பொன்னான வாக்கு – 25

பேச்சு ஒரு பேஜார் பிடித்த கலை. எப்போது மாலை சூடும், எப்போது காலை வாரும் என்று சொல்லவே முடியாது. உட்கார்ந்து எழுத ஆரம்பித்தால் ஓராயிரம் பக்கங்கள் வரைகூடத் தங்கு தடையில்லாமல் எழுதிவிட முடியும். ஆனால் ஒரு சொற்பொழிவின் முதல் வரி சொதப்பினால் முழுப் பேச்சும் நாராசம்.

பள்ளி நாள்களில் சுந்தரமூர்த்தி என்று எனக்கு நண்பனொருவன் இருந்தான். இன்றைய கழகப் பேச்சாளர்களெல்லாம் அவன் தரத்துக்குக் கிட்டேகூட வரமுடியாது. ஒரு வணக்கம் போட்டு ஆரம்பித்தால் கருங்கல் ஜல்லி லோடு கவிழ்த்துவிட்ட மாதிரி தடதடதடதடவெனக் கொட்டித் தீர்த்துவிடுவான். உட்கார்ந்து எழுதி உருப்போடுவானா, இல்லை மண்டபத்தில் யாரையாவது பிடித்து எழுதி வாங்கித் தின்று ஜெரிப்பானா, உண்மையிலேயே அவனது சிந்தனைக் கொதிநீர் ஊற்றில் அத்தனை வீரியம் இருந்ததா தெரியாது. ஆனால் பயல் ஒரு பின்னியெடுத்தல் ஸ்பெஷலிஸ்ட்.

அப்பேர்ப்பட்ட பேச்சாளன் ஒரு சமயம் வேறொரு பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டிக்குப் போயிருந்தபோது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ஆதிசிவன் பெற்ற தமிழ், அகத்தியன் வளர்த்த தமிழ், தொல்காப்பியன் மனதில் தொட்டில் கட்டி ஆடிய தமிழ், சங்கப் பலகையிலே தவழ்ந்த தமிழ், காவியச் சோலையிலே உலவிய தமிழ் என்று தமிழ்த் தாயின் அருமை பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனபோது சட்டென்று ஒரு கணம் கரண்ட் போனது மாதிரி நின்றுவிட்டான். என்ன ஆச்சு என்ன ஆச்சு என்று அழைத்துச் சென்றிருந்த பெருமாள் வாத்தியார் தொலைவில் நின்று பதறிக்கொண்டிருந்தார். ஒரு இன்ஸ்டண்ட் அபிநய சரஸ்வதியாகி அவர் என்னென்னவோ சமிக்ஞைகள் செய்து காட்டியும் சுந்தர மூர்த்தி எக்ஸ்பிரஸ் கிளம்பியபாடில்லை.

நடுவர்கள் அரை நிமிடம் பொறுத்துப் பார்த்துவிட்டு, ‘தம்பி நீ போய் ஒக்காந்துக்கப்பா’ என்று சொல்லிவிட்டார்கள். என்னடா ஆச்சு என்னடா ஆச்சு என்று அதன்பிறகு எத்தனையோ பேர் எத்தனையோ முறை கேட்டும் அவனிடமிருந்து வந்த ஒரே பதில், ‘தெரியலடா.’

பாதியில் இங்ஙனம் ஃப்யூஸ் பிடுங்கப்பட்டால்கூடப் பிரச்னையில்லை. வோல்ட்டேஜ் ஃப்ளக்சுவேஷன் வந்து அதி பிரகாச நிலையை அடைவதுதான் அபாயகரம். என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறிக் கொட்டிக் கிளறி மூடினால் எல்லாம் போச்சு.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மகாமக அசம்பாவிதம் நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு திமுகவின் வெற்றிகொண்டான் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து ஜெயலலிதாவை விமரிசித்துக்கொண்டிருக்கிறார். குளிப்பதற்கு போஸ்டர் ஒட்டிய ஒரே கட்சி அதிமுக என்று சொன்னார். அதோடு விட்டிருக்கலாம். தறிகெட்டுப் பறக்கும் சொற்குதிரைக்குப் பாதியில் கடிவாளம் போடும் வழக்கமெல்லாம் அவருக்குக் கிடையாது. புரட்சித் தலைவி குளிக்க வருகிறார், அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்! என்று இல்லாத போஸ்டர் வாசகத்தைத் தன் சொல்லில் தோரணம் கட்டிக் காட்டப்போக, மேடை நாகரிகம் அந்த மேடையிலேயே விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது.

இதைக் காட்டிலும் கேவலமாகப் பேசப்பட்டதில்லையா என்று நீங்கள் கேட்கலாம். பேசுவது யார் என்பது முக்கியம். யாரைப் பற்றிப் பேசுகிறோமென்பது அதனினும் முக்கியம்.

வெற்றி கொண்டானாவது வெறும் பேச்சாளர். ஆனால் வைகோ அப்படியா? அவரது அசகாய சொற்பொழிவுத் திறன் தான் அவருடைய அரசியல் கோலியாட்டத்துக்கே முதலீடு. அதிகாலை ஒரு தம்ளர் புறநாநூற்றுக் கூழ் கரைத்துக் குடித்துவிட்டுப் புறப்பட்டாரென்றால் பத்து மணிக்கு ஒரு பெர்னாட்ஷா ஜூஸ், பன்னிரண்டுக்கு ஒரு மாக்யவல்லி புலாவ், மூன்று மணிக்கு முசோலினி சூப், ஆறு மணிக்கு சாக்ரடீஸ் சாலட், டின்னருக்கு தெய்வப் புலவர் என்று ஒரு ஃபுல் ரவுண்டு கட்டாமல் ஓயமாட்டார்.

அப்பேர்ப்பட்ட நாவும் தடம் புரளும் காலமாக இது அமைந்திருக்கிறது. கருணாநிதியின் சாதியைக் குறிப்பிட்டுத் தாக்கிய சில மணி நேரங்களில் தாங்கொணாத் துயரத்தை வெளிப்படுத்தி, தாயுள்ளத்தோடு மன்னிக்கச் சொல்லிக் கேட்டு விட்டார். நல்லது. வைகோவுக்காவது மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எதிர்வரும் நாள்களில் இன்னும் யார் யார் வாயில் யார் யாரெல்லாம் எப்படியெப்படியெல்லாம் விழுந்து புரளப் போகிறார்களோ என்று நினைத்தால் பெரும் பீதியாக இருக்கிறது.

நேற்று முன் தினம் வைகோவின் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த மறுகணமே திமுகவினர் அவரை ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவரது மன்னிப்பு கோரும் படலம் அரங்கேறிய பிறகும் அது ஓய்ந்தபாடில்லை. ஒரு ஆபாசம், ஒரு கோடி ஆபாசக் காட்சிகளுக்கு வழி வகுத்துவிடுகிறது. தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை மேடைகள், எவ்வளவு பொதுக்கூட்டங்கள்! எப்படியும் வைகோ கைமா செய்யப்பட்டுவிடுவது உறுதி.

கஷ்டம்தான். சங்கடம்தான். ஆனால் துரதுருஷ்டவசமாக, இது கடந்து போகாது.

0

(நன்றி: தினமலர் 08/04/16)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி