பொன்னான வாக்கு – 23

கிருஷ்ண பட்சத்துக்கு ஒன்று, சுக்ல பட்சத்துக்கு ஒன்று என்று இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில்கூட முற்றிலும் புது முகங்களைப் போட்டுப் படமெடுக்க ஆள் வந்துவிட்ட நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ள புது முகங்களின் எண்ணிக்கை எனக்குப் பெரிய அதிர்ச்சியளிக்கவில்லை. ஐந்து முழு வருஷங்கள் அமைச்சராக இருந்தவர்களிலேயே முக்கால்வாசிப் பேர் இன்னும் புது முகங்களாகத்தான் காட்சியளிக்கிறார்கள். எங்கே, தில் இருந்தால் அறம் செய விரும்பு ஸ்பீடில் அதிமுக அமைச்சர்கள் பெயர்களை ஒப்பியுங்கள் பார்க்கலாம்?

வேட்பாளர் பட்டியலில் தற்போதைய அமைச்சர்கள் பலபேர் இல்லை. யார் யார் இல்லாது போனதற்கு என்னென்ன காரணம் என்று இனிமேல் ஆய்வுக்கட்டுரைகள் வரத் தொடங்கும். பன்னீரும் நத்தமும் பட்டியலில் இருப்பதைக் கவனியுங்கள். கட்சி விரோதச் செயல்பாடுகள், ஒழுங்கு நடவடிக்கை என்று கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற களேபரங்களையெல்லாம் கபளீகரம் செய்யும் விதமான பெயர் சேர்ப்பு வைபவம். தெரியுமாலே? இதாம்லெ ராசதந்திரம். மீண்டும் கோட்டா சீனிவாசராவ் குரல்தான் காதில் ஒலிக்கிறது.

நல்லது. இருநூற்று முப்பத்தி நாலு தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம். தொட்டுக்கொள்ள ஏழு ஒரு நபர் கட்சிகள். இந்தப் பக்கம் தோப்புகளை அம்மா தனி மரமாக்கி அழகு பார்க்க, அந்தப் பக்கம் காங்கிரசுக்கு நாற்பத்தியொரு சீட்டுகளை அள்ளிக்கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் கலைஞர்!

இந்த வயதில் அவருக்கு என்னத்துக்கு இப்படியொரு வில்லத்தனம்? நாற்பத்தியொரு வேட்பாளர்கள்! பாவம் காங்கிரஸ். ஆட்களுக்கு எங்கே போவார்கள்? இதெல்லாம் படு பயங்கரவாதமன்றி வேறல்ல.

மிச்சமிருக்கும் ஒரு சில உதிரிகளுக்கு என்ன தொகுதி என்பது மட்டும் தெளிவாகிவிட்டால் போதும். களம் காணக் கட்சிகள் தயார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியான கணத்தில் இருந்து திமுக பிரசாரப் புலிகள் வரிந்துகட்டிக்கொண்டு ரவுண்டு கட்டத் தொடங்கிவிட்டார்கள். என் ஆச்சரியம் என்னவென்றால் நேற்றைக்கு வரை மநகூ – கேப்டன் கோஷ்டியை சொல்லி சொல்லி வாரிக்கொண்டிருந்தவர்கள் – அதிமுக என்றொரு கட்சியே இல்லாத மாதிரியான பாவனையில் இருந்தவர்கள், சொய்யாவென்று ஒரே நாளில் தங்கள் இலக்கை மாற்றிக்கொண்டுவிடுகிற அளவுக்கு அப்படி என்ன கிருமி பாம் வைத்துவிட்டார் ஜெயலலிதா?

என்னைக் கேட்டால் ஒன்றுமேயில்லை. வழக்கமான வியூகங்கள். பழக்கமான காய் நகர்த்தல்கள். ஊழல் அமைச்சர்களுக்கு இடமில்லை என்று சொல்லாமல் சொல்லுவதன்மூலம் பைசா செலவில்லாமல் ஒரு சுய பரிசுத்த ஆவிக் குளியல். புதியவர்களுக்கு இடம் என்பதன்மூலம் இதர இலவு காப்பாளர்களுக்கு ஒரு சிறு நம்பிக்கை வெளிச்சம். ரிசர்வேஷன் அகெய்ன்ஸ்ட் கேன்சலேஷன் சித்தாந்தப்படி என்றைக்கு வேண்டுமானாலும் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற சப்புக்கொட்டலுடன் தேர்தல் திருப்பணி ஆற்றப் போகலாம்.

மற்றபடி அதே சாதி ஓட்டுக் கணக்குகள், செலவு செய்யும் சக்திமான் தேர்வுகள்.

இதுவரை அலை என்ற ஒன்று எந்தக் கட்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் பெரிதாக அடிக்க ஆரம்பிக்கவில்லை. இந்த முறை அப்படியொன்று இருக்கும் சாத்தியங்களும் தெரியவில்லை. திமுகவைத் திட்டுவதற்கு எதிர் கோஷ்டிகளுக்குப் புதிய சங்கதிகள் ஏதுமில்லை என்பதைப் போலவே, ஜெயலலிதாவைத் திட்டுவதற்கும் எதிர்த்தரப்பு வக்கீல்களுக்கு டாஸ்மாக் தவிர வேறு பிரமாதமான விஷயம் அகப்பட்டபாடில்லை.

ஒன்று எனக்குப் புரியவில்லை. டாஸ்மாக்கைக் கலைத்துவிட்டுப் பழையபடியே தனியார் வசம் மது விற்பனை உரிமங்களைக் கொடுத்தால் மட்டும் என்னவாகும்? சுவாரசியமற்ற அழுக்கு டாஸ்மாக் போர்டுகளுக்கு பதில் பழைய குஷ்பு ஒயின்ஸ், நக்மா ஒயின்ஸ் மாதிரி இன்றைய டிரெண்டுக்கு ஏற்ற நயந்தாரா ஒயின்ஸ், ஸ்ருதி ஹாசன் ஒயின்ஸ் போர்டுகள் வைக்கப்படும். கொஞ்சம் லட்சணமாக ஆயில் பெயிண்டிங் எல்லாம் செய்து அலங்கார விளக்குகள் வைத்து அழகு படுத்துவார்கள். மற்றபடி அதே பாலாறு தேனாறுதான்.

ஆட்சியமைக்கும் சாத்தியங்கள் உள்ள இரண்டு பிரதானக் கட்சிகளும் மது விலக்கு பற்றி வாய் திறப்பதில்லை என்பதைக் கவனியுங்கள். கலைஞராவது எப்போதாவது போகிற போக்கில் அதைக் குறிப்பிட்டுப் பேசக்கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால் ஜெயலலிதா மூச்சுக்கூட விடமாட்டார். அது அரசுக்கு வருமானம். அரசு அமைத்து அனுபவமில்லாத புதிய பெருச்சாளிகள் மட்டுமே மது விலக்கை முன்வைத்துப் பிரசாரம் செய்வார்கள். அதெப்படி? பிகாரில் நிதிஷ் குமார் சாதிக்கவில்லையா என்று கேட்கப்படாது. திராவிட தர்பாருக்கு சாராயக் கடைகளே சர்வாலங்காரம்.

இதோ பிரசாரங்கள் வேகமெடுத்துவிடும். காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள். வெற்றி தோல்விகளை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். இந்தத் தேர்தலின் பிரதானப் பிரச்னைகளாக முன்வைக்கப்படுகிற சங்கதிகளை நாம் கவனிப்போம். புதிதாக நாலைந்து தேறினால்கூடப் போதும். நமது வாக்கின் மதிப்பு நமக்குப் புரிய ஆரம்பித்துவிடும்.

0

(பா. ராகவன் – தொடர்புக்கு: writerpara@gmail.com)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி