பொன்னான வாக்கு – 32

சில பேருக்குச் சில ராசி உண்டு.

என் தம்பி பத்தாவதோ ப்ளஸ் ஒன்னோ படிக்கும்போது ஒரு சட்டை போட்டிருப்பான். வெளிர் நீல நிறத்தில் அழுத்தமான நீலமும் சிவப்பும் அடுத்தடுத்து வரும்படியான கோடுகள் போட்ட ஒரு சட்டை. ஏதோ ஒரு பரீட்சைக்கு அந்தச் சட்டையைப் போட்டுக்கொண்டு போய் நல்ல மார்க் எடுத்துத் தேர்வாகிவிட்டதை நினைவுகூர்ந்து, அந்தச் சட்டையை ஸ்விஸ் பேங்கில் கொண்டு போய் வைக்காத குறையாகத் தேர்வுகளுக்கென்று மட்டும் பத்திரப்படுத்தி வைத்தான். அவன் ப்ளஸ் டூ முடித்து, மூன்று வருட கல்லூரிப் படிப்பை முடித்து, அதன்பின் சில வருடங்கள் சிஏ படித்து, அதையும் முடிக்கும்வரை அந்தச் சட்டை அவனிடம் அப்படியே இருந்தது. அத்தனை தேர்வுகளுக்கும் அதைத்தான் அணிந்து செல்வான். தோய்த்தால் ராசி போய்விடும் என்று தோய்த்ததுகூட இல்லை என்று நினைக்கிறேன். ஒரு கிருமி பாம் போல அந்தச் சட்டை எங்கள் வீட்டில் வெகுகாலம் அனைவரையும் அச்சமூட்டிக்கொண்டிருந்தது.

எனக்கும் இப்படிப்பட்ட ஒரு ராசி இருந்தது. சிறு வயதில் நான் டிவியில் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தால் அன்றைய மேட்சில் கண்டிப்பாக இந்தியா தோற்கும். தேச நலன் கருதி இதனாலேயே கிரிக்கெட் பார்ப்பதை விட்டேன். அதன்பிறகுதான் இந்தியா அதிக மேட்ச்களில் தோற்க ஆரம்பித்தது என்பது ஒரு வரலாற்றுப் பிழையே ஆனாலும், இங்கு சொல்லிவைப்பது நல்லது. ஏனெனில் எனது மேற்படி ராசி வேறு பல சந்துபொந்துகளிலும் சமயம் பார்த்துக் காலை வாரிவிடுவதைத் தற்செயலாக இப்போது கவனித்தேன்.

ஒரு நாலு நாள் நான் இந்தப் பத்தி எழுதவில்லை. அதனாலேயே என்னவாவது அதிசயம் நிகழ்ந்து, தமிழக அரசியலில் தடாலடித் திருப்பங்களோ, திடுக்கிடும் மாற்றங்களோ ஏற்பட்டுவிடும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். தேர்தல் சமயம் வேறு. ஜெயலலிதா பிரசாரத்துக்குப் போகிற இடத்திலெல்லாம் யாராவது சூனியம் வைத்துவிடுகிறார்கள். உடனே யாராவது பலியாகிவிடுகிறார்கள். திடீர் வாட்சப் செய்தியாளர்கள் அடுத்த பலி இங்கே அல்லது அங்கே என்று ஆரூடமெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டதில் சற்றுக் கலவரமானது உண்மையே. நல்லவேளை திருச்சி தப்பித்தது.

ஆனால் சொன்னேனல்லவா, என் ராசி சில வரலாற்றுப் பிழைகளை உருவாக்குமென்று? அதுதான் நிகழ்ந்திருக்கிறது. அதிமுகவுக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யத் தயார் என்று ஜெயலலிதாவை நேரில் போய்ப் பார்த்துத் தம் விருப்பத்தைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார், மதுரை ஆதீனம் அருணகிரி தேசிகர். பொதுக்கூட்ட பலிகளைக் காட்டிலும் பேஜார் தரத்தக்கதாக உள்ளது இது.

ஆதீனவாதிக்கு அரசியல் ஆர்வம் இருக்கக்கூடாதா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்! அவர் அதை ஒளித்ததே இல்லை. ஞானசம்மந்தரின் வழித்தோன்றல் அவ்வப்போதாவது கொஞ்சம் ஆன்மிகவாதியாகவும் இருந்துவிட்டால் பிரச்னையில்லை என்பதுதான் விஷயம். ஆயிரத்தைந்நூறு வருஷ பாரம்பரியம் மிக்க ஒரு மடத்தின் பீடாதிபதியானவர், ரத்தத்தின் ரத்தங்களின் பிரியாணி, பேட்டா கூட்டங்களில் வரிந்துகட்டிக்கொண்டு வசைமாறி பொழியப் போகிறார் என்பதை எண்ணிப் பார்க்கச் சங்கடமாக இருக்காதா?

ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்மந்தரால் நிறுவப்பட்ட மதுரை ஆதீன மடம், தமிழகத்தில் சைவமும் தமிழும் செழிக்க எத்தனையோ செய்திருக்கிறது. காண்டெம்ப்ரரி கரஸ்பாண்டண்ட் சுவாமிகளோ, தமிழகம் செழிக்க இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்கிறார். விட்டால் ஒரு கோலி சோடா உடைத்துக் குடித்துவிட்டு, ஒற்றைக்கையில் மைக் பிடித்து, ஏ கருணாநிதியே என்று என்றைக்கு வேண்டுமானாலும் ஆரம்பித்துவிடுவார் போலிருக்கிறது.

செய்தியில் இருப்பதுதான் நோக்கம் என்றால் அதற்கு சுவாமிகள் வேகாத வெயிலில் களமிறங்கி வாக்குச் சேகரிக்கவேண்டிய அவசியமே இல்லை. நித்யானந்தாவோடு அவர் இணைந்து கலக்கிய திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த சமகாலக் காவியம் ஒன்று போதும், அவரது அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல.

என் கேள்வி அதுவல்ல. ஒரிஜினல் நயம் திராவிட நாத்திகப் பெருந்தகைகளின் வாரிசுகள் நூற்றெட்டுப் போற்றி சொல்லி பிரசாரம் தொடங்கினால் சந்தோஷப்படும் சமூகம், போலி ஆத்திகப் போர்வையாளர்களின் களப்பணியாரங்களையும் அதே ஆர்வத்துடன் அள்ளிச் சாப்பிடுமா?

ஒரு காலத்தில் மடங்கள், மடாதிபதிகள் மீதிருந்த மட்டுமரியாதையெல்லாம் மக்களுக்கு இன்று அப்படியே இருக்கிறதா என்று தெரியவில்லை. காசுள்ள கனவான்களுக்கு கார்ப்பரேட் சாமியார்களின் ஸ்டைலிஷ் யோகா வகுப்புகள் போதும். காசற்றவர்களுக்குக் கடவுளே போதும். ஆயிரத்தைந்நூறு வருடப் பாரம்பரியம் கொண்ட மடாலயத்தின் அருமை பெருமைகளையே காப்பாற்ற இயலாத மடதாரி, வெறும் நாற்பத்தி நாலு வருஷ சரித்திரம் கொண்ட கட்சிக்குப் பிரசாரம் செய்து என்ன சாதித்துக்கொடுத்துவிடுவார் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்?

ஆதீனதாரி அருணகிரி தேசிகரோடு ஒப்பிட்டால், நவரசத் தென்றல் நமீதாவின் வரவு அதிமுகவுக்குச் சற்றும் சந்தேகமின்றிப் புது ரத்தம் பாய்ச்சக்கூடியது. ரத்தத்தின் ரத்தங்களெல்லாம் இனி மச்சான்களாகிவிடுவார்கள். மேடையில் வீசும் மெல்லிய (சரி, கனத்த) பூங்காற்று வெகு நிச்சயமாக இந்தக் கோடை வெயிலுக்குச் சரியான தீர்வு. இது மயக்க யோகம் அல்லது மரண யோகத்தையும் ஒருவேளை தடுத்தாலும் தடுக்கும்.

ஆனால் ஒன்று. ஜெயலலிதாவின் “எனது தலைமையிலான அதிமுக அரசு” அடுத்த முறையும் அமைந்து, அருமை ஆதீனருக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவியாவது கிடைத்தாலொழிய அவர் அடங்கமாட்டார் என்று நினைக்கிறேன். நமீதாவோடு இணைந்து அவர் பிரசார ‘குத்துக் கலை நிகழ்ச்சி’ நடத்திவிடுவதற்குள் திருஞான சம்மந்தர்தான் அவரைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி