திருகுவலி (கதை)

நள்ளிரவு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இப்படிக் காலமில்லாக் காலத்தில் பொதுவாக சுந்தர பெருமாள்தான் அழைப்பான். சிறிது எரிச்சலுடன் எழுந்து சென்று கதவைத் திறந்தேன். அவன்தான்.

‘டேய், புத்தரின் இன்னொரு பல்லை நான் கண்டுபிடித்திருக்கிறேன்.’ என்று சொன்னான்.

கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘முதல் பல்லை எந்தக் கடையில் அடகு வைத்தாய்?’ என்று கேட்டேன்.

‘அது என்னிடம் இல்லை. இலங்கையில், கண்டியில் இருக்கிறது.’

‘ஓ. சரி.’

‘நீ வியப்படையவே இல்லை!’

‘எதற்கு?’

‘நான் புத்தரின் பல்லைத் தேடிக் கண்டடைந்திருக்கிறேன்.’

‘முன்பொரு சமயம் புலிப்பாணி சித்தரின் கமண்டலத்தை இப்படித்தான் கண்டுபிடித்தாய்.’

‘ஆமாம். என்னிடம் ராஜேந்திர சோழனின் முத்திரை மோதிரம்கூட இருக்கிறது. மூர்த்தி! அகழ்வாராய்ச்சி நிபுணர்களுக்கெல்லாம் கிடைக்காத பொருள்கள் எப்படி எனக்கு அகப்படுகின்றன என்றே புரியவில்லை.’

சுந்தர பெருமாள் என் நெடுநாள் நண்பன். திடீரென்று இப்படி ஆகிவிட்டான். கோபப்பட்டுப் பயனில்லை என்பதால், ‘சரி போய்ப் படுத்துத் தூங்கு. காலை டாக்டரைப் பார்க்கப் போகலாம்’ என்று சொன்னேன்.

‘நீ நம்பவில்லை அல்லவா? இப்போதே என்னுடன் வா. நான் அந்தப் பல்லைப் பதப்படுத்தி வைத்திருக்கிறேன். உனக்குக் காட்டுகிறேன்’ என்றான்.

எனக்கு இப்போது கோபம் அதிகரித்தது. ‘முட்டாள், எங்கோ யாரோ சண்டை போட்டிருக்கிறார்கள். அதில் ஒருவனின் பல் உடைந்து விழுந்திருக்கிறது. ஒரு ரவுடியின் பல்லை எடுத்து வைத்துக்கொண்டு நீ புத்தரின் பல் என்று உளறுகிறாய்.’

அவன் முகம் வாடிவிட்டது. ‘நீ என்னை நம்பவில்லை. நான் அதைக் கண்டெடுத்தபோது புத்தரே என் முன்னால் தோன்றி அது தன்னுடைய பல்தான் என்று சொன்னார்.’

‘அப்படியா? பாவம் புத்தர். அவருக்கு கால்ஷியம் டெஃபிஷியன்ஸி இருந்திருக்கிறது. போகிற வழியெல்லாம் ஒரு பல்லை உதிர்த்துக்கொண்டே போயிருக்கிறார்.’

‘கிண்டல் செய்யாதே. நீ நம்பாவிட்டாலும் நான் சொல்வது உண்மை. முதலில் எனக்கு ஒரு பொருள் கிடைக்கிறது. உடனே அதன் உரிமையாளர் என் முன்னால் தோன்றி அது தன்னுடையதுதான் என்று ஊர்ஜிதப்படுத்திவிட்டுப் போகிறார்.’

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் விளையாட்டுக்குக் கூட அவன் சொல்வதை நம்புவதாகக் காட்டிக்கொண்டுவிடக் கூடாது என்று நினைத்தேன். ‘இதோ பார். உனக்கு மனவியாதி. வேலை கிடைக்காத விரக்தியில் இப்படி ஆகிவிட்டாய் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல மருத்துவரால் உன்னை சரி செய்துவிட முடியும்’ என்று சொன்னேன்.

அவன் இரு வினாடிகள் என்னை உற்றுப் பார்த்தான். கண் கலங்கியிருந்தான்.

‘டேய் அழாதே. நான் உன் நண்பன். உனக்கு நல்லதுதான் செய்வேன்.’

அவன் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. ‘சரி, வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அதன்பின் நெடுநேரம் எனக்கு உறக்கம் இல்லாமல் போனது. சுந்தர பெருமாளின் பிரச்னையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். விடிந்து எழுந்து வாசல் கதவைத் திறந்து பேப்பர், பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு திரும்பியபோது ஒரு ஜோடி செருப்பு அங்கே கிடந்ததைக் கண்டேன். சுந்தர பெருமாள்தான் மறந்துவிட்டுப் போயிருக்கிறான் என்று உடனே தோன்றியது. எடுத்து உள்ளே வைத்துவிட்டு நகர்ந்தபோது, ‘மூர்த்தி நில்’ என்ற குரல் கேட்டது. எனக்குப் பழக்கமில்லாத கம்பீரமான குரல்.

‘யார்?’

இப்போது மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் என் எதிரே தோன்றினான். உருவிய வாளோடு ஒரு வெள்ளைக் குதிரையின்மீது அவன் அமர்ந்திருந்தான். அவன் காலில் செருப்பு இல்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி