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் குறித்து வருகிற ஓர் இடம். நச்சினார்க்கினியர் யார் என்று வாசகருக்குத் தெரிவிக்க வேண்டும். வெறும் பெயர் போதாது என்பது சாமிநாதய்யரின் நிலைபாடு. எனவே சுருக்கமாக அவரது வரலாற்றை விவரிக்கிறார். பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். மதுரைக்காரர். பிராமண குலத்தில் பிறந்தவர். பாரத்துவாச கோத்திரத்துக்காரர். சைவ சமயத்தைச் சேர்ந்தவர்.

சொல்லிக்கொண்டே வரும்போது சிறிது யோசிக்கிறார். நச்சினார்க்கினியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்று உனக்கெப்படித் தெரியும் என்று யாராவது கேட்டுவிட்டால்?

உவேசா எழுதுகிறார்:

//வண்டிமிர் சோலை மதுரா புரிதனி, லெண்டிசை விலங்க வந்த வாசான், பயின்ற கேள்விப் பாரத் துவாச நான்மறை துணிந்த நற்பொருளாகிய, தூய ஞான நிறைந்த சிவச்சுடர், தானேயாகிய தன்மையாளன் என்னும் உரைச் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். சிவஸ்தலங்களுட் சிறந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய ‘திருச்சிற்றம்பலம்’, ‘பெரும் பற்றப்புலியூர்’ என்பவற்றை முறையே ஆறெழுத்தொரு மொழிக்கும் ஏழெழுத்தொருமொழிக்கும் உதாரணமாக இவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்து மொழிமரபில், ‘ஓரெழுதொருமொழி’ என்னும் சூத்திரத்து விசேடவுரையிற் காட்டியிருத்தலாலும், சைவ சமயத்துச் சிறந்த நூல்களாகிய திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்பவற்றினின்றும் தமது உரைகளிற் பலவிடங்களில் இலக்கிய இலக்கணப் பொருள்களுக்கன்றித் தத்துவப் பொருளுக்கும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டியிருத்தலாலும், அங்ஙனம் மேற்கோள் கொண்ட சிலவிடங்களில் எழுதியுள்ள விசேடவுரைகளாலும், சீவக சிந்தாமணியில், ‘மேகம் மீன்ற’ என்னும் 333 ஆம் செயுளில் ‘போகம்மீன்ற புண்ணியன்’ என்பதற்கு எழுதிய விசேடவுரையாலும், திருமுருகாற்றுப்படை உரையிற்காட்டிய சில நயங்களாலும், இவரது சைவ சமயம் நன்கு வெளியாகும்.//

எங்கு தொடங்குகிறது?

சிறுபாணாற்றுப்படை. அதற்கான அறிமுகம். ஆனால் தனது ஒரு (உரையாசிரியர் பற்றிய) குறிப்பு தேவையற்ற குழப்பங்களையும் விவாதங்களையும் உண்டாக்கி, மூலத்தினின்று வாசகரை நகர்ந்து செல்ல வைத்துவிடக் கூடாது என்பதற்காக இத்தனை ஆதாரங்களைக் கையோடு கோத்துக் கொடுத்துவிடுகிறார்.

எழுத்தாளன் என்றால் இவ்வளவு அக்கறை, இவ்வளவு ஒழுக்கம், இவ்வளவு நேர்த்தி இருந்தாக வேண்டும் என்பது இதில் அவர் சொல்லாமல் சொல்லி வைத்த இன்னொரு பாடம்.

Share