கருவி (கதை)

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது என்று பாவாடைச் சாமி திலோத்துமையம்மாளிடம் சொன்னார்.

‘நான் அத்தனெ நல்லவளான்னு தெரியலியே சாமி. இல்லனா புருசன் செத்த பத்தாநாளே புள்ள ஏன் சொல்லிக்காம போனான்னு தெரியாம கெடந்து தவிப்பனா?’ என்று அவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். பாவாடைச் சாமி மேலும் சில நல்ல வார்த்தைகளும் ஆறுதலும் சொல்லி, உயிர்த்தெழவிருக்கும் கர்த்தரின் கருணை நிழலில் அவளுக்கு நிச்சயம் இடமுண்டு என்றார்.

திலோத்தமையம்மாள் தனது நாற்பத்தொன்றாவது வயதில் கிறிஸ்துவைத் தனது இஷ்ட தெய்வமாக ஏற்றுக்கொண்டு தினமும் வேதாகமத்தைப் படிக்கத் தொடங்கினாள். மிக விரைவில் தன்னைக் கர்த்தரின் முதல்தர ஊழியக்காரியாக எண்ணி, காண்போரிடமெல்லாம் கர்த்தர் விரைவில் உயிர்த்தெழுந்து வருவார் என்றும் அவரது பாதையைப் பின் தொடர்வதேயல்லாமல் பிறவிப் பிணி தீர்க்க வேறு உபாயமில்லை என்றும் பிரசங்கம் செய்யத் தொடங்கினாள்.

தேகத்தில் தெம்பிருந்தவரை அவள் நான்கு வீடுகளில் கூட்டிப் பெருக்கிக் கொடுத்து, துணி துவைத்து, பாத்திரம் துலக்கி சம்பாத்தியம் செய்தாள். தன் உணவுச் செலவு போக மீதமாகும் பணத்தைக் கர்த்தரின் கைங்கரியங்களுக்குச் செலவிட்டுக்கொள்ளும்படியாகச் சொல்லிப் பாவாடைச் சாமியிடம் கொடுத்துவிடுவாள்.

வலுவிழந்து படுக்கையோடு ஆகிப் போன நாள்முதல் அவளுக்குச் சித்தம் கலங்கிப் போனது. ஒவ்வொரு நாளும் வீதியில் போகிறவர்களை இழுத்து நிறுத்தி, ‘பாவி மக்கா, இன்னிக்கி கர்த்தர் வந்திடுறேன்னு சொல்லியிருக்காருடா. இப்பங்கூடவா வராம இருப்பெ?’ என்று கேட்பாள். இது முதலில் விளையாட்டாகக் கருதப்பட்டு, பிறகு அவளது நம்பிக்கையின் தீவிரமே அவளை சித்தம் கலங்கச் செய்துவிட்டது என்று புரிந்தபோது ஊரார் அவளைப் பொருட்படுத்துவதை விடுத்தனர். ‘ஏய் கெழவி, போய்ப் படு பேசாம. இசக்கி சோறு கொண்டாந்து குடுத்தானில்ல? தின்னாச்சில்ல? அப்ப கட்டைய சாய்ச்சி உறங்கு’ என்று சலிப்புக் காட்டிப் போவார்கள்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி திலோத்தமையம்மாளுக்கு ஆவேசம் வரும். அன்று தேவாலய வளாகத்தில் நிகழும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பார்க்கிலும் அவளது ஆவேசமும் அருளார்ந்த சொற்களும் ஊர்ப் பிள்ளைகளுக்குச் சிறந்த களி நிகழ்வாக அமையும். ‘ஏ கெழவி, இன்னிக்கானா கர்த்தார் வராரா இல்லியான்னு கேட்டுச் சொல்லிடு. வீட்ல காட பிரியாணி சமைச்சி வெச்சி வீணாப் போகுது’ என்று அவளைச் சீண்டுவார்கள்.

‘ங்கொப்புறான வந்திடுவாரு ராசா. இன்னிக்கி கண்டிசனா வந்திடுவாரு. நீ வேணா பாரு.’ என்று அவளும் சளைக்காமல் ஈடுகொடுப்பாள். பாவாடைச் சாமிக்கே அவள் தனது பிரசார உத்தியைச் சிறிது மாற்றினால் தேவலாம் என்று தோன்றும். ஆனால் கிழவி யார் சொல்லியும் கேட்கும் நிலையைக் கடந்துவிட்டிருந்தாள்.

சென்ற கிறிஸ்துமஸின் போதும் அதே கூத்துதான். காலை தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனையில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பியவள், வாசலில் மாக்கோலம் இட்டு அதனைச் சிவப்புப் பட்டையால் அலங்கரித்தாள். எங்கிருந்தோ ஒரு மாலையை எடுத்து வந்து குடிசையின் வாயிற் கதவுக்குப் போட்டு கையில் ஒட்டியிருந்த செங்குழம்பினை அதன் நடுவே பொட்டாக வைத்தாள். பிறகு வழியில் போன டெய்சி ராணியை அழைத்து ஒரு கொத்து மாவிலை பறித்து வரச் சொன்னாள்.

‘ஐயே, இதுக்கு முத்திப் போச்சி பாரேன். ஏய் கிழவி, கர்த்தர் இந்துவாயிட்டாருன்னு ஒனக்கு ஆரு சொன்னா? நீ பண்ணுற வேலையெல்லாம் அப்பிடித்தான் இருக்கு.’

‘போடி போக்கத்தவளே. முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லு. என்னைய நக்கலெடுக்குற சோலியெல்லாம் வச்சிக்கிடாத’ என்று திட்டிவிட்டு அவளே சென்று எங்கிருந்தோ ஒரு கொத்து மாவிலை பறித்து வந்து வீட்டு வாசலில் சொருகினாள். ‘யய்யா எல்லாம் வாங்கய்யா. இப்பமே வந்திடுங்க. இன்னிக்கி கர்த்தர் கன்பர்மா வந்திடுறாரு’ என்று ஊரைக் கூட்டி அறிவித்தாள்.

‘எங்க கெழவி? நம்ம ஊருக்கா?’

‘அட ஆமாடா. இங்கனதான் வராரு. நான் கேட்டுட்டேன்.’

‘யாராண்ட?’

‘கிறுக்கா. அவரத் தவிர வேற நான் யார கேக்க?’

‘சுத்தம்’ என்று சொல்லிவிட்டு அவர்கள் நகர்ந்து போனார்கள். அன்றெல்லாம் திலோத்துமையம்மாள் பரபரப்பாகவே இருந்தாள். கர்த்தரே, கர்த்தரே என்று நொடிக்கொரு தோத்திரம் சொல்லிக்கொண்டிருந்தாள். இந்தக் கிழவிக்கு சீக்கிரம் ஒரு நல்ல கதி கிடைத்துவிடாதா என்று எல்லோருமே ஆதங்கப்பட்டார்கள்.

மறுநாள் விடியும் நேரம் கிழவி வீட்டுக்கு வெளியே வந்து நின்று உரத்த குரலில் சத்தமிட்டாள். ‘வந்திட்டாருய்யா.. என் ஏசப்பா வந்திட்டாரு.. ராசன் இறங்கி வந்திட்டாரு மக்களே.. எல்லாரும் வாங்கோ.. சீக்கிரம் வாங்கோ..’

வேலங்குச்சியுடன் வெளிக்கிருக்கப் போனவர்கள் சிலர் நின்று முறைத்தார்கள்.

‘நம்புடா.. அவுரு வந்திட்டாரு. வா, வந்து பாரு.’ என்று கையைப் பிடித்து இழுத்துப் போனாள்.

கிழவியின் குடிசை திறந்தேதான் இருந்தது. ஊர்க்காரர்கள் எரிச்சலும் அசுவாரசியமுமாக உள்ளே எட்டிப் பார்த்தார்கள். இரண்டு கால்கள் மட்டும் தெரிந்தன. யாரோ படுத்திருந்தார்கள்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading