ருசியியல் – 28

திடீரென்று ஒரு கிறுக்குத்தனம். தொடர்ச்சியாக இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒன்றும் உயிர் போய்விடாது என்பது தெரியும். ஆனால் வயிற்றில் பசி இருந்தால் காரியம் சிதறும். வீரியம் குறையும். இது வேண்டாத வம்பு என்று உள்ளுணர்வு சொன்னது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். வெறும் இரண்டு நாள்! ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? என்னதான் காரியம் சிதறி, கோட்டையே தரைமட்டமானாலும் திருப்பிக் கட்டவா முடியாது? எம்பெருமானே, என் பக்கம் இரு என்று உத்தரவு போட்டுவிட்டு களத்தில் இறங்கினேன்.

ஆனால் நானெல்லாம் குத்புதீன் ஐபக் வம்சத்தில் நாக்குக்குக் கப்பம் கட்டி வாழ்கிற ஜென்மம். அதனால் விரத காலத்தை ஒரு பெரும் விருந்தோடு ஆரம்பிப்பதே முறை என்று முடிவு செய்தேன். சென்ற வாரத்தில் ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு மாயாபஜார் ரங்காராவைத் தோற்கடிக்கும் உத்தேசத்துடன் உண்ண அமர்ந்தேன்.

அன்றைய எனது மெனுவானது இவ்வாறு இருந்தது. நெய்யில் செய்த புளியோதரை, பலப்பல காய்கறிகள் போட்டுச் சமைத்த சாம்பார் சாதம், மாதுளம்பழம் போட்ட தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய். இதோடு நிறுத்துவது அடுக்குமா? இனிப்பில்லாமல் ஒரு விருந்தா? எனவே எடு ஒரு ஐஸ் க்ரீம்.

மேற்படி சமாசாரங்களெல்லாம் ஒரு காலத்தில் எனது தினசரி மெனுவில் வழக்கமாக இருந்தவைதான். ஆனால் கடந்த ஒரு வருடமாக உணவு மதமாற்றம் கண்டு, இம்மாதிரி மாவுச் சத்து மிக்க உணவுகளை அறவே தவிர்த்து வந்தேன். ஆனால் புரட்சி செய்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டால் அதையெல்லாம் பார்க்க முடியுமா? அப்புறம் சரித்திரத்தில் எங்ஙனம் ஏறி உட்கார்வது?

சரித்திரத்தில் ஏற வேண்டுமென்றால் முதலில் மண்டைக்குள் சாத்தான் ஏற வேண்டும். அவன் ஏறினால் இந்த மாதிரி என்னவாவது செய்யச் சொல்லுவான். எனவே செய்தேன். என் நோக்கம், இந்த திடீர் அதிர்ச்சியை உடம்பு இயந்திரத்துக்குக் கொடுப்பதன் மூலம் தடாலடியாகக் கொஞ்சம் எடை குறைக்க முடியுமா என்று பார்ப்பதுதான்.

இப்படி ஒரேயடியாக இரண்டாயிரம் கலோரிகளுக்கு மேல் ஒரு வேளை உணவு உட்கொண்ட பிறகு தொடர்ச்சியாக நாற்பத்தியெட்டு மணி நேரம் உண்ணாதிருப்பது என்பது என் முடிவு. மீண்டும் அடுத்த சாப்பாட்டு முகூர்த்தத்தில் மாவுச் சத்து மிக மிகக் குறைந்த அளவே (சுமார் நாற்பது கிராம்) சேரும் கொழுப்பு உணவை உண்பது.

ஒரு வாரம் முன்னதாகவே திட்டம் போட்டுத்தான் மேற்படி மெனுவைத் தயாரித்திருந்தேன். என் உடம்புக்கு என்னவெல்லாம் சேராதோ / சேரக்கூடாதோ அது எல்லாமே இருக்க வேண்டும் என்பதுதான் என் உயரிய நோக்கம். என் ரத்த சர்க்கரை அளவு இப்போதெல்லாம் என்ன சாப்பிட்டாலும் 100ஐத் தாண்டாது. அதைக் குறைந்தபட்சம் இருநூறு அளவுக்காவது உயர்த்தி மகிழ்விக்கிறபடியாக மெனுவை அமைத்துக்கொண்டேன்.

அன்றிரவு நான் உண்ட புளியோதரையானது அமிர்த ஜாதி. இந்தப் பத்தியில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் சிங்கப்பெருமாள் கோயிலிலும் மட்டுமே அத்தனை உயர்தரப் புளியோதரை கிடைக்கும். ருசியை மூக்கும் மணத்தை நாக்கும் உணரக்கூடிய ரகம் அது. உண்ண ஆரம்பித்தால் நிறுத்தாமல் அரை மணி சாப்பிடலாம்.

ஒரு நல்ல புளியோதரையின் தரம் என்பது அதன் மூலப்பொருளான புளிக்காய்ச்சலின் தரத்தைச் சார்ந்தது. இது சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும் கடினமான திருப்பணி. இன்றைக்கெல்லாம் யார் புளிக்காய்ச்சல் காய்ச்சுகிறார்கள்? கடையில் கிடைக்கிற பாட்டில் புளியோதரை மிக்ஸில் ஆத்மா சாந்தியடைந்துவிடுகிறது. அவன் நல்லெண்ணெயில்தான் செய்தானா, க்ரூடாயிலைக் கொட்டினானா என்று தெரியாது. எத்தனை நாள் பழைய சரக்கு என்று யாருக்கும் தெரியாது. புளிக்காய்ச்சலின் ஒரிஜினல் ருசியானது எவ்வாறு இருக்கும் என்றுகூடப் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. என்ன செய்ய? பாவிகளின் கடைசிப் புகலிடம் பர்கராகும்போது ஆதி மாமிகளின் அசகாயத் தயாரிப்பான புளிக்காய்ச்சல் போன்ற தொன்ம ருசி ரத்தினங்கள் தமது இருப்பை மறைத்துக்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது.

நிற்க. ஒரு நல்ல புளிக்காய்ச்சலின் அடிப்படை, அதன் சேர்மானப் பொருள்கள் அனைத்தும் சம அளவில் இருக்க வேண்டும் என்பது. நூறு கிராம் புளி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், க. பருப்பு, உ. பருப்பு மூன்றும்

அதே நூறு கிராம் அளவுக்கு இருக்க வேண்டும். அதில் பத்து சதவீத அளவுக்கு வெந்தயம் சேர வேண்டும். எண்ணெய் சுட்ட மறுவினாடி கடுகு, பருப்புகள், வெந்தயம், சீரகம், பெருங்காய வகையறாக்களைப் போட்டு வறுத்துக்கொண்டு, அதிலேயே முந்திரிப் பருப்பையும் அள்ளிப் போட்டு வறுத்துவிட வேண்டும். புளியைக் கரைத்துக் கொட்டுவது இதற்கு அப்புறம்தான்.

இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள் இந்தக் கரைசல் தளதளவென்று கொதிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட வேண்டும். ஓம் சாந்தி, ஓம் சாந்தி என்று நூற்றெட்டு முறை ஜபித்து முடிக்கிறபோது மேற்படி புளிக்கரைசலானது பாதி வடிந்து லேசாகக் கெட்டிப்படும். பழனி பஞ்சாமிர்த லெவலுக்கு வந்திருக்கிறதா என்று பார்த்து, கப்பென்று அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

எல்லாம் சரியாகத்தான் செய்திருக்கிறோமா என்று அறிய, அடுப்பை அணைக்கும்போது வருகிற வாசனையைப் பரிசோதனை செய்வது ரொம்ப முக்கியம். பச்சைப் புளி வாசனை கொஞ்சம் வந்துவிட்டாலும் தீர்ந்தது விஷயம். காய்ச்சிய புளியின் வாசனையைப் பெருங்காய வாசனை தூக்கிச் சாப்பிடுவதே சரியான பதம்.

இவ்வாறெல்லாம் தாலாட்டி சீராட்டித் தயாரிக்கிற புளிக்காய்ச்சலைக் குறைந்தது பதினைந்து மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட்டு அதன்பின் எடுத்து சாதத்தில் கலந்தால் முக்கால்வாசி வேலை முடிந்தது. இதற்குப் பிறகு ஒரு ஐம்பது கிராம் மிளகைப் பொடி செய்து [மிளகுப் பொடியாக வாங்கிக் கலந்தால் ருசிக்காது] அதை இன்னொரு ஐம்பது கிராம் நல்லெண்ணெயில் கலந்து மேற்படி புளியோதரைக் கலவையின் தலையில் கொட்டிக் கிளற வேண்டும்.

கொஞ்சம் பேஜார்தான். ஆனால் இப்படிச் செய்தால்தான் நிஜமான புளியோதரையின் ருசியை அனுபவிக்க முடியும்.

நான் எட்டாங்கிளாஸ், ஒன்பதாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்தபோது, என் வகுப்பில் அமுதன் என்றொரு பயல் வாரம் ஒருமுறை மதிய உணவுக்குப் புளியோதரை எடுத்து வருவான். அவன் டிபன் பாக்ஸைத் திறந்தால் பள்ளி முழுதும் மணக்கும். அவனது புளியோதரைக்கு ஆசிரியர்கள் அத்தனை பேரும் அடிமைகளாக இருந்தார்கள். ஒரு வாரம் அவன் எடுத்து வரவில்லையென்றாலும் ஏன் என்று கேட்கிற அளவுக்கு உயர்தர அடிமைகள். தான் சாப்பிட்டு, ஆசிரியர்களுக்கு ருசி பார்க்கக் கொடுத்து மிச்சம் இருக்கும் புளியோதரையை நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பரோபகாரியாக அவன் இருந்தான்.

அவனது தாயை நான் கண்டதில்லை. ஆனால் அப்படியொரு மணக்கும் கரம் கொண்ட பெண்மணி இன்னொருவர் இருக்க முடியுமா என்பது இன்றுவரை எனக்கு சந்தேகம்தான். ஒரு புளியோதரையில் தனது கலை மனத்தை வெளிப்படுத்தத் தெரிந்த பெண்மணி. அவர் புளியோதரைக்கு வேர்க்கடலை போட மாட்டார். மாறாக காராசேவைப் பொடி செய்து போட்டுக் கலந்தனுப்புவார்.

வறுத்த முந்திரியும் காராசேவுப் பொடியும் புளியோதரையோடு சேர்ந்து நெரிபடும்போது உண்டாகும் ருசிதான் அநேகமாக அமிர்த ருசியாக இருக்க வேண்டும்.

(ருசிக்கலாம்..)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading