ஐந்தரை அறிவு (கதை)

இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நான்கைந்து நாய்கள் ஓயாமல் ஓலமிட்டதை அவன் கேட்டான். நிறுத்தவேயில்லை. மணிக்கணக்கில் அவை அழுதுகொண்டே இருந்தன. இரவில் நாய் அழுதால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று ஊரில் பாட்டிக் கிழவி சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. நாய் அழும் சத்தம் கேட்காமல் உறங்கிவிட்டவர்கள் அசம்பாவித வளையத்துக்குள் வரமாட்டார்கள். யார் விழித்திருந்து கேட்கிறார்களோ, அவர்களில் யாருக்காவதுதான் கஷ்டம் வரும். அவர்களுக்கே வரலாம்; அல்லது அவர்களைச் சார்ந்தவர்களுக்கு வரலாம்.

இதே போலத்தான் அன்று காலை அவன் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது ஒரு மேல்நிலை நீர்த்தொட்டியின் விளிம்புச் சுவர் முழுவதும் காக்கைகள் கூடி அமர்ந்து கரைந்துகொண்டிருந்தன. ஏதாவது ஒரு காக்கை நீரில் விழுந்து உயிரிழந்திருக்கும் என்று நினைத்தான். நெடுநேரம் ஆகியும் அந்தக் காக்கைக் கூட்டம் இடத்தைவிட்டு நகராமல் அங்கேயே இருந்து கரைந்துகொண்டிருந்ததைக் கண்ட நகராட்சி ஊழியர்கள் மேலே ஏறிச் சென்று தண்ணீர்த் தொட்டியைப் பார்த்தார்கள். அப்படி எந்தக் காகமும் அங்கே விழுந்து இறந்திருக்கவில்லை என்று சொன்னார்கள். இதுவும் கவலையளித்தது. காரணமின்றிக் காக்கைகள் ஒன்று சேர்ந்து சத்தம் எழுப்புவது நல்லதல்ல என்று ஐந்தாம் வகுப்புத் தமிழாசிரியை சொன்னது நினைவுக்கு வந்தது. சிறிது அச்சமாக இருந்தது.

அடுத்தடுத்து எல்லாமே இப்படியாக நடக்கும் என்று யார் எதிர்பார்க்க முடியும்? வேலைக்குக் கிளம்பி, செருப்பு ஸ்டாண்டில் இருந்து செருப்பை எடுக்கக் குனிந்தபோது, சுவரின் மேலிருந்து சரியாக அவனது தலையின் இடப்புறம் ஒரு பல்லி விழுந்தது. பதறிக்கொண்டு நகர்ந்தான். தடுமாறி, கீழே விழவும் வேண்டியதானது. விழுந்தது பெரிய பாதிப்பில்லை. ஆனால் தலையின் இடப்புறம் பல்லி விழுந்தால் அதற்கு என்ன சூசகம்? குழப்பத்துடன் அலுவலகம் சென்றான். அவனது செக்‌ஷனில் வசிக்கும் புராதனமான மனிதரான சுந்தர்ராஜனிடம் விவரத்தைச் சொல்லி, இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டதும், ‘ஒரு நிமிஷம் இரு’ என்று சொல்லிவிட்டு அவர் தன் வீட்டுக்கு போன் செய்தார். அவர் மனைவியிடம் பஞ்சாங்கத்தை எடுத்து வந்து வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, ‘இன்சைட் பேக் ரேப்பர்ல ரெண்டாவது பேராவா இருக்கும். பல்லி விழும் பலன். அதுல தலைல விழுந்தா என்ன பலன் போட்டிருக்கு பார்’ என்று உத்தரவிட்டார். ‘வலப்பக்கம் விழுந்தால் கலகம், இடப்பக்கம் விழுந்தால் துன்பம்’ என்று அவரது மனைவி படித்துச் சொன்னார்.

அவன் கலங்கிப் போனான். ‘இதெல்லாம் சும்மா. நீ பயப்படாத’ என்று சுந்தர்ராஜன் சொன்னார். அது தனக்காகச் சொல்வதுதான் என்று அவனுக்குப் புரிந்தது. ஏதோ பெரிய அசம்பாவிதம் நேரப்போகிறது என்று தெரிந்துவிட்டது. இயற்கை இப்படித்தான் எதையும் சூசகமாகப் புரியவைக்கிறது. நாய்கள், பல்லிகள், காகங்கள். இன்னும் என்ன மிச்சம்? அவன் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஏழெட்டுப் பூனைகள் இருக்கின்றன. எங்கிருந்து வந்தவை என்று தெரியாது. ஆனால் வளாகம் முழுவதும் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். அவன் வெளியே கிளம்பும்போது பலமுறை அந்தப் பூனைகள் குறுக்கே வந்திருக்கின்றன. அப்படி நடக்கும்போதெல்லாம் போகிற காரியம் கெட்டுத்தான் போகும். பூனைகள் உலவும் வீட்டில் எதற்காகவும் வெளியே போகாதிருப்பது ஒன்றுதான் இப்பிரச்னையில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று நினைப்பான்.

மிகுந்த மனச்சோர்வுடன் மாலை அவன் வீடு திரும்பியபோது ஒரு பூனை அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. சலிப்பாக இருந்தது. ‘குறுக்கே ஓடப் போகிறாய். அதுதானே? நான் வீட்டுக்குப் போனதும் ஏதோ கெட்ட செய்தி வரப் போகிறது. அவ்வளவுதானே? சனியனே, நடந்துவிட்டுப் போகட்டும் போ’ என்று வெறுப்புடன் அதைப் பார்த்துச் சொன்னான். பூனை அவன் குறுக்கே ஓடி எங்கோ மறைந்தது. அவன் வீட்டுக்குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டான். குளித்துவிட்டுச் சிறிது நேரம் டிவி பார்த்தான். இரவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் டிவி பார்த்தான். பிறகு படுத்துத் தூங்கிவிட்டான்.

காலை கண் விழித்தபோது விடிந்திருந்தது. அவசரமாகக் குளித்து, சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்குக் கிளம்பி வெளியே வந்தான். தரைத் தளத்தில் அசோசியேஷன் முக்கியஸ்தர்கள் நான்கைந்து பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். சரிதான், நடந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு நெருங்கி, ‘என்ன ஆச்சு சார்?’ என்று கேட்டான்.

‘பூனைங்க நேத்து ராத்திரி ஏழெட்டு எலிகளைக் கொன்னிருக்கு சார். பாதி தின்னுட்டு பாதி தின்னாம அப்படியே போட்டுட்டுப் போயிருச்சிங்க. வாடை வரல?’ என்றார் செகரெட்டரி.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading