எனக்கும் அவர்கள் இருவருக்கும் ஒரே வயது. சரியாகச் சொல்வதென்றால் நாங்கள் ஒரே நாள், ஒரே சமயம், ஒரே மருத்துவமனையில் பிறந்தவர்கள். அவரவர் அம்மாமார்களுக்கு வேறு வேறு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தது தவிர எங்கள் பிறப்பில் நாள், கோள் வேறுபாடுகளே கிடையாது. தவிர, பிறந்தது முதல் நாங்கள் மூவரும் ஒரே வீதியில்தான் வசித்து வருகிறோம். படித்தது ஒரே பள்ளிக்கூடம். ஒரே கல்லூரி. எங்களுக்குள் சகோதரப் பாசமோ, நட்புணர்வோ, அல்லது வேறெந்த விதமான உணர்வோ, உறவோ எக்காலத்திலும் இருந்தது கிடையாது. நாங்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தோம். அவ்வளவுதான்.
இவ்வளவு ஒற்றுமைகள் இருக்கின்றன அல்லவா? ஆனால் இதற்கு பதில் சொல்லுங்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அந்த இரு பெண்களில் ஒருத்தி என்னைவிட ஒன்றரை வயது குறைந்தவளாகிவிடுவாள். இன்னொருத்தி சொல்லி வைத்தாற்போல அதே வருடம் அதே ஒன்றரை வயது கூடிப் போவாள். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அடுத்த வருடம் இந்த வேறுபாடு சமன் செய்யப்பட்டுவிடும் என்றாலும் ஒவ்வொரு ஐந்தாவது வருடத்திலும் இது தவறாமல் நடக்கிறது. அந்த வருடத்தில் மட்டும் அவர்களுள் ஒருத்தி முந்தைய ஆண்டுக்கு முந்தைய ஆண்டு தைத்த உடைகளை எடுத்து அணிந்துகொள்வாள். இன்னொருத்தி, அடுத்த ஆண்டு தனது எடையும் சுற்றளவும் என்னவாக இருக்கும் என்று ஊகித்து அல்லது கணக்கிட்டு அதற்கேற்பத் தைக்கச் சொல்லி அதை அணிந்துகொள்வாள். அதுதான் அவளுக்குச் சரியாக இருக்கும்.
பள்ளிக்கூட நாள்களில் இந்த வயதுக் குழப்பம் பெரும் பிரச்னையாக இருக்கும். ஐந்தாண்டுக்கொரு முறை வயது குறையும் பெண், அந்த வருடம் முந்தைய வகுப்பின் பாடங்களைப் படிப்பதா, அதற்கும் முந்தைய வகுப்பின் பாடங்களைப் படிப்பதா என்று தவித்துப் போய்விடுவாள். ஏனெனில் வயது தொடங்கும் மாதமும் கல்வியாண்டு தொடங்கும் மாதமும் எப்போதும் வேறு வேறாகவே இருக்கும். இதனால் பள்ளி முதல்வர் பெரும்பாடு பட்டு அவர்கள் இருவருக்கும் அந்த ஐந்தாவது ஆண்டைக் கடக்க ஓர் உபாயம் செய்தார். கல்வி ஆண்டின் முதல் பாதிக்கு முந்தையதற்கு முந்தைய ஆண்டின் பாடங்கள் நடக்கும். அடுத்தவளுக்கு அடுத்த ஆண்டுக்கு அடுத்ததின் பாடங்கள். அரையாண்டுத் தேர்வுகள் எழுதிய பின்பு ஒருத்திக்கு முந்தைய ஆண்டின் பாடங்களும் அடுத்தவளுக்கு அடுத்த ஆண்டின் பாடங்களும் நடக்கும். இதில் உச்சக்கட்ட நகைச்சுவை, இருவருமே படிப்பில் அத்தனை கெட்டிக்காரிகள் இல்லை என்பது. இதனால் இந்த ஏடாகூட ஏற்பாட்டில் படித்துக்கொண்டிருக்கும்போதும் சில பாடங்களில் அவர்கள் தோல்வியடைந்துவிடுவார்கள். அந்தப் பாடங்களை அடுத்த ஐந்தாவது ஆண்டில்தான் அவர்களால் எழுத முடியும்.
இந்தப் பிரச்னையால் ஒரே பள்ளிக்கூடம், ஒரே கல்லூரியில், ஒன்றாகப் படித்துக்கொண்டிருந்தாலும் நாங்கள் எப்போதும் வேறு வேறு பாடங்களையே படிக்க வேண்டியிருந்தது. அல்லது ஒருவர் கடந்து சென்ற பாடங்களை அடுத்தவர் தாமதமாகவோ அல்லது சிறிது முன்னதாகவோ படித்துக் கடக்கும்படியானது.
ஒருநாள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றரை வயது குறைபவளுக்கு ஐந்தாமாண்டுப் பிறந்த தினம் வந்தது. அவளது வீட்டில் அன்று கேக் வெட்டிக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தாள். பிறந்த நாள் விழாவுக்கு நான் நேர்த்தியாக ஒப்பனை செய்துகொண்டு, எனது ஆகச் சிறந்த உடையை அணிந்து சென்றேன். எனக்கும் அந்த இன்னொருத்திக்கும்கூட அன்றுதான் பிறந்த நாள் என்றாலும் என்னைக் காட்டிலும் ஒன்றரை வயதும் இன்னொருத்தியைக் காட்டிலும் மூன்று வயதும் குறையப் போகிறவளின் கொண்டாட்டத்தின் பொருட்டு நாங்கள் எங்களுடைய பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடாமல் எளிய வாழ்த்துப் பரிமாறல்களுடன் நிறுத்திக்கொண்டிருந்தோம்.
இதே போல அடுத்த வருடப் பிறந்த நாளின்போது எனக்காக அவர்கள் இருவரும் விட்டுக் கொடுப்பார்கள். அதற்கும் அடுத்த வருடம் இன்னொருவளுக்காக நானும் இவளும் விட்டுத் தருவோம். இது பேசி வைத்த ஒப்பந்தமல்ல. என்னவோ, சிறு வயதில் இருந்தே அப்படி இருந்து பழகிவிட்டோம்.
அன்றைக்கு அவளது பிறந்த நாளின்போது 27 1/2 என்று எழுதப்பட்ட கேக் அவள் வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. கேக்கை வெட்டி வாழ்த்துச் சொன்ன சூட்டில் அவளது தந்தை அவளுக்குத் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஏற்கெனவே அதெல்லாம் பேசி ஏற்பாடு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. நான் அதை எதிர்பார்க்கவில்லை. அதை அதிர்ச்சி என்று சொல்ல முடியாது. ஒரு விதமான ஏமாற்றம் என்று சொல்லலாமா என்றும் தெரியவில்லை. அவள் வாழ்க்கை. அவள் முடிவு. என் உணர்ச்சிக்கு அதில் எந்தளவு இடம் இருக்க முடியும்? நாங்கள் ஒரே நாளில் ஒன்றாகப் பிறந்தவர்கள் என்பது தவிர வேறெந்த விதத்திலும் சம்பந்தமில்லாதவர்கள். ஆம். ஒரே வீதியில் வசிப்பவர்கள் என்பது இன்னொரு தொடர்பு.
நான் அன்றைய தினம் 30 1/2வது பிறந்த நாளில் இருந்தவளிடம், ‘நீ இதனை எதிர்பார்த்தாயா?’ என்று கேட்டேன். இல்லை என்று அவள் சொன்னாள். ‘சிறிது அதிர்ச்சியாக இருக்கிறது’ என்றாள். ‘உனக்கு?’
‘சிறிது ஏமாற்றமாக. ஆனால் காரணம் தெரியவில்லை.’
‘நமக்கு ஒரே நாளில் ஒன்றேபோலத் திருமணம் நடக்கும் என்று நினைத்திருந்தேன்.’
‘ஆம். நானும் அதை நினைத்திருக்கிறேன்.’
‘அவள் தனக்குத் திருமண ஏற்பாடு நடப்பதைக் குறித்து நம்மிடம் சொல்லியிருக்கலாம்.’
‘ஆமாம். சொல்லியிருக்கலாம்.’
‘நாம் சற்று நெருங்கிய நண்பர்களாகியிருக்க வேண்டுமோ?’
‘இருந்திருக்கலாம்.’
‘சரி விடு. அவளுக்கு சந்தோஷமென்றால் நல்லதுதான்’ என்று அவள் முடித்துக்கொண்டாள்.
அன்று அவளது பிறந்த நாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விருந்தின்போது அவளே அனைவருக்கும் ஓடி ஓடிச் சென்று பரிமாறிக்கொண்டிருந்தாள். அவளது பிறந்த நாள் உடை, டிஸ்னி சானலில் தேவதைக் கதைகளில் வரும் கதாநாயகிகளின் உடையைப் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அவளுக்கு அது பொருத்தமாக இருந்தது. அவள் அன்று பேரழகியாகத் தோற்றமளித்தாள். எங்கள் இருவரிடமும் தனியே வந்து, ‘ஒழுங்காகச் சாப்பிடுங்கள். எதாவது வேண்டுமென்றால் கேட்டுச் சாப்பிடுங்கள்’ என்று சொன்னாள். நாங்கள் அவளது திருமணத்துக்கு வாழ்த்துச் சொன்னோம். அவள் சிறிது வெட்கப்பட்டு அதனை ஏற்றுக்கொண்டாள். ‘அவன் மிகவும் நல்லவன். எனக்குப் பொருத்தமானவன் என்று தோன்றியதால் ஒப்புக்கொண்டேன்.’
‘அப்படியா? எந்த விதத்தில் அவன் பொருந்திப் போனான்?’ என்று கேட்டேன்.
‘சொன்னால் நம்ப மாட்டாய். ஆறு வருடங்களாக அவன் முப்பத்து எட்டாவது வயதிலேயே இருக்கிறான். இன்னும் மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் அவன் முப்பத்து ஏழை அடைவான்’ என்றாள்.