பொன்னான வாக்கு – 28

இந்த வாரம் முழுக்க அதிமுகவை மட்டுமே அலசிக் காயப்போடவேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் ஆரம்பித்தேன். அது இப்படி மூன்றாம் நாளே தடைபட்டு நிற்க நான் காரணமல்ல. இந்த வாரமே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட திமுகதான் காரணம்.

கலைஞர் ஜோராக கட்டிங், ஷேவிங்கெல்லாம் பண்ணிக்கொண்டு வந்து ஃப்ரெஷ்ஷாக அறிக்கையை வாசித்தபோது எல்லாமே ரொம்பப் பிரமாதமாகத் தோன்றியது. என்னதான் புராதனமான மாநில சுயாட்சி, ஈழத் தமிழர் நல்வாழ்வு, கச்சத்தீவை மீட்போம், மேலவை அமைப்போம், லோக் ஆயுக்தா கொண்டு வருவோம் பஜனை கீதங்கள் இருந்தாலும் பல உருப்படியான உருப்படிகள் இருப்பதாகவே பட்டது. ஆனால் கொஞ்சம் நிதானமாக உட்கார்ந்து படித்துப் பார்த்தால் பல விஷயங்கள் இடிப்பதுபோலத் தோன்றியது.

இந்தத் தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் கிடையாது என்பது திமுகவின் முக்கிய நிலைபாடாக நிறுவப்பட்டிருக்கிறது. கலைஞர் வாஷிங் மெஷின் தரப்போகிறார், வீட்டுக்கொரு ஏர் கண்டிஷனர் தரப் போகிறார் என்றெல்லாம் நாட்டு மக்கள் ஆளாளுக்குப் பீதி கிளப்பி விட்டுக்கொண்டிருந்தார்கள். நல்லவேளை அதெல்லாம் இல்லை. ஆனால் இந்த இலவச அறிவிப்புகளுக்கு பதிலாகச் சொல்லப் பட்டிருக்கும் சலுகை அறிவிப்புகள் மிகவும் நெருடுகின்றன.

அதென்ன சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் விவசாயக் கடன்களை ரத்து செய்வதில் அத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள்? அப்புறம் அதற்குக் கடன் என்று எதற்குப் பேர் கொடுப்பானேன்? ஒரு வறட்சிக் காலம் அல்லது பெருமழைக் காலத்தில் கடன் தள்ளுபடி என்றால் சரி. டீஃபால்ட்டாக விவசாயிகளின் ஓட்டு வேண்டுமென்றால் கடன் தள்ளுபடி என்பது எந்த ஊர் நியாயமென்று தெரியவில்லை.

அதே மாதிரிதான் இலவச மின்சார அறிவிப்புகள். உண்மையிலேயே மின்மிகை மாநிலம்தான் என்றால் மின்சாரக் கட்டணம் இப்படி உச்சாணிக்கொம்பில் போய் உட்கார்ந்திருக்காது. ஒரு பக்கம் மின்வாரியம் நாக்கு தள்ளிக்கொண்டிருக்க, மறுபக்கம் இலவச மின்சார அறிவிப்புகள். மாறாக மின் உற்பத்திப் பெருக்கத்துக்கு, சீரான வினியோகத்துக்கு உருப்படியாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கலாம். சும்மா போகிற போக்கில் ‘போர்க்கால அடிப்படையில் மின் உற்பத்திப் பெருக்க நடவடிக்கைகள்’ என்று சொல்லிவைப்பதில் என்ன பயன்?

பால் விலைக் குறைப்பு. அதுவும் ஏழு ரூபாய். இதனால் ஆவினுக்கு எத்தனை ஆயிரம் கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று சரியாகத் தெரியவில்லை. என்னவாக இருந்தாலும் அவர்கள் அதைக் கொள்முதல் விலையில்தான் காட்டுவார்கள். ஆவினுக்கு விற்றால் விலை கம்மி என்ற நிலை உருவானால் உற்பத்தியாளர்கள் கூசாமல் மொத்தமாகத் தூக்கித் தனியாருக்கு ஊற்றிவிட்டுப் போவதைத் தவிர வேறு வழியே இல்லாது போகும். இந்தச் சூழ்நிலையில், ‘கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் பால் முழுவதையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய ஆவன செய்யப்படும்’ என்றால் அது என்ன ஆவன? புரியவில்லை.

இந்தத் தேர்தல் அறிக்கையிலேயே மிகுந்த அபாயகரமான சங்கதியாக எனக்குத் தோன்றியது, அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் மூன்று லட்சம் இடங்களை நிரப்புவது என்பது. இருக்கிற ஊழியர்களை வைத்துக்கொண்டு அரசு என்ன சாதித்துக்கொண்டிருக்கிறது என்பது ஒரு புறமிருக்க, இந்த மூன்று லட்சம் காலியிடங்கள் ஏன் இதுநாள் வரை நிரப்பப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு பக்கம் இந்த மூன்று லட்ச அறிவிப்பு என்றால் மறுபக்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதாந்தர உதவித் தொகை அறிவிப்பு. மூன்று லட்சம் இடங்கள் நிரப்பப்படும் வரை மாதாந்தர உதவியா? அல்லது மூன்று லட்சத்தி ஒன்றாவது நபரிலிருந்து மாதாந்தர உதவியா? ஒழியட்டும், இந்த மூன்று லட்சம் புதிய பதவியாளர்களுக்கு சம்பளம் என்ன? அந்தத் தொகையை எங்கிருந்து ‘உற்பத்தி செய்ய’ப் போகிறார்கள்? டாஸ்மாக்கை வேறு மூடிவிடப் போகிறார்கள். ஈஸ்வரோ ரக்ஷது.

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லட். பத்தாத குறைக்கு இலவச த்ரீ ஜி, ஃபோர் ஜி சேவைகள். என்னத்துக்கு? பைரேட் பேவிலிருந்தும் தமிழ் ராக்கர்களிடமிருந்தும் தரமான புதிய படங்களைத் தரவிறக்கிப் பார்த்து ரசிக்கவா? ஒரு பேச்சுக்குக் கேட்கிறேன். பத்து ஜிபி டேட்டாவின் விலை என்ன? எத்தனை லட்சம் மாணவர்களுக்கு இதனை எத்தனை காலத்துக்கு இலவசமாகக் கொடுக்கப் போகிறார்கள்? இந்தக் காசைத் தூக்கி அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்குப் போட்டாலாவது உபயோகம். அட எத்தனை பள்ளிகளில் கழிப்பிடங்கள் ஒழுங்காக இருக்கின்றன? வகுப்பறைகள், மேசை நாற்காலிகள், ஆய்வுக்கூடங்களைச் செப்பனிட என்ன திட்டம் கைவசம் உள்ளது?

திமுகவின் தேர்தல் அறிக்கையில் ரசிக்கத்தக்க அம்சமாக எனக்குத் தோன்றியது, தற்போதைய ஜெயலலிதா அரசாங்கம் கொண்டுவந்த சில நல்ல திட்டங்களை இழுத்து மூடி மங்களம் பாடாதிருப்பதே. மற்றபடி இன்னொரு அறிக்கை என்பதைத் தாண்டி சிலாகிக்கத் தோன்றவில்லை.

0

நன்றி: தினமலர் 14/04/16

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி