பொன்னான வாக்கு – 30

ஜெயலலிதாவின் வேட்பாளர் மாற்ற வைபவத்தை நக்கலடித்ததற்குக் கைமேல் பலன். இந்த வேகாத வெயில் காலத்தில் திமுகவினர் வேட்பாளர் மாற்றம் கோரி கல்யாண் ஜுவல்லர்ஸையே விஞ்சுமளவுக்குப் புரட்சிப் போராட்டங்களில் இறங்கிவிட்டார்கள். சரித்திரம் இதற்கு முன் இத்தனை உன்னதமான உட்கட்சி ஜனநாயகப் போராட்டங்களைக் கண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. எப்படியானாலும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசித் தினம் வரை திருப்திக்கும் அதிருப்திக்குமான துவந்த யுத்தம் தொடரத்தான் செய்யும்.

யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது எந்த ஒரு தேர்தலிலும் முதன்மை வினாவாக இருப்பது. இந்தத் தேர்தல் காட்டும் வித்தியாசம் என்னவென்றால், இந்த வினா வாக்காளர்களிடமிருந்து கட்சிக்காரர்களுக்கு இடம் பெயர்ந்திருப்பதுதான். திமுக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் பல பழைய அமைச்சர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருப்பதை முதலில் சுட்டிக்காட்டினார்கள். இதென்ன ப்ரைவேட் லிமிடெட் கம்பெனியின் பங்குகள் போன்ற சங்கதியா? ஒரு குறிப்பிட்ட உள்வட்டத்துக்குள்தான் அதிகார வாய்ப்பு சுற்றி வருமா?

புரட்சியின் முதல் குரல் அங்கே கேட்டது. வாரிசுகள் என்பதால் மட்டும் அவர்களது சேவை உதாசீனப்படுத்தப்படலாமா? தந்தை வழியில் அவர்களும் கட்சிக்கு உழைத்தவர்களே. தவிரவும் சீனியாரிடி,அதிகார மைய நேரடித் தொடர்பு இன்னபிற பிளகின்கள் இருக்கவே இருக்கின்றன. அட, தன் மகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கூட விரும்பாத ஒரு உத்தமத் தலைவர், தாம் முதல்வராக இருந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வாரிசுகளைக் கரையேற்றவா மெனக்கெடுவார்?

வாதப் பிடிவாதங்களும் பிரதிவாத பயங்கரங்களும்.

கேள்விப்படவும் வாசித்து நமுட்டுச் சிரிப்பு சிரித்துக்கொள்ளவும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளுக்குள்ளும் உள்ளுக்குள் இவ்வளவு ரத்தக்களறி இருக்கிறதென்பது ஓட்டுப் போடுகிற மகாஜனங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கவே செய்யும்.

விஜயகாந்துக்கு அரசியல் தெரியாது. வைகோவுக்கு கலிங்கப்பட்டியிலேயே வாக்காளர்கள் கிடையாது. திருமாவுக்கு தலித் ஓட்டுகள் மட்டும்தான்; அதிலும் ஒரு சாரார் அவர் பக்கம் இல்லை. கம்யூனிஸ்டுகளுக்கு வேட்பாளர்கள் கிடைப்பதே கஷ்டம். காங்கிரசுக்குத் தொண்டர்களே கிடையாது. பாஜகவுக்கு முகமே கிடையாது. அன்புமணிக்கு ஒரு சாதி ஓட்டு மட்டும்தான்…

இன்னும் அடுக்கலாம். ஆனால் முதன்மைக் கட்சிகளின் உளுத்துப்போன சுயரூபத்தைப் பார்க்கும்போது, இதெல்லாமே ஒன்றுமில்லையோ என்று தோன்றிவிடுகிறது.

செயல்படாத ஆட்சி என்றால் எப்படி இருக்கும் என்பதைக் கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாநிலம் திவ்யமாக தரிசித்திருக்கிறது. இலவச ஜிகினா அலங்காரங்களுக்குப் பின்னால் கிழிந்து தொங்கியது திரைச்சீலைகள் மட்டுமல்ல. அவற்றை விவரித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமும் இல்லை. ஒரு பெரும் மாற்றத்தை உத்தேசித்துத் தேர்தலை அணுகும் இயக்கங்கள் சொந்த லாப சுக சௌகரிய கிளுகிளுப்புகளில் கிறங்கிக் கிடக்க இதுவா தருணம்?

ஆட்சியமைக்கும் தகுதி இருந்தாலும், வாய்ப்பற்ற கட்சிகளிலும் கூட்டணிகளிலும் இத்தகு அதிகார யுத்தம் இல்லை என்பதைக் கவனியுங்கள். கிளம்பிவிட்ட மநகூ எக்ஸ்பிரசின் கட்டக்கடைசிக் கம்பார்ட்மெண்டில் ஓடி வந்து ஏறிக்கொண்ட வாசன் கட்சிக்குக் கூட வள்ளலாக அள்ளிக்கொடுக்க வழியிருக்கிறது அவர்களுக்கு. சாவகாசமாக அடுத்த வாரம் ஒரு நாலு கட்சி போய் நின்றால்கூட தலைக்கு நாலு எண்ணிப் போடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்களது பிரச்னையெல்லாம் வேட்பாளரைத் தேடிப்பிடிப்பது மட்டுமே.

இது எப்பேர்ப்பட்ட அவல நாடகம்! இந்த லட்சணத்தில் மாற்றத்தைக் குறித்து சிந்திப்பதில் என்ன பிரயோசனம்?

திமுக வேட்பாளர் அறிவிப்பின் விளைவாக உருவாகியிருக்கும் பூசல், சர்வ நிச்சயமாக ஆளுங்கட்சிக்குத்தான் சாதகம். ஆட்சியை மாற்றிப் பார்க்கலாமா என்று யோசிக்கத் தொடங்கியிருக்கும் சாமானியர்கள் இந்தப் பதவி வெறி புண்ணியசீலர்களின் நடவடிக்கைகளைக் கண்டு தலை தெரிக்க ஓடிவிடுவது நிச்சயம். எனக்குத் தெரிந்த ஒரு டீக்கடைக்காரர் நேற்று சொன்னார். ‘யார் வந்தாலும் சாப்பிடத்தான் போறாங்க. இந்தம்மா நாலஞ்சு பொருள நமக்குக் குடுத்துட்டாச்சும் சாப்பிடுது.’

அவர் குறிப்பிட்டது இலவசங்களை. விரும்பினாலும் விரும்பாது போனாலும் இன்று நம்மை ஆள்வது இலவசங்கள்தாம். இதன்மீதான அருவருப்புணர்வே மரத்துப் போகுமளவுக்கு நாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை விழிப்புணர்வுடன் எண்ணிப் பார்க்கவேண்டிய நேரம் இது.

மூன்றாவது அணியில் இருக்கும் தலைவர்களில் விஜயகாந்தை சாய்ஸில் விட்டுவிடுவோம். ஆயிரம் விமரிசனங்கள் இருப்பினும் வைகோவும் திருமாவும் கட்டாயம் பொருட்படுத்தத் தகுந்தவர்கள். சூழ்நிலைக் கைதிகளாக அவர்கள் விஜயகாந்தின் தலைமையை ஏற்றிருப்பதைக் கூடப் பொறுக்கலாம். ஆனால் ஒருத்தர் கண்ணுக்கு விஜயகாந்த் அம்பேத்கராகத் தெரிவதும் இன்னொருத்தர் கண்ணுக்கு மூப்பனாராகத் தெரிவதும் வேறொருத்தர் கண்ணுக்கு காந்தியாகவும் கோட்சேவாகவும் தெரிவதும் பீதி கிளப்புவதாக அல்லவா உள்ளது? இவர்களுக்கே விஜயகாந்த், விஜயகாந்தாகத் தெரியவில்லை என்றால் இந்தக் கூட்டணி எப்படி மக்கள் கண்ணுக்குத் தெரியும்?

திமுகவின் உட்கட்சிப் பூசல் கவலைக்கு இடமளிக்கிறதென்றால் மூன்றாவது அணியின் ஒய்யாரக் கொண்டை சிரிப்பதற்கு மட்டுமே இடமளித்துக்கொண்டிருக்கிறது. மாற்றம் முன்னேற்றம் என்று ஒருவர் கதறிக்கொண்டிருக்கிறார். மாற்றம் ஏமாற்றமாகிவிடாதிருக்க, விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

0

நன்றி: தினமலர் 18/04/16

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!