பொன்னான வாக்கு – 33

ஸ்டாலினின் தேர்தல் பிரசாரப் பேச்சொன்றைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத ஒரு வாக்குறுதியை அவர் மக்களுக்கு அளித்துக்கொண்டிருந்தார்.

‘திமுக வேட்பாளரை நீங்கள் வெற்றி பெற வையுங்கள். சட்டசபை நடக்கும் தினங்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் அவர் தொகுதியிலேயே இருப்பார். உங்கள் பிரச்னைகளுக்குச் செவி கொடுப்பார். உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். ஜெயித்த கையோடு தொகுதியை மறந்துவிடும் அரசியல்வாதி என்னும் பேச்சுக்கே இனி இடமில்லை.’

திமுகவோ, அதிமுகவோ. நடைமுறையில் நமது அரசியல்வாதிகளுக்கு இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனெனில், அரங்கேறிக்கொண்டிருக்கும் பிரசாரக் காண்டத்தில் ஆங்காங்கே நிகழும் சில சம்பவங்கள் ஒரு மகத்தான மக்கள் புரட்சி நடந்துவிடுமோ என்ற அல்ப ஆசையைக் கிளப்பும்படியாக இருக்கின்றன. நாமும் எத்தனை காலத்துக்குத்தான் புரட்சியை ரிடையர் ஆன கம்யூனிஸ்டுகள் மற்றும் சீமான் பிராண்ட் இன்ஸ்டண்ட் காப்பி அரசியல்வாதிகளின் உரைகளில் மட்டும் பார்த்துக்கொண்டிருப்போம்? ஒரு மாறுதலுக்கு நேரிலும் பார்த்தால்தான் என்ன? குறைந்தபட்சம் அது என்ன கலர் என்றாவது தெரிந்துகொண்டுவிட வேண்டும்.

நடப்பு ஆட்சியில் அமைச்சராக இருக்கிற ஒருவர் ஓரிடத்துக்குப் பிரசாரத்துக்குப் போகிறார். அவர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். பேசிக்கொண்டிருக்கும்போது பொதுஜனம் ஒருவர் கேட்கிறார். ‘நீங்கள் வந்த பாதையை கவனித்தீர்களா? சாலை எத்தனை மோசம் என்று பார்த்தீர்களா? நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நீங்கள் இந்த ஐந்தாண்டுகளில் எங்களுக்கு என்ன செய்தீர்கள்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கு ஓட்டுக் கேட்க வந்தீர்கள்?’

அடேங்கப்பா. என்ன தைரியம்! எப்பேர்ப்பட்ட கேள்வி! ஆனால் அமைச்சர் பெருமான் வேகாத வெயிலில் திட்டமிட்டபடி பிரசாரத்தை முடிப்பது முக்கியமா, ஓட்டுப்போட்ட உத்தமோத்தமரின் கேள்விக்கு பதில் சொல்லிப் பொழுது போக்கிக்கொண்டிருப்பது முக்கியமா? அட, சாலை போடுவதெல்லாம் ஒரு முக்கியப் பணியா? சுத்த அறிவுகெட்டத்தனமாக இப்படிக் கேள்வி கேட்டால் அமைச்சருக்குக் கோபம் வராமல் வேறென்ன செய்யும்? ‘உனக்கெல்லாம் ரோடு ஒரு கேடா? அடுத்த முறையும் நாங்களேதான் ஜெயிக்கப் போகிறோம். அப்போது உன்னைத் தொலைத்துக்கட்டிவிடுவேன் பார்’ என்று அன்பாக நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

நல்ல அமைச்சர். எனவே வார்த்தையோடு வன்முறைக்குத் தடைபோட்டுவிட்டார். அவரென்ன மைனாரிடி திமுகவின் மகத்தான வாரிசு மெட்ரோ ரயிலில் ஒரு கண்மணியின் கன்னத்தைப் பதம் பார்த்தது போலவா செய்தார்? கொஞ்ச நாள் முன்னால் தனக்குத்தானே என்னவாவது செய்துகொள்கிற உத்தேசத்துடன் நமக்கு நாமே உலா சென்றபோதும், எங்கோ யாரோ ஒரு ஆட்டோ டிரைவரை அவர் தாக்கியிருக்கிறார். அமைச்சர் அப்படியெல்லாமா செய்துவிட்டார்? அல்லது கேப்டன் விஜயகாந்தைப் போல டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சிகளைத்தான் அரங்கேற்றினாரா?

வெறும் வார்த்தை. தொலைத்துக்கட்டிவிடுவேன். விஜயகாந்த் ‘தூக்கி அடிச்சிருவேன்’ என்று சொன்னால் மட்டும் சிரித்துவிட்டு, அமைச்சர் தொலைத்துக்கட்டிவிடுவதாகச் சொன்னதும் சீறி எழுவது அறமல்ல. இதற்கும் சிரிக்கத்தான் வேண்டும். ஏனெனில் சிரிப்பாய்ச் சிரிப்பதுதான் தமிழர் கலாசாரம்.

நிற்க. மக்கள் சேவையில் இருக்கிறவர்களுக்குக் கோபம் ஒரு பேஜார். சட்டசபையிலேயே கேள்வி கேட்டால் எழுதி வைத்துப் படிக்காமல் பதில் சொல்ல முடியாதவர்களுக்குப் பொதுவெளிக் கேள்விகள் அதர்மசங்கடம்தான். தவிரவும் ஓட்டு முக்கியம். கூழைக் கும்பிடுகளும் குமிழ் சிரிப்புச் சமாளிப்புகளும் அதனினும் முக்கியம். இதற்காகவேனும் பிரசாரத்துக்குக் கிளம்பும் முன்னர் வீட்டில் சிறிது நேரம் தியானம் பழகிவிட்டுப் போகலாம்.

ஒரு கேள்வி கேட்கிறேன். அமைச்சரோ, அரசரோ. வாழ்நாளில் ஒருமுறையாவது அவரவர் மனைவி தொடுக்கும் வினாக்கணைகளுக்குக் கோபப்பட்டிருப்பாரா? பொன்னும் மணியுமாகக் கொண்டு இழைத்தாலும், ‘ஒன்ன கட்டிக்கிட்டு என்ன சுகத்தக் கண்டேன்?’ என்ற கேள்வியை எதிர்கொள்ளாதிருப்பாரா? ‘வீட்டுக்கு உருப்படியா ஒரு வேல செய்யக்காணம்; இவரு ஊருக்கு உழைச்சிக் கிழிக்கறாரு’ என்ற குத்தீட்டிக் குத்தலை எதிர்கொள்ளாதிருப்பாரா?

அப்போதெல்லாம் தொலைத்துக்கட்டிவிடுவேன் என்றோ, தூக்கி அடிச்சிருவேன் என்றோ சொல்லத் தோன்றுவதில்லை அல்லவா? அதுதான் ஞான கர்ம சன்னியாச யோகம் என்பது. வேட்பாளர்களும் பிரசார பீரங்கிகளும் பகவத்கீதை பாராயணம் செய்வது நல்லது. பிரபத்தி என்கிற சரணாகதியைக் காட்டிலும் மேலான தத்துவமொன்று இல்லை. ஏன் சாலை போடவில்லை என்கிறார்களா? ஐயா மன்னித்துவிடுங்கள், நாளைக்குப் போட்டுவிடுகிறேன் என்று சொல்லுங்கள். ஏன் பவர்கட் என்கிறார்களா? ஐயா, பொறுத்துக்கொள்ளுங்கள், நான் உங்களுக்கு விசிறி எடுத்து வந்து விசிறுகிறேன் என்று சொல்லுங்கள். ஏன் விலைவாசி உயர்வு என்று சட்டையைப் பிடிக்கிறார்களா? அப்படியே கையைப் பிடித்து அழைத்துச் சென்று மார்க்கெட்டில் நல்லதாகப் பார்த்து நாலு கிலோ மீன் வாங்கிக் கொடுத்து அனுப்புங்கள்.

இதெல்லாம் ஓட்டு விழுவதற்காக அல்ல. உதை விழாதிருப்பதற்காக.

தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் இம்மாதிரி அமைச்சர்கள் மற்றும் பழைய எம்.எல்.ஏக்களின் சட்டைபிடிக் கேள்விக்கணைகள் சரமாரியாக வருவதாகக் கேள்விப்படுகிறேன். ஒரு விதத்தில் இது நல்லதே. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் நம்மவர்கள் ஜனங்களைக் குறித்து யோசிக்கவே செய்கிறார்கள் என்னும்போது அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வது தவறல்ல.

நிறையக் கேளுங்கள். ஆனால் கோபத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொள்ளாமல், ஒரு வினாடியாவது உள்ளம் வருந்தி யோசிக்கும் விதமாகக் கேளுங்கள். அடுத்தமுறை பிராந்தியத்துக்குள் காலெடுத்து வைக்கும்முன், உள்ளே நுழைய நமக்குத் தகுதியிருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கும்படியாகக் கேளுங்கள்.

சொன்னேனே, சொல் முக்கியம். கொல்லும் சொல்லால் பயனில்லை. வெல்லும் சொல்லைத் தேர்ந்தெடுப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!