பொன்னான வாக்கு – 31

நண்பர் ஒருவருக்கு பாரதிய ஜனதாவில் சீட்டுக் கொடுத்தார்கள். அவர் அந்தப் பக்கம் பச்சையாரஞ்சுத் துண்டு போட்டு போட்டோவுக்கு நிற்பதற்கு முன்னால் இந்தப் பக்கம் அவர் பேரில் ஒரு வாட்சப் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது. எப்படியாவது அவரைத் தேர்தலில் வெற்றி பெற வைத்துவிடுவதற்கு சஹிருதயர்கள் என்ன செய்யவேண்டும்? ஆலோசனைகளை அள்ளி வீச ஒரு தளம். தொழில்நுட்பம் சட்டை பாக்கெட்டுக்கு வந்துவிட்ட பிறகு கருத்துப் பரிமாற்றங்களை நெஞ்சிலிருந்து நெஞ்சுக்கு நேரடியாகக் கடத்துவதில் சிக்கலேதுமில்லை.

ஆனால் நடந்ததுதான் நாராசம். குழுமம் ஆரம்பித்து நாலைந்து தினங்கள் ஆகிவிட்டன. இன்னும் நண்பருக்கு வாழ்த்துச் செய்திகளை மட்டுமே அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு வாழ்த்து. போட்டியிடுவதற்கு வாழ்த்து. வெற்றி பெற வாழ்த்து. பிறரைத் தோற்கடிக்கச் செய்யப் போவதற்கு வாழ்த்து. போட்டியிட முன்வந்தமைக்கே வாழ்த்து. வாட்சப் குழுமம் அமைத்தமைக்கு வாழ்த்து. பிரசாரம் தொடங்கவிருப்பதற்கு வாழ்த்து.

ஏவுகணைத் தாக்குதல்போல் வினாடிக்கொரு வாழ்த்துச் செய்தியாக அனுப்பி கதிகலங்கச் செய்துகொண்டிருக்கிறார்கள் சகோதர ஜிக்கள். இந்த வாழ்த்து அமில மழை பொறுக்காமல் சில கனபாடிகள் இணைந்த சூட்டிலேயே நைசாக நழுவியும் போனார்கள். நண்பரின்மீதுள்ள பாசத்தில் மிச்சமிருப்போர் மட்டும் ம்யூட் செய்துவிட்டு அமைதியாக இருக்கிறார்கள். எப்போதாவது போனால் போகிறதென்று அன்ம்யூட் செய்தால் அப்போதும் ஆயிரக்கணக்கில் வந்து விழுகிறது வாழ்த்துச் செய்திகள். நண்பர் நூறாண்டு காலம் மக்கள் சேவை செய்து சௌக்கியமாக வாழ்வேண்டியவர்தாம். அதில் சந்தேகமில்லை. ஆனால் வாழ்த்துச் செய்தியிலேயே வடை சுட்டுக் காலம் தள்ளி விட முடியுமா?

தமிழகத்தில் பாரதிய ஜனதா என்ன நிலைமையில் உள்ளது என்பதற்கு இந்த வாட்சப் குழுமம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக எனக்குப் பட்டது. எண்ணி ஒரு மாதத்தில் தேர்தல். இந்த அறிவிப்பே மிகவும் தாமதமாக வந்திருப்பது. இருக்கிற தினங்களில் உருப்படியாக என்னென்ன செய்யலாம் என்று ஆளுக்கு ஒரு யோசனைகூடவா தோன்றாது? நெருங்கிய உள்வட்டத்திலேயே இதுதான் நிலைமை என்றால் வெளியே என்ன வாழும்?

கட்சி எது, கூட்டணி என்ன, இந்தத் தேர்தலுக்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ன என்பதையெல்லாம் தாண்டி, ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் வெல்லவேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தகுதி, தொகுதியில் உள்ள அத்தனை பேருக்கும் அவரது முகம் பரிச்சயமாகியிருக்க வேண்டும் என்பது. வீடு தோறும் வணக்கம் வைத்துவிட்டு வருவதும் வீதி அடைத்து கட்டவுட் வைப்பதும் வேறு எதற்காக?

சரி கட்டவுட்டுக்கு வழியில்லை. போஸ்டருக்கு வழியில்லை. கணக்கு வாத்தியார் தேர்தல் கமிஷனர் கோபித்துக்கொள்ளுவார். அதனாலென்ன? களத்தில் செய்ய எத்தனையோ இருக்கிறது.

அடிப்படையில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் போராடி வருவதும் முப்பதாண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா போராடி வருவதும் ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான். மறத்தமிழனுக்கு இவையெல்லாம் இன்றளவும் வடக்கத்தி இயக்கங்களே. இந்தப் பிம்பத்தை உடைப்பதுதான் சவால். சுற்றிச் சுற்றி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து, அவர்களது பிரசார உத்திகளைத் தமதாக்கிக்கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் இன்று ஓரளவுக்குத் தமிழகக் கட்சி போன்ற தொலைதூரச் சாயலைப் பெற்றிருப்பதை மறுக்க இயலாது. குமரி அனந்தன் போன்றோரின் நடைப் பயணங்கள் அல்ல; இளங்கோவன் வகையறாக்களின் தடாலடி ஸ்டேட்மெண்டுகளுக்கே இதில் முக்கிய இடம் என்பதையும் மறுக்க முடியாது.

தேசியக் கட்சிகளின் பொதுவான கொள்கைகள் பிராந்திய எல்லைகளைக் கடக்கும்போது சந்திக்க நேரும் இயல்பான விட்டுக்கொடுத்தல்களுக்கு இடமிருக்க வேண்டும். தொட்டதற்கெல்லாம் பெரிய ஜிக்களிடம் பர்மிஷன் கேட்டுக்கொண்டுதான் இங்கே அரிசிக்கே உலை வைப்பேன் என்பது போன்ற அபத்தம் வேறில்லை. தவிரவும் மாநிலத்தில் அறுபத்தி மூவர் மாதிரி நாலஞ்சு வரிசைக்குத் தலைவர்களே உட்கார்ந்திருந்தால், வாக்காளர்களை விடுங்கள்; தொண்டர்கள் யாருக்கு தண்டன் சமர்ப்பிப்பார்கள்?

அதிமுக என்றால் ஒரு ஜெயலலிதா. திமுக என்றால் ஒரு கலைஞர். பாமக என்றால் ஒரு அன்புமணி. அட மதிமுகவில் இருப்பதே ஒரே ஒருவர்தான் என்றாலும் அந்த ஒருவரை ஊருக்கே தெரியுமே? ஆனால் தேசியக் கட்சிகளில் உறுப்பினராகும்போதே தலைவராகும் எண்ணத்தோடுதான் எல்லோரும் போய்ச் சேருவார்கள் போலிருக்கிறது. மேலிடமும் சுழற்சி முறையில் பிராந்தியத் தலைவர்களை நியமித்து ஆடு வளர்ப்பது போல் கட்சி வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தமிழகத்தில் பாரதிய ஜனதா என்ற கட்சிக்கு முதலில் வேண்டியது ஒரு முகம். வசீகர முகம். சுயமாக சிந்திக்கத் தெரிந்த, சிறப்பாகப் பேசத் தெரிந்த, மக்களோடு நெருங்கிப் பழகத் தெரிந்த, மக்களுக்காக உழைக்கத் திராணியுள்ள ஓர் ஒற்றைத் தலைமை. சந்தேகத்துக்கு இடமின்றி அனைவரும் ஏற்கக்கூடிய தலைமை. அது அமைந்துவிட்டால் மற்ற எதுவும் பெரிய பிரச்னையாக இராது.

ஏனெனில் வேட்பாளர்களின் முகமும் தரமும் பார்த்து ஓட்டுப் போடும் வழக்கம் துரதிருஷ்டவசமாகத் தமிழ்நாட்டில் இல்லை. தலைமை உவப்பானதாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே சட்டதிட்டம். தமிழ்நாட்டு மக்கள் இந்த விஷயத்தில் மாறமாட்டார்கள். தேசியக் கட்சிகள்தாம் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி