ராம் 2 (கதை)

நாம் காதலிக்கலாம் என்று முதலில் சொன்னது அவள்தான். நம் காதலை முறித்துக் கொள்ளலாம் என்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு சொன்னதும் அவள்தான். முதலாவதை மகிழ்ச்சியுடனும் அடுத்ததை வேறு வழியில்லாமலும் அவன் ஏற்றுக்கொண்டான். மனித வாழ்வில் இரண்டு வருடங்கள் என்பது பெரிய கால அளவு இல்லைதான். ஆனாலும் அவனுக்கு அந்த இரண்டு வருடங்களும் நினைவுகூரும் போதெல்லாம் திருப்தி தரத் தக்கதாகவே இருந்தது.

காதலில் அர்த்தபூர்வமான உரையாடல்களுக்குப் பெரிய இடமில்லை. அது அவசியமும் இல்லை என்று அவன் கருதினான். அவளோடு இருப்பதும் பேசுவதும் சிரிப்பதும் அலைந்து திரிவதும் பிடித்திருந்தது. அவளுக்குப் பிடித்தவற்றை அவன் தெரிந்துகொண்டான். அவனைக் குறித்து அவளும் முழுவதுமாகக் கேட்டு அறிந்துகொண்டாள். அடுத்தக் கட்டமாகத் திருமணத்தைக் குறித்துப் பேச்செடுக்கலாம் என்று அவன் யோசிக்கத் தொடங்கியபோதே அவள் அதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னாள். எல்லா வீடுகளிலும் சாதி, அந்தஸ்து இரண்டில் ஒன்று பிரச்னையாக இருக்கும். அவளுக்குச் சற்று வேறு விதமான பிரச்னை வந்தது.

திடீரென்று மாரடைப்பு வந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவளது தந்தை, மரணப் படுக்கையில் இருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாகத் தனது தங்கையின் மகனை வரவழைத்து, அந்தக் கணமே தாலி கட்டச் சொல்லி, பார்த்து ஆசீர்வாதம் செய்துவிட்டுச் செத்துப் போய்விட்டார். எவ்வளவு நாள் அதிர்ச்சி அடைந்தபடியே இருக்க முடியும்? அவள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அத்தை மகனுடன் குடும்பம் நடத்தப் போனாள்.

பிறகு அவளுக்குக் குழந்தை பிறந்தது. அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை கிடைத்துப் போனான். நிறைய சம்பாதித்து அனுப்பி அவளைப் பணக்காரி ஆக்கினான். ஒரு தாயாகவும் பணக்காரியாகவும் ஆனபடியால் அவள் குண்டானவளாகவும் ஆகிவிட்டாள்.

ஓர் இடைவெளிக்குப் பிறகு அவன் சென்னைக்கு வந்தபோது வேளச்சேரி மாலில் அவளைப் பார்த்தான். தனது நான்கு வயது மகனுடன் அவள் ஷாப்பிங் வந்திருந்தாள். பார்த்ததும் சிறிது வியப்படைந்தாள். பிறகு சில வினாடிகள் வருத்தப்பட்டு, அதன் பின் சகஜமாகித் தன் மகனுக்கு அவனை அங்கிள் என்று அறிமுகப்படுத்தினாள். மகனின் சேட்டைகளைக் குறித்தும், இந்த வருடம் தன் கணவன் நாடு திரும்பிவிடுவான் என்றும் திருமங்கலத்தில் ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பதைப் பற்றியும் மூன்று மாதங்களில் கிரகப்பிரவேசம் இருக்கும் என்றும் சொன்னாள். அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.

பிறகு அவனைக் குறித்து விசாரித்தாள். வேலை, சம்பளம், வீடு, பெற்றோர், தங்கை அனைத்தைக் குறித்தும் அக்கறையுடன் கேட்டுவிட்டு, திருமணமாகிவிட்டதா என்று கேட்டாள்.

‘ஆயிடும். பொண்ணு ரெடியாத்தான் இருக்கா. என் டைவர்ஸ் கேஸ்தான் முடியாம இழுத்துக்கிட்டிருக்கு’ என்று சொன்னான்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி