பொன்னான வாக்கு – 27

இந்த மது விலக்கு மாதிரி ஒரு பேஜார் பிடித்த சமாசாரம் வேறு கிடையாது. விலக்கினால் வருமானம் படுக்கும். இருப்பது ஓட்டு அரசியலை பாதிக்கும்.

போன பொதுத்தேர்தல் வரையிலுமேகூட இந்த விவகாரம் இத்தனை பிரமாதமாகப் பேசப்பட்டதில்லை. என்றைக்கோ ராஜாஜி கொண்டுவந்தார்; கருணாநிதி மங்களம் பாடினார் என்று ஒரு கதை சொல்லுவார்களே தவிர, சமகாலத் தலைமுறைக்கு மதுவிலக்கு என்றால் என்னவென்று தெரிந்திருக்க நியாயமில்லை.

முன்னொரு காலத்தில் கள்ளுக்கடைகள் இருந்தன. Arakk Shop அல்லது Araak Shop என்று கட்டாய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடாவது ஆங்கிலத்தில் போர்டு வைத்து சாராயக்கடைகள் இருந்தன. அது ஏழைகளின் தாகத்துக்கு. நிதி மிகுந்து பொற்குவை தரவல்லவர்களுக்கு ஒயின் ஷாப்புகளும் பார்களும் இருந்தன.

மது விற்பனையை இனி அரசே செய்யும் என்று ஜெயலலிதா அறிவித்து டாஸ்மாக் கடைகள் வீதிக்கொன்றாக முளைத்த சமயத்தில் சாராயக் கடைகள் ஒழிக்கப்பட்டன. கள் இறக்கும் தொழில் தடை செய்யப்பட்டது. ‘தேசநலன் கருதி’ தமிழகத்தின் இரு பிரதானக் கட்சிகளைச் சார்ந்தவர்களே இந்தக் கடைகளுக்கு மது வகைகளை உற்பத்தி செய்து அளித்து வந்தார்கள்.

தமிழகத்தில் கள்ளச் சாராய இறப்புகளின் எண்ணிக்கை குறைந்தது என்பது தவிர டாஸ்மாக்கின் வரவு குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது. ஒரு ரகசிய அல்லது மறைமுகச் செயல்பாடாக மட்டுமே அதற்கு முன் இருந்து வந்த குடிப் பழக்கம், டாஸ்மாக்கின் வரவுக்குப் பின் வீர சுதந்தரமடைந்தது. வீர சுதந்தரம் வேண்டி நின்றார் பின்னர் வேறெதும் கொள்வாரோ? கண்டிப்பாக மாட்டார்.

இது ஜெயலலிதாவுக்குத் தெரியாதா? இல்லை கருணாநிதிக்குத்தான் தெரியாதா? அவர் என்னடாவென்றால் படிப்படியாக மது விலக்கு என்கிறார். இவர் என்னடாவென்றால் முதலில் டாஸ்மாக்கை இழுத்து மூடிவிட்டு, பிறகு மது விலக்கை அமல்படுத்தப் புதிய சட்டம் என்கிறார். இந்தப் பத்தியில் நான் முன்பே எழுதியிருந்தது போல, டாஸ்மாக் மூடு விழா என்பது நயந்தாரா அல்லது ஹன்சிகா ஒயின்ஸ் திறப்பு விழாதான். ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்துவிட்டு அஞ்சாவது வருஷக் கடைசியில் மது விலக்கு கொண்டு வரலாம் என்று நினைத்தால் அதன்பேர் போங்காட்டம்.

இது ஒரு பக்கம் இருக்க, ஜெயலலிதா சொல்லியிருக்கும் ‘படிப்படியாக மது விலக்கு’த் திட்டம் எந்தளவுக்கு வேலைக்கு ஆகும் என்று தெரியவில்லை. மாதம் ஒரு மாவட்டமாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என்று சொன்னால் சரி. பார்கள் முதலில் மூடப்படும், எலைட் ஷாப்புகள் அப்புறம், அதன்பின் அழுக்கு டாஸ்மாக் கடைகள் என்று மூன்று மாதங்களுக்கு ஒரு ஸ்டெப் என்றாலும் சரி. மாறாக, கடைகளின் வேலை நேரம் படிப்படியாகக் குறைக்கப்படும், பிறகு கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்பது ஐந்தாண்டல்ல; ஐம்பதாண்டுச் செயல்திட்டம் மாதிரி தெரிகிறது.

இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் என் நண்பரும், விசுவாசக் குடிமகனுமான ஒரு பிரகஸ்பதி தற்செயலாக போனில் அழைத்தார். பேச்சுவாக்கில் படிப்படியாக மது விலக்கு என்பதைப் பற்றி அவரிடம் நான் சொல்லப் போக, ‘அது ஏற்கெனவே ஆரம்பிச்சிருச்சே சார்’ என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. நியூஸ் பேப்பர்காரர்களும் காட்சி ஊடக மகாராஜாக்களும் சதி செய்து அரசின் ஒரு அசகாயத் திட்டத்தைத் திட்டமிட்டு மறைத்துவிட்டார்களா என்ன?

‘அட போங்க சார். உங்களுக்கு விவரமே பத்தாது. படிப்படியா மது விலக்குன்னா என்ன தெரியுமா? லாஸ்ட் ஆறு மாசமா எந்த கடையிலயும் குவார்ட்டரே கிடையாது. ஹாஃப் இருக்கு, ஃபுல் இருக்கு; வேணுன்னா வாங்கிக்க, இல்லன்னா நடையக் கட்டுன்றான்’ என்றார் அந்த நண்பர்.

ஓ! குவார்ட்டருக்கு மட்டும் தடை என்பதுதான் படிப்படிப்படியின் முதல் படியா?

‘இப்ப நெலவரம் இன்னும் மோசம் சார். நெறைய கடைங்கள்ள ஹாஃப் கூட கிடைக்கமாட்டேங்குது. ஃபுல்லு மட்டும்தான் இருக்குதுன்றான் பேமானி. அதுவும் எம்.ஆர்.பிக்குமேல இவனுக்கு இருவது ரூவா தண்டம்வேற அழணும். குடுக்க மாட்டேன்னா சரக்கு கிடையாதுன்றான் சார். பாண்டிச்சேரில ஐநூறு ரூவாய்க்கு விக்கற சரக்க இவன் எழுநூத்தம்பதுக்குக் கூசாம விக்கறான் சார். பத்தாத குறைக்கு இருவது ரூவா கமிசன்வேற.’ நண்பர் மிகவும் வருத்தப்பட்டு ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்து போனை வைத்துவிட்டார்.

குவார்ட்டர் குவார்ட்டராகவும், ஹாஃப் ஹாஃபாகவும் சரக்கு விற்று சம்பாதிப்பது போதவில்லை போலிருக்கிறது. வாங்கினால் ஃபுல். இல்லையேல் செல். எப்பேர்ப்பட்ட கொள்கை!

விரும்பியோ விரும்பாமலோ இந்தத் தேர்தலின் முடிவுகளை மது விலக்கு அறிவிப்புகளே தீர்மானிக்கும் என்று கட்சிகள் நம்பத் தொடங்கியிருப்பது ஒரு விதத்தில் நல்லதே. செய்து காட்டுவார்களா என்பது ஒரு புறமிருக்க, இது தமிழகத்தில் மீண்டும் கள்ளச் சாராய நீரோட்டம் அல்லது தேரோட்டத்துக்கு இடம் தந்துவிடாதிருக்க வேண்டும் என்பதே அனைத்திலும் இன்றியமையாதது.

0

நன்றி: தினமலர் 13/04/16

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter