ருசியியல் – 29

முன்னொரு காலத்தில் நிரம்ப சினிமாக் கிறுக்குப் பிடித்து அலைந்துகொண்டிருந்தேன். தேசத்தில் எங்கு திரைப்பட விழா நடந்தாலும் போய்விடுவேன். பொழுது விடிந்ததும் கர்ம சிரத்தையாகக் குளித்து முழுகி, வயிற்றுக்கு என்னவாவது போட்டுக்கொண்டு தியேட்டருக்குள் போய் உட்கார்ந்துவிட்டால், தொடர்ச்சியாக நாலைந்து படங்கள் பார்த்து முடித்த பிறகுதான் சுய உணர்வு மீளும். அதற்குள் மாலை அல்லது இரவாகியிருக்கும். பசிக்க ஆரம்பிக்கும். களைப்பு கண்ணை அழுத்தும். மீண்டும் ஒரு குளியல். மீண்டும் வயிற்றுக்கு எதையாவது போட்டு அடக்கிவிட்டுப் படுக்கையில் விழுந்தால் மறுநாள் காலை கலைத் தாகம் எடுக்கிற வரைக்கும் உறக்கம்.

திருவனந்தபுரத்தில் அந்த வருஷத் திரைப்பட விழா நடந்தது. சர்வதேச விழா. எனக்கு கேரளத்துச் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. ஜென்மாந்திரம் முழுதும் சுத்த சைவம் என்று முடிவெடுத்தவன், கேரளம் போன்ற பரம சுத்த அசைவப் பிராந்தியங்களில் ஓரிரு தினங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பது கஷ்டம். ஆனால் கலை ஒரு இட்சிணி அல்லவா? பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டிக் கடாசிவிடுமல்லவா? அதனால் தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தேன்.

நாலு தினங்கள் கழிந்திருக்கும். எந்த வேளையும் சரியாக உண்ணாமல் பிஸ்கட், புட்டு என்று சமாளித்ததில் எனது பாரிய தேகமானது கேரள கம்யூனிஸ்டுகளைப் போலப் புரட்சிகர நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தது. சொல்ல முடியாத அவஸ்தை. பக்கத்தில் இருந்து என்னைக் கவனித்துக்கொண்டே இருந்தார் ஒரு நண்பர். அவர் கலா கௌமுதியில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர். அந்த நாலு தினங்களாகத்தான் எனக்குப் பழக்கம். ‘ஏன் இப்படி நெளிந்துகொண்டே படம் பார்க்கிறீர்கள்?’ என்று தாங்க முடியாமல் கேட்டுவிட்டார். என் உணவுப் பிரச்னையைச் சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டார். ‘சரி, இன்று மதியம் நாம் படம் பார்க்க வேண்டாம். என்னோடு வீட்டுக்கு வாருங்கள்’ என்று அழைத்தார்.

‘ஐயா, நான் சுத்த சைவம்.’

‘அது பிரச்னையில்லை. இன்று என் வீட்டிலும் சைவ உணவுதான்’ என்று சொல்லி வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.

திருவனந்தபுரத்தில் இருந்து தும்பாவுக்குப் போகிற வழியில் ஏதோ ஒரு கிராமாந்திரம். நடந்தே போய்விடலாம் என்றார். எனக்கு இருந்த பசியில் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அவரோ, ஜேஜே சில குறிப்புகளில் அப்பம் தின்பதற்காக பாலுவை அழைத்துச் சென்ற திருச்சூர் கோபாலன் நாயரைப் போல நாலு பக்கங்களுக்குப் பேசியபடியே போய்க்கொண்டிருந்தார். ஒரு வழியாக அவர் வீட்டை நாங்கள் சென்றடைந்தபோது மணி பகல் இரண்டாகியிருந்தது.

எளிய அறிமுகம். உடனே இலை போட்டுவிட்டார்கள். சோறு, குழம்பு, சக்கைப் பொரியல், அவியல்.

அவியலைக் கண்டதும் எனக்குக் காதலாகிவிட்டது. சட்டென்று ஒருவாய் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்தேன். தேங்காய் எண்ணெயின் வாசனை அவியலின் ருசியோடு இரண்டறக் கலந்து கிரங்கடித்தது. நுனி நாக்கில் இருந்து அடி வயிறு வரை வழியெங்கும் ருசித்தது. ஒரு கணம் யோசித்தேன்.

‘அம்மணி, இந்த அவியலை மட்டும் தனியே ஒரு கப்பில் நிறையத் தந்துவிட முடியுமா? எனக்கு சாப்பாடு வேண்டாம். இது மட்டும் போதும்.’

அன்று அந்த இல்லத்தில் சுமார் அரைக்கிலோ அவியல் சாப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். முன்பின் அறிமுகமில்லாத அந்த நண்பரும் அவர் மனைவியும் என் கிறுக்குத்தனத்தை ரசித்தது நான் செய்த புண்ணியம்.

‘அவ்வளவு நன்றாக இருக்கிறதா?’ என்று ஆர்வமுடன் கேட்டார் அந்த மங்கையர் குலத் திலகம்.

‘அவியலைக் கெடுப்பது சிரமம் அம்மா!’ என்று பதில் சொன்னேன்.

வரலாற்று நோக்கில் அவியலின் பிறப்பு தெற்குக் கேரளமாகத்தான் இருக்க முடியும். வளமாகத் தென்னை விளையும் பிராந்தியம் தவிர வேறெங்கும் அப்படியொரு ருசிகர உணவு கண்டுபிடிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. தவிரவும் காய்கறிகளின் சேர்மானத்தைக் கணக்கில் எடுத்தால் மிக நிச்சயமாக இது வடவர்களுக்கு அந்நிய உணவு. அவர்கள் உருளைக் கிழங்கைத் தவிர ஒன்றும் அறியாதவர்கள்.

என்னைப் பொறுத்தவரை அவியல் என்பது மாபெரும் கலை வெளிப்பாடு. அந்தச் சேர்மானமும் பதமும்தான் முக்கியம். காய்கறிகளின் வேகும் பதம். அரைத்துச் சேர்க்கப்படும் தேங்காய்க்கும் மேலுக்கு ஊற்றப்படும் தேங்காய் எண்ணெய்க்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் காட்டப்படுகிற மிக நுணுக்கமான வித்தியாசம் முக்கியம்.

அதைவிட முக்கியம், என்னென்ன காய்கள் அவியலுக்குச் சேர்க்கப்படுகின்றன என்பது. அவியலின் ஆதார ருசி என்பது அதில் சேர்க்கப்படுகிற வெள்ளைப் பூசனிக்காயால் உருவாக்கப்படுவது. இந்த வெள்ளைப் பூசனியோடு கேரட் சேராது என்பது பலபேருக்குத் தெரியாது. மெனக்கெட்டு நாலைந்து கேரட்டுகளைத் துண்டாக்கிப் போட்டுவைப்பார்கள். கேரட்டுக்கென்று ஒரு ருசியுண்டு. அது ஒருவித அசட்டுத் தித்திப்பின் ஆதிக்கத்தில் உள்ள காய். அவியலுக்கு அது அநாவசியம். அப்படியொரு இனிப்புச் சுவையும் அதில் இருந்துதான் தீரவேண்டும் என்பீர்களானால் அவியலின் அடிப்படை ருசியை நீங்கள் அறியவில்லை என்று பொருள். உருளைக்கிழங்கு போடலாம். நாலு பீன்ஸ் போடலாம். அவரை சேராது. வாழைக்காய் முக்கியம். சேப்பங்கிழங்கு முக்கியம். கத்திரிக்காய் இருக்கலாம். எனக்கு உண்ண நேர்ந்த கேரளத்து அவியலில் எல்லாம் புளிப்பு ஏறாத மாங்காய் சேர்க்கப்பட்டிருந்ததை கவனித்திருக்கிறேன். பிரமாதமாக இருக்கும் அது. அவியலுக்குக் கண்டிப்பாகக் கூடாத காய்கள் இரண்டு. கொத்தவரங்காயும் வெண்டைக்காயும். இந்த இரண்டில் எது ஒன்று இருந்தாலும் அவியலின் பிராணன் போய்விடும்.

நம் ஊர் ஓட்டல்களில் அவியல் என்றால் இப்போதெல்லாம் ஒரு கட்டு முருங்கைக் காயை அப்படியே உடைத்துப் போட்டு சமைத்துவிடுகிறார்கள். இது ஒருவித உணவியல் வன்முறை. அவியலுக்கு முருங்கைக்காய் வேண்டாம். இருந்தே தீரவேண்டும் என்பீர்களானால் தனியே வேகவைத்து உரித்து, உள்ளே இருக்கிற சதைப் பகுதியை மட்டும் வழித்துப் போடுவதே சரி. பட்டாணியுடன்கூட அரைப்பிடி கொண்டைக்கடலை சேர்ப்பதும் ருசி கூட்டும். தேங்காய் அரைக்கும்போது நாலு வேர்க்கடலை சேர்த்து அரைத்துப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.

அவியல் ஒரு தனி உணவு. இதை எப்படி சமூகம் ஒரு சைட் டிஷ்ஷாக மாற்றி வைத்திருக்கிறது என்று எனக்குப் புரிவதே இல்லை. ஓட்டல்களில் அடை அவியல் என்கிறார்கள். அந்த காம்பினேஷன் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அடைக்கு மிளகாய்ப் பொடியும் நறநறக்கும் பதத்தில் மேலே ஊற்றப்படும் நெய்யும்தான் சரி. என் வீட்டில் நான் அவியலைத் தனி உணவாக எடுத்துக்கொள்வதுதான் வழக்கம். சுமார் அரைக் கிலோ அளவுக்கு அவியலை எடுத்து வைத்துக்கொண்டு, ஐம்பது கிராம் வெண்ணெயைத் தொட்டுக்கொண்டு உண்டால் மதிய உணவு முடிந்துவிடும். ருசிக்கு ருசி, சத்துக்கு சத்து.

அப்புறம் தயிர். பொதுவாக நம் ஊரில் அவியலில் தயிர் சேர்க்கிற வழக்கம் இருக்கிறது. அது ஒன்றும் கொலைபாதகம் இல்லை என்றாலும் அந்தத் தயிர் உலகத்தரத்தில் இல்லாவிட்டால் அது அவியலுக்கு அநாசாரமாகிவிடும் அபாயம் இருக்கிறது. சற்றும் புளிக்காத கெட்டித் தயிர் மட்டுமே அவியலுடன் சேரும். பதம் கொஞ்சம் நகர்ந்தாலும் அது பல்லை இளித்துவிடும். என்னைக் கேட்டால் அவியலுக்குத் தயிர் தேவையே இல்லை. அது தனித்து நின்று ஜெயிக்கும் உணவு.

(ருசிக்கலாம்..)

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி