நான் குடியிருக்கும் வீதியில் மொத்தம் 23 நாய்கள் வசிக்கின்றன. ராத்திரி ஒரு ஏழு மணிக்குப் பிறகு வெளியே கால் அல்லது வீல் எடுத்து வைக்க முடியாது. இருட்டில் மூலைக்கு மூலை ஒன்று உறும ஆரம்பிக்கும். ரொம்ப பயங்கரமாக, ரொம்ப நாராசமாக இருக்கும். இருட்டிய பிறகு வீடு திரும்புவதென்றால் பெரும்பாலும் நான் பக்கத்து வீதி வழியாகத்தான் வருவேன். அங்குதான் நாய்கள் எண்ணிக்கை குறைவு. அந்த வீதியின் வழியே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து, என் வீதியின் நாயடர்த்தி குறைந்த இடப்புற நுழைவை அடைந்ததும் கண்ணை மூடிக்கொண்டு நூறு கிமீ வேகத்தில் வாகனத்தைச் செலுத்தி வீட்டுக்குள் பாய்ந்துவிடுவேன்.
அது ஒரு தீராத சொந்த சோகம். அதை விடுங்கள். சொன்னேனே, பக்கத்து வீதி? அங்கே பதினொரு நாய்கள்தான் உண்டென்றாலும், ஒரு கட்சி ஆபீசும் உண்டு. என்ன கட்சி என்று கேட்காதீர்கள். அதெல்லாம் சொல்வதற்கில்லை. ஏதோ அதுவாவது அங்கே இருப்பதால்தான் நாய்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது; நானும் போய்வர வசதியாக இருக்கிறது.
விஷயம் என்னவென்றால், மேற்படி கட்சியின் பெயரை நான் அந்த வீதியில் முதல் முதலில் காலெடுத்து வைப்பதற்கு முன்னால் கேள்விப்பட்டதே கிடையாது. இப்போது தினசரி கட்சி போர்டைப் பார்ப்பதால் எனக்கு அது பிரபலக் கட்சியாகிவிட்டது. தமிழ்நாட்டு அரசியலில் என்றைக்கு இந்தக் கட்சி ஒரு புயலாகக் களமிறங்கி ஆட்சியைப் பிடிக்கும் என்று ரொம்ப காலமாக எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அந்தப் பெயரை கூகுளில் போட்டு விவரம் தேடிப் பார்த்ததில் தேர்தல் அரசியலுக்குத் தேவையான அனைத்துக் கல்யாண குணங்களும் உள்ள கட்சியாகத்தான் இருக்கிறது. கட்சி நிறுவனர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள், கைது நடவடிக்கைகள் எல்லாம் கனஜோராக நடந்திருக்கிறது. அடுத்தபடியாகக் களமிறங்குவதுதானே? அதெல்லாம் இறங்கிவிடலாம்.
இந்த மாதிரி மொத்தம் நூற்று எண்பத்தைந்து காராபூந்திக் கட்சிகள் இருக்கின்றன. ஒரு பெயர். ஒரு லெட்டர் பேட். பதிவு செய்துகொள்ளக் கோரி ஒரு மனு. PAN கேட்கிற இடங்களிலெல்லாம் Applied for என்று போட்டு நழுவும் பிரகஸ்பதிகளுக்கு இது புரியும். தேர்தல் கமிஷன் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் கட்சிகள். அங்கீகாரம் கிடைத்துவிட்டால் உடனே ஆட்சி அமைத்துவிடலாம்.
உங்களுக்கு அன்பு உதயம் கட்சி தெரியுமா? அப்பாம்மா மக்கள் கழகத்தைத் தெரியுமா? பாரதிய திராவிட மக்கள் கட்சி? பெயரிலேயே என்னவொரு அரசியல் சாணக்கியம் பாருங்கள். திமுக, அதிமுக, தேமுதிக வகையறாக்களுடனும் கூட்டணி வைப்பேன், பாஜக கூப்பிட்டாலும் குட்டிக்கரணம் அடித்து ஓடிப் போய் நிற்பேன் என்று சொல்லாமல் சொல்லும் இந்த சாமர்த்தியம் யாருக்கு வரும்?
எழுச்சித் தமிழர்கள் முன்னேற்றக் கழகம், அனைத்து மக்கள் புரட்சிக் கட்சி, திராவிட மக்கள் விடுதலைக் கட்சி – இதெல்லாம் ஒரு நாள் இல்லை ஒரு நாள் செபாஸ்டியன் சீமான் கண்ணில் விரலைவிட்டு ஆட்டத்தான் போகின்றன.
இந்த ரகக் குட்டிக் கட்சிகள் சாதாரண காலங்களில் இருக்குமிடம் தெரிவதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் பிட் நோட்டீஸ் வீசத் தொடங்குவார்கள். லோக்கலாக என்னவாவது ஒரு கட்சியுடன் பிரசார உடன்படிக்கை செய்துகொண்டுவிடுவார்கள் போலிருக்கிறது. பிராந்தியத்தின் அசகாயப் பிரச்னை ஒன்றை எடுத்து முன்னால் வைத்து பூதாகார அலங்காரங்கள் செய்து, ‘இதைத் தீர்த்து வைப்பவர்களுக்கே ஓட்டு’ என்று வீர முழக்கமிடுவார்கள்.
அவ்வப்போது எனக்கு அப்படிப்பட்ட பிட் நோட்டீஸ் மின்னஞ்சல்கள் வரும். சமீபத்தில் வாசித்த ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் அம்பத்தூரில் இருந்து வந்தது. அம்பத்தூரைச் சென்னை மாநகராட்சியுடன் இணைத்தது மாபெரும் வரலாற்றுப் பிழை. அம்பத்தூரின் வளங்களைத் தமிழக அரசு கொள்ளையடித்து சென்னை மாநகராட்சிக்குத் தாரை வார்க்கிறது. இந்த அபாயம் தடுக்கப்படவில்லையென்றால் தமிழ்நாட்டையே கடல் கொண்டுவிடும்.
அவர்கள் கேட்பது அம்பத்தூர் மாநகராட்சியா, மாவட்டமா என்றே எனக்கு சரியாகப் புரியவில்லை. ஏதாவது ஒன்றைக் கொடுங்கள்; அல்லது எல்லாமே கிடைத்தால் சந்தோஷம் என்னும் மனநிலையோ என்னமோ. எப்படியும் இரண்டும் கிடைக்கப் போவதில்லை என்ற தெளிவு இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.
இதில் என்னைக் கவர்ந்த அம்சம், மேற்படி பிட் நோட்டீசில் கையெழுத்திட்டிருக்கும் கட்சிகளின் எண்ணிக்கை. சமதா கட்சி, மக்கள் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய மனித உரிமைக் கட்சி, அம்பேத்கர் ஜனசக்தி, சிங்காரவேலர் முன்னேற்றக் கழகம் – இதையெல்லாம் எந்தக் காலத்திலாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?
ரொம்ப ஆசையாக இருக்கிறது. பேசாமல் நானும் ஒரு கட்சி தொடங்கினால் என்ன? பார்புகழும் பாரா முன்னேற்றக் கழகம். ஆழ்ந்து யோசித்தால் நுணுக்கமாக நிறைய அர்த்தங்களைத் தரும் பெயர்.
முதலில் என் மனைவியாவது உறுப்பினராகச் சேர்வாளா என்று கேட்டுப் பார்க்கிறேன்.
0
(நன்றி: தினமலர் 05/03/16)