பொலிக! பொலிக! 16

அரையர் அப்போதுதான் பாடி முடித்திருந்தார். அரங்கனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரின் சீடர்கள் அனைவரும் கருடாழ்வார் சன்னிதிப் பக்கம் வந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் ஓடி வந்தார்கள்.

‘பெரிய நம்பிகளே! காஞ்சியில் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இது இந்நூற்றாண்டின் அதிசயம். பேரருளாளனின் பெருங்கருணை இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது!’

மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, பரவசத்தில் தோய்த்த வார்த்தைகளைக் கோக்கத் தெரியாமல் அவர்கள் அள்ளிக் கொட்டினார்கள்.

பெரிய நம்பிக்குக் காஞ்சி என்றதுமே ராமானுஜரின் நினைவு வந்தது. தமது இறுதி நாள் நெருங்கிய நேரத்தில், ‘அவரை அழைத்து வா’ என்று ஆசார்யர் ஆளவந்தார் தன்னைக் காஞ்சிக்கு அனுப்பிவைத்த சம்பவம் நினைவுக்கு வந்தது. பிறகு ஆளவந்தார் மறைந்த பின்னர் மீண்டும் காஞ்சிக்குச் சென்றது. வழியில் அவரை மதுராந்தகத்தில் சந்தித்தது. ஏரி காத்த ராமர் கோயிலில் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தது. ராமானுஜர் வீட்டுக்கே போய்த் தங்கி, பிரபந்தம் சொல்லிக்கொடுத்தது. தஞ்சம்மாவின் தண்ணீர்த் தகராறு. சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்தது.

‘நம்பிகளே, எந்த உலகில் இருக்கிறீர்? நாங்கள் சொல்வது கேட்கிறதா?’

வந்தவர்கள் கேட்டார்கள். உண்மையில் பெரிய நம்பிக்கு அவர்கள் விவரித்துச் சொன்ன சம்பவத்தில் ஒருவரி கூட மனத்தில் ஏறவில்லை. அவரது எண்ணமெல்லாம் பழைய சம்பவங்களையே சுற்றி வந்தது.

‘என்ன சொன்னீர்கள்?’ என்று திரும்பக் கேட்டார்.

திருவரங்கப் பெருமாள் அரையர் மீண்டும் எடுத்துச் சொன்னார்.

‘யாதவப் பிரகாசர் ராமானுஜரின் சிஷ்யராகி, ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டாராம். ராமானுஜர் அவருக்கு கோவிந்த ஜீயர் என்று பெயரிட்டு புத்தகம் எழுதப் பணித்திருக்கிறாராம்.’

நம்பி புன்னகை செய்தார். ‘இது நடக்காதிருந்தால்தான் வியந்திருப்பேன்!’

‘எப்படி? எப்படிச் சொல்கிறீர்கள்? யாதவரின் மனமாற்றம் எதிர்பார்க்கக்கூடியது இல்லையே?’

‘ஆனால் ராமானுஜரின் பராக்கிரமம் நாம் அறிந்தது அல்லவா? நாமெல்லாம் நமது ஆசாரியரின் கூடவே இருந்தவர்கள். ஆனால் வாழ்வில் ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசியிராத ராமானுஜரையே அல்லவா அவர் தமக்குப் பிறகு வைணவ உலகின் ஆசார்ய பீடாதிபதியாக எண்ணினார்? ஆளவந்தார் நெஞ்சையே ஆளப் பிறந்தவர் அல்லவா அவர்? யாதவரின் அகந்தை சரியான இடத்தில் நொறுங்கியிருக்கிறது. தமது சீடருக்கே சீடரான குரு இவ்வுலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். யாதவர் பெயர் இனி ராமானுஜர் பெயருள்ள வரை நிலைத்திருக்கும்.’

அவர்கள் அத்தனை பேரும் பரவச நிலையில் இருந்தார்கள். காஞ்சிக்குச் சென்று வந்தவர்கள் கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ராமானுஜர் துறவு ஏற்றது குறித்து. முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் முதல் சீடர்களாகச் சேர்ந்தது குறித்து. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாகப் பெருகி வந்து அவரை தரிசித்து வைணவத்தை வாழ்க்கை முறையாக ஏற்பது குறித்து.

‘ஐயா, காஞ்சி மக்கள் அவரைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இப்படியொரு அகந்தையே இல்லாத மனிதன் இப்பூமியில் வாழமுடியுமா என்று அவர்கள் வியக்கிறார்கள். அத்வைதிகளுடன் வாதம் செய்து வெல்லும்போதுகூட கூப்பிய கரங்களை இறக்குவதில்லையாம்.’

‘அரையரே, நமது ஆசாரியர் ராமானுஜரைச் சந்திப்பதற்காகக் காஞ்சி சென்ற தருணம் உமக்கு நினைவிருக்கிறதா?’ என்றார் பெரிய நம்பி.

யாரால் மறக்க முடியும்? சரித்திரம் மறக்காத ஒரு பக்கச் சந்திப்பு அது!

யாதவரின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்து ராமானுஜர் காஞ்சி வந்து சேர்ந்திருந்த சமயம் அது. அவரைக் காத்ததும் மீட்டதும் கச்சிப் பேரருளாளனே என்கிற தகவல் பனிக் காற்றைப் போல் இண்டு இடுக்கு விடாமல் தேசமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. ஊர் திரும்பிய யாதவர் மீண்டும் அவரைப் பாடசாலைக்கு வரச் சொன்னார். அதனால் பாதகமில்லை என்று திருக்கச்சி நம்பியும் சொன்னதால் ராமானுஜர் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார்.

அந்தச் சமயத்தில்தான் திருவரங்கத்தில் இருந்த ஆளவந்தாரை இந்தத் தகவல் சென்று தொட்டது. அருளாளன் அன்புக்குப் பாத்திரமான ஒரு பிள்ளை யாதவரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறானா? வியப்பாக இருக்கிறதே. நான் அவனைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டார்.

ஆளவந்தார் திடகாத்திரமாக இருந்த காலம் அது. எனவே நினைத்த மாத்திரத்தில் கிளம்பியும் விட்டார். காஞ்சியில் ஆலவட்ட கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பியும் அவரது மாணவர்தாம். ஶ்ரீசைல பூர்ணரைத் திருப்பதிக்கு அனுப்பியது போலத்தான் நம்பியை அவர் காஞ்சியில் விட்டிருந்தார். எனவே ஆசார்யர் வருகிறார் என்றதும் நம்பி பரபரப்பாகிவிட்டார். கோயில் மரியாதைகளுடன் ஊர் எல்லைக்கே சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார்.

சன்னிதியில் சேவை ஆனதும் ஆளவந்தார் திருக்கச்சி நம்பியுடன் பொதுவாகச் சில விஷயங்கள் பேசியபடி வெளியே வந்தார். அப்போது அது நடந்தது.

யாதவப் பிரகாசர் கோயில் மண்டபத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். பின்னால் அவரது மாணவர்கள்.

‘நம்பி, அவர்தானே யாதவப் பிரகாசர்?’

‘ஆம். அவரேதான்.’

‘அவரது குழுவில் அதோ ஒரு பிள்ளை நெடுநெடுவென வளர்த்தியாக, சூரியனைக் கரைத்துச் செய்தாற்போன்ற பொலிவுடன் வருகிறானே, அவன் யார்?’

‘குருவே, அவர் பெயர் ராமானுஜன். யாதவரிடம் வாசிக்கும் அவர்தான் அருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யமும் செய்துகொண்டிருக்கிறார்.’

ஆளவந்தார் புன்னகை செய்தார்.

திருக்கச்சி நம்பி ராமானுஜரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவரிடம் எடுத்துச் சொன்னார். ‘சுவாமி சத்யம், ஞானம் அனைத்தும் பிரம்மத்தின் குணங்கள் என்று இவர் சொல்லப் போக, யாதவருக்கு இவரைப் பிடிக்காது போய்விட்டது. அன்று ஆரம்பித்து அவர்களிடையே அடுக்கடுக்காக எத்தனையோ பிரச்னைகள். காசிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடவே பார்த்திருக்கிறார் யாதவர். ஆனால் பேரருளாளன் காப்பு உள்ளது இவருக்கு.’

அந்தக் கணத்தில் ஆளவந்தார் முடிவு செய்தார். வைணவ குருபீடம் தனக்குப் பிறகு இவரைச் சேரவேண்டியது.

நம்பி ராமானுஜரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தத் தயாராகத்தான் இருந்தார். ஆனால் அது அவசியமில்லை என்று ஆளவந்தார் நினைத்தார். விறுவிறுவென்று மீண்டும் சன்னிதிக்குள் சென்றார். ஒரே ஒரு பிரார்த்தனை.

‘இவர் இருக்கவேண்டிய இடம் யாதவரின் குருகுலமல்ல. வைணவ உலகம் இவருக்காகக் காத்திருக்கிறது. மற்றபடி உன் சித்தம்.’

கண்மூடி ஒரு நிமிடம் நின்றவர், உடனே கிளம்பிப் போயேவிட்டார்.

(தொடரும்)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading