பொன்னான வாக்கு – 26

குப்புசாமி குப்புசாமி என்று ஒரு பிரகஸ்பதி இருந்தார். அவருக்கு செஞ்சுலச்சுமி என்றொரு புத்திரி. இந்த செஞ்சுலச்சுமி ஒரு அதிரூப அழகு சுந்தரி. பிராந்தியத்தில் அவளைப் பார்த்து வழியாத வயசுப் பையன்களே கிடையாது. ஆனால் செஞ்சுலச்சுமி யாருக்காவது மசிவாளா என்றால் மாட்டாள்! நூற்றுக் கணக்கான காதல் கடுதாசிகள், ஆயிரக்கணக்கான குறுந்தகவல் கும்மியடிப்புகள், கணக்கு வழக்கே இல்லாத நேரடி அப்ளிகேஷன்கள்.

ம்ஹும். செஞ்சுலச்சுமிக்கு எந்தப் பயலையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் செஞ்சுலச்சுமி வெறும் அழகி மட்டுமல்ல. கொஞ்சம் வெல்லம் போட்ட அழகி. அதாவது அவள் படித்தவள். தவிரவும் நிறைய சொத்துபத்து. தன் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ற மாப்பிள்ளையாகப்பட்டவன் தன்னைப் போல் பேரழகனாக, தன்னைப் போல் பெரும் படிப்பாளியாக, தன்னைப் போலவே சுக சௌகரியக் குறைச்சலில்லாதவனாக இருக்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்.

யார் தப்பு சொல்ல முடியும்? சரி உனக்கு நானே ஒரு பிரமாதமான மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று குப்புசாமி தந்தைக்கான கடமையைச் செவ்வனே ஆற்றிவிடும் பொருட்டு, வரிந்துகட்டிக்கொண்டு கிளம்பினார்.

முதல் மாப்பிள்ளையாகப்பட்டவன், ஒரு சுப முகூர்த்த நாளில் பெண் பார்க்க வந்தான். செஞ்சுலச்சுமி அவனைத் தனியே அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு, அப்பாவிடம் வந்து பையன் தேறமாட்டான் என்று சொல்லிவிட்டாள். ‘ஏம்மா?’ என்று அவர் பதற, ‘இவன் படிச்சவந்தான். ஆனா அப்பப்ப நிறைய அரியர் வெச்சி கம்ப்ளீட் பண்ணியிருக்காம்ப்பா. வேஸ்ட்’

சரி ஒழியட்டும் என்று குப்புசாமி அடுத்த மாப்பிள்ளையைத் தேடிப் பிடித்தார். அரியர் வைக்காமல் படித்து, பாஸ் செய்த மாப்பிள்ளை. இவனுக்கும் செஞ்சுலச்சுமி காப்பி கொடுத்து தனியே கூட்டிப் போய் சில கேள்விகள் கேட்டாள். திரும்பி வந்து சொன்னாள், ‘ம்ஹும். இவனும் தேறமாட்டான். வெறும் பார்டர் பாஸ் கேஸ். நான் எதிர்பாக்கறது ஒரு டிஸ்டிங்ஷன் மாப்பிள்ளை.’

மூன்றாமவன் வந்தான். படிப்பெல்லாம் சரிதான், ஆனால் மூக்கு முள்ளம்பன்றி மூக்கு மாதிரி இருக்கிறது என்றாள். அடுத்தவனுக்கு ஆதார் கார்டே இல்லை என்று ரிஜக்ட் செய்தாள். ஐந்தாவது ஆசாமியின் அப்பா அம்மா சரியில்லை என்றாள். ஆறாவதாக வந்தவன் சரியான பட்டிக்காடு. அடுத்தவன் ரசனை கெட்டவன். அதற்கடுத்தவன் ஊதாரி. தத்தி, தண்டச்சோறு, உருப்படாதவன், உதவாக்கரை என்று அவள் ஒவ்வொருமுறை நிராகரிக்கவும் ஒரு காரணம் எப்படியோ கிடைத்துக்கொண்டே இருந்தது.

குப்புசாமி யோசித்தார். ஒரு முடிவோடு கிளம்பி ஒருவாரம் வெளியூருக்குப் போனார். இந்த முறை தப்பு நடக்காது; இந்தப் பையனைப் பார், உனக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று புதியதொரு பிரகஸ்பதியை அழைத்து வந்து எதிரில் நிறுத்தினார்.

வழக்கம்போல் உத்தம புத்திரி அவனையும் தனியறைக்கு அழைத்துச் சென்று வினாக்கணை தொடுக்க ஆரம்பித்தாள். பத்து நிமிடம். அரை மணி. ஒரு மணி. அறைக்கதவு திறந்து செஞ்சுலச்சுமி வெளீயே வந்தபோது வழக்கமே இல்லாத வழக்கமாக அவள் முகத்தில் வெட்கம் மாதிரி என்னமோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்ததைக் குப்புசாமி கண்டார்.

‘என்னம்மா ஆச்சு? மாப்ள ஓகேவா?’

‘பிடிச்சிருக்குப்பா. இவர் கரெக்டா இருப்பார்னு தோணுது’

‘நம்பவே முடியல குப்புசாமி. எல்லா பையன்கள்கிட்டயும் எதோ ஒரு குறைய கண்டுபிடிச்ச உம்பொண்ணு எப்படி இவன மட்டும் செலக்ட் பண்ணா?’ என்று குப்புசாமியின் நண்பர் ஆச்சரியப்பட்டுக் கேட்டார்.

‘சிம்பிள். இவனுக்கு ஆல்ரெடி ஒரு கல்யாணமாகி டைவர்ஸ் ஆன அனுபவம் இருக்கு’ என்றார் குப்புசாமி.

நடக்கிற கூத்துகளையெல்லாம் பார்த்தால், செஞ்சுலச்சுமி மாப்பிள்ளை பிடித்த கதை மாதிரிதான் தெரிகிறது, ஜெயலலிதா வேட்பாளர்களை மாற்றுகிற சங்கதியும். நாளது தேதி வரை அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்களில் பத்திருபது பேர் மாற்றப்பட்டிருப்பார்களா? ஆனால் மிச்சமிருக்கும் அத்தனை பேருக்கும் அடி வயிற்றில் பயப்பிராந்தி பிடித்திருக்கும்.

எனக்கென்னமோ கூடிய சீக்கிரம் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதாவே நிற்கிறார் என்று கொட்டையெழுத்துத் தலைப்புச் செய்தி வந்துவிடும் என்று தோன்றுகிறது. எம்பெருமான் தான் காப்பாற்ற வேண்டும்.

ஆனால் ஒன்று புரிகிறது. யாருக்கும் தராதரம் பார்த்து சீட் கொடுக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருக்கிறவர்களுக்குத் தங்களுடைய ஆட்களையே அறிமுகம் இருப்பதில்லை. அந்த நேர்காணல் ஜமாபந்தியில் வேறு அப்படி என்னத்தைத்தான் கேட்டுத் தொலைக்கிறார்கள்? ஜாதி, சொத்து கணக்கெடுப்போடு சரியா?

இந்த நிமிஷம் உங்களுக்கு எந்த அதிமுக வேட்பாளரைப் பிடிக்கவில்லையென்றாலும் ஒரு கடுதாசி போட்டால் போதும். மறுகணமே மாற்று வேட்பாளர். என்ன ஒரு உயர்தர ஜனநாயகம்! இந்த ஜனநாயக உணர்ச்சியெல்லாமும் தேர்தல் நேரத்தில்தான் பீறிட ஆரம்பிக்கிறது. ஒரு சௌகரியத்துக்கு ஜனநாயக உணர்ச்சி என்கிறோம். உண்மையில் இதன் பெயர் பய உணர்ச்சி. கொஞ்சம் விரிவாகவே அலசவேண்டிய சங்கதி இது. செய்வோம்.

ஆனால், அவசரப்பட்டு அதற்குள் யாரும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு மாற்று வேட்பாளர் கேட்டு விடாதிருக்கவேண்டும்.

0

நன்றி: தினமலர் 11/04/16

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி