வகுப்புகளில் அவளது மாஸ்கை அவன் நெடுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு வெண்புறாவின் சிறகைப் போலிருந்தது அது. காதுகளின் விளிம்பில் இழுத்துப் பொருத்தும்போது மற்ற அத்தனைப் பேருக்கும் காது மடல்கள் சிறிது வளையும். அவளுக்கு மட்டும் எப்படியோ அப்படி ஆவதில்லை. மற்றவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது மாஸ்கின் நடுவே சிறு ஈரப் படலம் உண்டாகும். பார்க்கக் கொடூரமாக இருக்கும். அவளுக்கு அது இல்லை. அவள் தனது குரலை மாஸ்கின் வெளிப்புறத்தில் இருந்தே பிறப்பித்தாள். புன்னகையும் அங்கேயே பிறந்தது. அவள் தனது மாஸ்கைத் தானே தைத்துக்கொள்கிறாள் என்று மற்ற மாணவிகள் பேசிக்கொண்டார்கள். அப்படித்தான் இருக்க முடியும். ஏனெனில், மாஸ்கின் ஓரப் பட்டைகளை அவள் அப்படியே மடித்து வைத்துத் தைப்பதில்லை. அரிசியில் ஓவியம் எழுதும் நேர்த்தியில் அவள் ஓரங்களை திட்டமிட்டு வடிவமைக்கிறாள். இது சாதாரண டெய்லர்களுக்கு சாத்தியமில்லை. ஒவ்வொரு மாஸ்கிலும் அவள் தனது ஆளுமையை எப்படியோ நிரப்பிவிடுகிறாள் என்று அவனுக்குத் தோன்றியது.
திடீரென்று வகுப்பில் வேறு சில மாணவர்களும் இதனைக் குறிப்பிட்டுப் பேசியது அவனுக்கு அதிர்ச்சியளித்தது. தன்னைத் தவிரவும் சிலர் அவளைப் பற்றி நினைப்பதை அவனால் பொறுக்க முடியவில்லை. தாமதிப்பது இறுதியில் துயரத்தைக் கொண்டு சேர்க்கலாம் என்று உள்ளுணர்வு அச்சுறுத்தியது. அன்றிரவே அவன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். எழுதியதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் செய்தான். திருப்தியாக வந்துவிட்டது போலத் தோன்றியதும், அதைப் பிரதி எடுத்து ஒரு அழகிய கவருக்குள் போட்டு ஓரங்களை ஒட்டினான்.
மறுநாள் கல்லூரிக்குச் சிறிது முன்னதாகவே சென்று அவளுக்காகக் காத்திருந்தான். சரியாக ஒன்பது இருபதுக்கு அவள் வந்தாள். அவன் தொலைவிலேயே அவளைப் பார்த்துவிட்டான். அன்றைக்கு அவள் வெளிர் மஞ்சள் நிறத்தில் மாஸ்க் அணிந்திருந்தாள். சில பூக்கள் மட்டுமே அந்த நிறத்தில் அழகாக இருக்கும். அதுவும்கூட அவளது மாஸ்குக்கு அடுத்தபடியாகத்தான் என்று அவனுக்குத் தோன்றியது. அவள் நெருங்கியபோது சட்டென்று எதிரே சென்று தனது கடிதத்தை நீட்டினான். அவளது மாஸ்க் எப்போதும் போலப் புன்னகை செய்தது. அவள் ஹலோ என்று சொன்னாள். அவன் பதற்றத்துடன் தன் கடிதத்தைக் கொடுத்தான்.
அவள் சற்று அதிர்ச்சியடைந்தாற்போலத் தெரிந்தது. ஆனால் பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை. சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு தன் புத்தகப் பையைத் திறந்து ஒரு தாளை எடுத்து வேகமாக ஏதோ எழுதி அவனிடம் நீட்டினாள். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிப் படித்தான்.
‘என்னால் நம்ப முடியவில்லை. நானும் உன் மாஸ்கை மிகவும் விரும்புகிறேன். எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டிருந்தேன்’ என்று எழுதியிருந்தாள்.