1996ம் வருஷம். பொதுத்தேர்தல் களேபரத்தில் வடக்கத்தி மாநிலங்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தன. ஒரு நாலைந்து மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து தேர்தல் குறித்து எழுதுவதற்காகப் போயிருந்தேன். டெல்லியிலிருந்து பிகார். அங்கிருந்து மேற்கு வங்காளம். அப்படியே அசாம். திரும்பும்போது உத்தர பிரதேசம். அப்போது யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்த கணபதி, லக்னோ வந்திருந்தார். ‘நாளைக்கு ஹரோரா தொகுதில மாயாவதி பிரசாரம் பண்ண வராங்க. ஒரு நாள் கூடவே சுத்தலாம் வரீங்களா?’ என்று கேட்டார். அன்றே புறப்பட்டோம்.
மறுநாள் காலை மாயாவதியோடு விடிந்தது. ஒரு ஓட்டை ஜீப்பில்தான் அவர் வந்தார். பிரதான சாலைகளில் ஜீப்பில் நின்றபடியே பேசினார். சட்டென்று முடிவு செய்து ஏதேனுமொரு குறுக்குச் சந்தில் இறங்கி நடக்க ஆரம்பித்துவிடுவார். என்னவொரு வேகம். மாயாவதியின் நடை வேகத்துக்கு என்னைப் போன்ற ஒரு அகண்ட சரீரி ஈடுகொடுக்கவே முடியாது என்பது புரிந்தது. இங்கே நாலு வீடுகள், அங்கே நாலு கடைகள், மரத்தடியில் சாய் குடித்தபடி கொஞ்சம் நலன் விசாரிப்புகள், மறக்காமல் ஓட்டுப் போடச் சொல்லிப் புன்னகையோடு ஒரு வேண்டுதல்.
மீண்டும் ஜீப்பில் ஏறி இரண்டு சாலைகள். திரும்பவும் ஒரு சிறு நடைப் பயணம். அன்றைய ஒரு நாள் பிரசாரத்தில் அவர் சுமார் நூறு பேருடன் தனிப்பட்ட முறையில் பேசினார் என்பதைக் கவனித்தேன். எப்படியும் நடை மட்டும் ஏழெட்டு கிலோ மீட்டர்கள் இருக்கும். அதிரடியெல்லாம் அசெம்ப்ளியில்தான். மக்களிடம் பேசும்போது பாசத்துக்குரிய பெஹன்ஜி ஆகிவிடுவார். வீட்ல இன்னிக்கி என்ன சமையல் என்று உரிமையோடு விசாரித்து, ஓரிரு இடங்களில் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்து, ஒரு வீட்டு வாசலில் கால் நீட்டி உட்கார்ந்தே விட்டார். ‘தைலம் இருக்கா?’ என்று கேட்டு வாங்கி காலில் தேய்த்துக்கொண்டு, ‘செம வலி’ என்றபடியே துப்பட்டாவால் முகத்தைத் துடைத்தபடி எழுந்து அடுத்த வீட்டுக்குப் போனார். எனக்கும்தான் கூட நடந்து கால் வலித்தது. ஆனால் யாரிடம் போய்த் தைலம் கேட்பது?
நேற்றைக்கு ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத் திட்டத்தைப் படித்துக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. ஹெலிகாப்டர் பயணங்கள். ஆங்காங்கே ஹெலிபேட் ஏற்பாடுகள். குளுகுளு மேடை வசதிகள். கூட்ட நெரிசலோ, வெயில் மயக்கமோ. கூட்டத்துக்கு வந்தவர்களில் யாராவது இறந்தால் இரங்கலெல்லாம் இரண்டாம் பட்சம். தேர்தலுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகை என்ற அறிவிப்பு ஹெலிகாப்டர் ஜன்னல் வழியே விசிறியடிக்கப்படும்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஒரு முறையாவது ஜெயலலிதா மக்களை நேரில் சந்தித்திருக்கிறாரா என்று யோசித்துப் பார்க்கிறேன். ஒரு பத்திரிகை பேட்டி கிடையாது. தொலைக்காட்சிப் பேட்டி கிடையாது. பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது. பொதுக்கூட்டம் கிடையாது. வானொலிப் பேச்சு கிடையாது. வெறும் அறிக்கைகள். அவர் புஷ்பக விமானத்திலேயே வேண்டுமானாலும் பிரசாரக் கூட்டங்களுக்குப் போகட்டும். கொண்டையுள்ள சீமாட்டிகள் அள்ளி முடிவதில் என்ன பிரச்னை? ஆனால் மக்களைவிட்டுப் பல காதம் விலகி கார்ப்பரேட் கர்மயோகி போலப் பேசுவதைக் கொஞ்சம் மாற்றிப் பார்க்கலாம்.
உடுமலை சம்பவம் நடந்தபோது முதல்வர் என்ன சொல்லப் போகிறார் என்று மாநிலமே எதிர்பார்த்து ஒரு வாரம் வரைக்கும் காத்திருந்ததை மறக்க முடியாது. நாதியற்ற சமூகத்தின் நலனுக்காக உழைக்கும் ஒப்பற்ற தலைவருக்கும் சாதி ஓட்டுக் கணக்குகள்தாம் அப்போது முக்கியமாக இருந்தன.
மாதாமாதம் மளிகை சாமான் வாங்குவது போலப் பக்கங்கள் நிரம்பி, புது பாஸ்போர்ட் புத்தகம் வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கும் உலகம் சுற்றும் வாலிபனே சென்னை பெருமழைக் காலத்தில் ஒரு ரவுண்டு வந்து பார்த்துவிட்டுப் போனார். ஒரு மாநில முதல்வர் வீதி இறங்கி வந்திருக்க வேண்டாமா?
இதயங்களை வெல்ல இலவச அறிவிப்புகள் போதும் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. குண்டாகத் தேர்தல் அறிக்கை வெளியிட்டு, நூற்றுக்கணக்கில் வாக்குறுதிகளை வழங்கி, ஒரு சிலவற்றை நிறைவேற்றினாலே ஒப்பற்ற தலைவராகிவிட முடிகிற காலம். உங்களை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள் என்று ஜெயலலிதா கேட்கலாம். அது, இதுவே என் கடைசித் தேர்தல் என்று கருணாநிதி சொல்வதற்கு நிகரானது.
நமது தலைவர்கள் சொற்களால் சீரியல் பல்பு போடுவதை விடுத்து ஆன்மாவைத் தொடும்படியாக ஒரு அகல் விளக்கு ஏற்றப் பார்க்கலாம். இந்த மாநிலம் இவர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறது. இந்த முறையாவது எங்களுக்கு நீங்கள் திருப்பிச் செய்யுங்கள் என்று வாக்காளர்கள் கேட்டுப் பார்க்கலாம்.
அழுத பிள்ளைக்குத்தான் ஆவின் பாலாவது கிடைக்கும்.
0
நன்றி: தினமலர் 15/04/16